மனங்கோணும் வகையில் எதனையும் செய்யாது?



வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோயில் விவகாரம், அடுத்தது என்ன என்ற கேள்வியோடு வருபவர்களுக்கு குருந்தூர் மலையில் நடந்து முடிந்த விடயங்களை அப்படியே எடுத்துக்கூறலாம். இரண்டு இடங்களிலும் பெளத்த விகாரைகளை நிறுவும் வேலைத்திட்டங்களில் துளியளவு வித்தியாசங்களும் இல்லை. எனவே குருந்தூர் மலை ஆதி ஐயனார் குருந்தி விகாரை ஆனது போல வெடுக்குநாரிமலை ஆதி சிவன் ஆலயமும் வட்டமான விகாரையாக அறியப்படும் நாளுக்கு அண்மித்திருக்கிறோம்  என கருத்து வெளியிட்டுள்ளார் கட்டுரையாளர் ஜெரா.

இதனை தடுக்க கூடிய சக்தி யாருக்கெல்லாம் இருந்தது? தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசில் அங்கம் வகி்க்கும் அரசியல்வாதிகள், தூதரகங்களோடும், இராஜதந்திர வட்டாரங்களோடும் தொடர்புடைய தரப்பினர், தொல்லியல்/வரலாறுசார் புலமையாளர்கள், சமயம்சார் அமைப்புகள் எனப் பலரிடம் சக்தியிருந்தது. 

தமிழ் தேசிய அரசியல்வாதிகளில் பலர் ஆலயத்தினர் அழைப்பு விடுத்த போராட்டத்திலேயே கலந்துகொள்ளவில்லை. கலந்துகொண்டவர்களும் இந்தப் பிரச்சினை விடயத்திலாவது ஓரணியில் நின்று, இதனை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு போகலாம், அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவெடுக்கத் தவறிவிட்டனர். தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இயங்குபவர்கள் இந்த விடயங்களில் தொடர்ந்தும் இதே கையறிநிலையை சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இனி மிச்சமிருக்கும் இடங்களை காப்பாற்றிக்கொள்ளவாவது ஆக்கபூர்வமான செயற்பாடுகள் குறித்து சிந்திக்க வேண்டும். 

ஆளும் கட்சியில் அங்கம் வகி்க்கும் அரசியல்வாதிகளால் எதுவும் செய்ய முடியாதென்பதை இதுபோன்ற பல விடயங்களில் பார்த்திருக்கின்றோம். வெடுக்க்குநாரி மலை ஆதி சிவன் ஆலய இடித்தழிப்பு விடயத்திலும் பார்த்தோம். அவர்களால் தரப்பட்ட நிகழ்ச்சிநிரலைத் தாண்டி ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது. 

தூதரகங்களோடும், இராஜதந்திர வட்டாரங்களோடும் தொடர்புடைய தரப்பினரின் நிலையும் கிட்டத்தட்ட இதேதான். நல்லிணக்கம், மத நல்லிணக்கம், இனப் பல்வகைமைக்கான மரியாதை, பல்லினப் பண்பாட்டுச் சூழலைக் கட்டியெழுப்பல் போன்ற சொற்களின் வழியே தான் இந்த விடயங்களைப் பார்ப்பார்கள். அறிக்கையிடுவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்ட தரப்பிடமிருந்து 100 வீதமான ஆதாரங்களைக் கோருவார்கள். தமிழர் தாயகப்பகுதிகளில் உள்ள மரபார்ந்த ஆலயங்கள் தொடர்பில் எந்த ஆவணங்களையும் - யாரும் பேணிப்பாதுகாக்கவில்லை. அதேபோல வன்னி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வழிபாட்டிடங்கள் யாழ்ப்பாணம், திரிகோணமலை போன்ற இடங்களில் இருப்பதைப் போன்ற ஆகம முறைப்படியான பிரம்மாண்ட கட்டட அமைப்பையும் கொண்டிருக்கவில்லை.எந்தப் பெரிய கோயிலாக இருந்தாலும் சூலம், முக்குறியிடப்பட்ட கல் போன்றன மரத்தின் அடியிலோ, புற்றின் அடியிலோ, ஓலையினால் வேயப்பட்ட கொட்டிலின் உள்ளேயோ வைக்கப்பட்டிருக்கும். வழிபாடு, கடவுள் தொடர்பான நம்பிக்கையைத்தவிர வேறெந்த ஆவணங்களும், பதிவுகளும் பின்பற்றப்படவில்லை.எல்லாவற்றுக்கும் மேலாக அடிக்கடி நிகழ்ந்த போர் இடப்பெயர்வுகளும் நிலையானதோர் ஆலயச் சூழல் உருவாவதற்குப் பெருந்தடையாக இருந்தது. எனவே தூதரகங்களோடும், இராஜதந்திர வட்டாரங்களோடும் தொடர்புடைய தரப்பினர் கோயில்காரர்களிடம் கோரும் கோயல்கள் தொடர்பான போருக்கு முன்பான கால ஆவணங்களைத் திரட்டுதல் சாத்தியமற்ற ஒன்று. 

நம் சூழலில் தொல்லியல்/வரலாறுசார் புலமையாளர்கள் தமக்கிருக்கிருக்கும் வரலாற்றுப் பொறுப்பை சரிவரக் கையாளவில்லை. பயத்துக்கும், பதவியைத் தக்கவைத்தலுக்குமிடையிலான போராட்டத்தில் வெளிப்படையாக சொல்லவேண்டிய / வாதிட வேண்டிய பல விடயங்களைப் புதைத்துவிட்டனர். மரபார்ந்த வழிபாட்டு சிதைப்பு விடயங்களில் கூட இத்தரப்பினர் தொல்லியல் திணைக்களத்துடனோ, துறைசார்ந்த அமைச்சுடனோ, துறைசார்ந்த சர்வதேச நிறுவனங்களுடனோ தமிழர் சார்பான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து உரையாடியிருக்க முடியும். தமிழ் தேசிய அரசியல் சூழலைப் போலவே தமிழ் புலமைத்துவ சூழலிலும் காணப்படும் ஒற்றுமையின்மை எதனையும் மனதுவந்து செய்ய வழிவிடவில்லை.

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு பாகங்களை முன்னிலைப்படுத்தி இயங்கும் 'இந்து' அமைப்புகள், சேனைகள், 'இந்து' சமயம்சார் செயற்பாட்டாளர்கள் செயற்பாட்டுத்தளத்திற்கு வருகின்றனர். அவர்களாலும் கூட குருந்தூர் மலை விடயத்திலோ, வெடுக்குநாரி மலை விடயத்திலோ பலமான ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை. பெளத்த மத ஆக்கிரமிப்புகள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. மாறாக கிறித்தவ, கிறிஸ்தவ சபைகளைக் கட்டுப்படுத்துவதிலேயே அதிக சிரத்தை எடுக்கின்றனர். பெளத்தம் இந்து மதத்தின் ஒரு பிரிவுதானே. அதனை ஏன் எதிர்க்கவேண்டும் என்கிற கேள்வியை பாதுகாப்பரணாய் வைத்திருக்கின்றனர். 

எல்லோரையும் விட வடக்கு கிழக்கு பகுதிகளை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் இந்தியாவினால்கூட இது விடயத்தில் தமிழர்கள் சார்பாக எதனையும் செய்யமுடியாது. இந்தியாவின் பண்பாட்டைப் பொறுத்தவரையில் பெளத்தமும் இந்துவும் ஒன்று. அத்தோடு இந்தியாவில் தோன்றிய பெளத்த அரச மதமாக இருக்கும் நாடுகளில் இலங்கை முதன்மையானது. அதாவது இந்தியாவில் அருகிவிட்ட இந்திய கலாசார கூறுகளில் ஒன்று இலங்கையில் செழிப்போடு இருக்கிறது. எனவே அது மேலும் செழிக்கவும், வளரவுமே இந்தியா உதவும். இந்தியாவின் அரசியல் நலன்களின் அடிப்படையில்கூட பெளத்தம் அரசொன்றின் மதம். ஓர் அரசு இன்னோர் அரசுடன்தான் பரஸ்பர உறவுகளைப் பேணும். யார் என்ன முறையிட்டாலும் இலங்கை அரசு மனங்கோணும் வகையில் எதனையும் செய்யாது. அதனையெல்லாம் மீறி அரசற்ற தரப்பாகிய தமிழர் சொல்வதை, தமிழர் கோருவதை இந்தியா செய்ய வேண்டுமெனில், தமிழர் தரப்பிலிருந்து கையாள்வதற்கு ஏதாவதொரு துருப்பு வேண்டும். அதனைப் பேசவல்ல தரப்பு வேண்டும். இந்தியா தரும் சின்ன சின்ன நலன்களுக்காக அணிதிரண்டு நிற்கும் தமிழினத்திடமிருந்து அத்தகைய பேரம்பேசல்களையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. 

இதனையெல்லாம் கடந்து இலங்கைத் தீவில் சுயாதீனமாக இயங்குபவர்களாலும் ஓர் எல்லையை மீறி எதனையும் செய்யமுடியாது. பெளத்த மதத்தினர்  மனம் நோகும்படியாக நடந்துகொண்டார்கள், மதங்களுக்கிடையில் பிளவு ஏற்படுத்தினார்கள் என ஏதாவதொரு குற்றத்தில் உள்ளே வைக்கலாம்.

ஆகவே மேற்கண்ட தரப்புகள் தமக்கிருக்கும் பொறுப்புணர்ந்து ஆக்கபூர்வமான செயற்பாட்டுத்தளத்திற்கு வரும்வரைக்கும், கல்லில் மலம் கழித்த பூனையின் நிலைதான் நம்முடையது என கருத்து வெளியிட்டுள்ளார் கட்டுரையாளர் ஜெரா.

No comments