பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்-நல்லது! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை என்ன விலை கொடுத்தாயினும் நீக்குவதற்கு முழு முயற்சியை எடுப்போம் என்றும், தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

‘இப்பொழுது இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது, முகநூல் ஊடாகவோ, ருவிட்டர் ஊடாகவோ, வட்ஸ் அப் ஊடாகவோ தகவலைப் பரிமாற முடியாத அளவுக்கு மிக மோசமான ஒரு சட்டமாகியுள்ளது.

குறிப்பாக சிங்கள இளைஞர்களையும் சிங்கள மக்களையும் பாதிக்கப்போகின்ற, சிங்கள இனத்தையே அடிமைப்படுத்தப்போகின்ற சட்டமாக புதிய சட்டம் கொண்டுவரப்படுகின்றது. உலகத்திலே யாரும் எதிர்பார்க்காத ஒரு சட்டத்தை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக கொண்டுவருவதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்கிறார்கள். அதனை நாங்கள் பூரணமாக எதிர்ப்போம். என்ன விலை கொடுத்தாவது அதனை நீக்குவதற்காக முழு முயற்சிகளையும் மேற்கொள்வோம்;’ எனவும் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து எவரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை முடக்குவதற்கு அன்று கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை விட புதிய சட்டம் குறித்து கவலையடையத் தேவையில்லை.

ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சட்டங்கள் அவசியமாகும். இதனை அமெரிக்கா உட்பட பல நாடுகள் கைகொண்டுள்ளன. ஆகவே நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் புதிய சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments