2025 வரை ஒன்றுமேயில்லை!



இலங்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுவரை ஒத்திவைக்கப்படலாமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டாவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளன.

நாட்டின் தேர்தல் சட்டம், அரசியலமைப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு ஆகிய எதனையும் கருத்திற்கொள்ளாது அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இருப்பதறகான நடவடிக்கையை மேற்கொண்டு செல்வதையே காணக்கூடியதாக இருக்கிறது என்றும் அவை தெரிவித்துள்ளன.

இதனிடையே உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான அச்சுப் பணிகளை முற்றாக நிறுத்துவதற்கு அரசாங்க அச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திறைசேரியில் இருந்து போதிய நிதி கிடைக்காத காரணத்தினால் தேர்தல் தொடர்பான ஏனைய அச்சடிப்பு நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் அரசாங்க அச்சகத்தினால் அச்சிடப்பட்டுள்ளன.

அச்சிடல் நடவடிக்கைகளுக்காக ஐந்து கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும், திறைசேரியினால் அதற்கான பணம் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.


No comments