வேலிக்கு ஓணான் சாட்சி: யாழ்.ஆயர் இல்லம்!



கச்சதீவிற்கு சுயாதீனமாக வெளியார் எவரும் பயணித்து புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் உறுதிப்படுத்த இலங்கை கடற்படை இதுவரை அனுமதித்திருக்கவில்லை.

முன்னதாக கச்சதீவில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக இலங்கை கடற்படையினை மேற்கோள்காட்டி யாழ்.ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள கச்சதீவில் இலங்கை கடற்படை பெருமெடுப்பில் நிறுவிவரும் புத்தர் சிலை இலங்கை இந்திய உறவினில் பாதிப்புக்களை ஏற்பட்டிருந்தது.

இலங்கை அரசிற்கு எதிராக இந்தியாவிலிருந்து பலத்த எதிர்ப்புக்களும் எழுந்திருந்தன.

இந்நிலையில் புத்தசிலையை கச்சதீவிலிருந்து அகற்றியமை தொடர்பில் கடற்படையின் உயர் அதிகாரிகள் ஆயர் இல்லத்துக்கு அறிவித்துள்ளார்கள். அங்கு அமைக்கபட்டிருந்த புத்தர் சிலை அகற்றப்பட்டு கச்சதீவுக்கு வெளியே கொண்டுசெல்லப்பட்டுவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள் என ஆயர் இல்லத்திலிருந்து யாழ்.மாவட்ட செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவில் புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளதாகவும் அவ்விடயத்தில் தாங்கள் கவனமெடுத்து கச்சதீனின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட ஆவன செய்யுமாறும் கேட்டு நாம் கடிதமூலம் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கமைய தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகவும் ஒத்துழைப்புக்காகவும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் எனவும் ஆயர் இல்லத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடயத்தை அமைதியான முறையில் தீர்த்துவைக்க ஒத்துழைத்த கடற்படை உயர் அதிகாரிகளுக்கும் மற்றும் கச்சதீவின் பாரம்பரியமும் தனித்துவமும் பேணப்பட குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளை ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதிநிதிகள் குழுவொன்று கச்சதீவு சென்று உண்மையை கண்டறிய அனுமதிக்கவேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது.


No comments