முன்னணிக்கு தனியிடம்!



அன்னை பூபதியின் 35வது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்படும் நிலையில், அன்னை பூபதி, உண்ணா நோன்பிருந்து உயிர்நீர்த்த மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று இடம்பெற்றிருந்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்னைபூபதியின் குடும்ப உறவுகள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்களை கொண்ட அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவின் முன்னெடுப்பில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றிருந்தது.

அத்துடன் அன்னை பூபதி உயிர்நீர்த்து 35வருடத்திற்கு பின்னர் அவருக்கு திதி வழங்கும் நிகழ்வு மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தக்கேணி அருகில் நடைபெற்றது.

அன்னை பூபதியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினரும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றிய உறுப்பினருமான முரசொலிமாறன் குருக்கள் தலைமையில் 

இதனிடையே அன்னை பூபதியின் நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.அன்னை பூபதியின் 35வது நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆரம்பித்த ஊர்திப் பவனி, வடக்கு கிழக்கு எங்கும் பயணித்து, மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தை இன்று வந்தடைந்தது.

ஊர்திப் பயணத்தை மேற்கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர், அன்னை பூபதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முற்பட்ட போது, அன்னை பூபதியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நினைவேந்தல் குழு ஏற்பாட்டாளர்கள் அனுமதி வழங்க மறுத்திருந்தனர்.

இதனால் நினைவிடத்திற்கு அருகே, அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியை தரித்து, அங்கே தமது அஞ்சலி நிகழ்வுகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மேற்கொண்டது.


No comments