நல்லாட்சி தந்த புத்தருக்கு கலசம்!38வருடங்கள் கடந்தும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப்பகுதிகளை பௌத்தமயமாக்குவதில் இலங்கை அரசு மும்முரம் காண்பித்துவருகின்றது.

இந்நிலையில் உயர்பாதுகாப்பு வலயத்தில்  மற்றுமொரு புத்தர் விஹாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு  இன்று (27) காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அவ்;வாறு தையிட்டில் அமைக்கப்பட்டுள்ள விஹாரை யாழிலேயே அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விஹாரை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் அண்மையில் ஒரு விஹாரை அமைக்கப்பட்டு அதற்கு கலசம் வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

இன்னொருபுறம் கச்சதீவில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை அகற்றி விட்டதாக இலங்கை கடற்படை   யாழ். ஆயர் இல்லத்திற்கு அறிவித்திருந்தது.

ஆகவே, கச்சதீவிலிருந்து அகற்றப்பட்ட புத்தர் சிலை   யாழில் பிரதிஷ்டை செய்யப்படலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தமிழ் மக்களின் காணிகள் வலி வடக்கில் முற்று முழுதாக விடுவிக்கப்படாத நிலையில்  தையிட்டிப் பகுதியிலும் நரசிம்ம வைரவர் கோயிலை விஹாரையாக மாற்றி, பாரியளவிலான கட்டடம் அமைத்து அதற்கு இன்று கலசம் வைக்கும் நிகழ்வும்  முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments