உதயனுக்குள் புகுந்த மதபோதகர் உள்ளிட்ட 06 பேர் விளக்கமறியலில்




உதயன் பத்திரிக்கை நிறுவனத்தினுள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மத போதகர் உள்ளிட்ட ஆறு பேரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

அச்சுவேலிப் பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் சிறுவர்கள் , பெண்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்டவர்களை கொண்ட குழு ஒன்றுநேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டது.

கிறிஸ்தவ சபையின் போதகர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கி அச்சுறுத்தியமை தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

அது தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காகவே போதகர் தலைமையிலான குழுவினர் உதயன் தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர்.

உதயன் ஆசிரியர் பீடப் பணியாளர்களைச் சூழ்ந்து அச்சுறுத்தித் தாக்க முயன்றதுடன், உதயன் பணியகத்துக்குள் பணியில் இருந்தவர்களை காணொலி பதிவு செய்து அச்சுறுத்தியதுடன், அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், செய்தியை வழங்கியவர்களை இனங்காட்ட வேண்டும் என்று அச்சுறுத்தியது.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

அந்நிலையில் போதகர் உள்ளிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை முற்படுத்தப்பட்ட போது, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரைக் கைது செய்யும் நடவடிக்கைள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஏனையோரும் கைது செய்யப்பட்டு விரைவில் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments