றொகான் ரத்வத்தை கொல்லப்போவதாக மிரட்டிய கைதியும் விடுதலை!
இலங்கை அமைச்சர் றொகான் ரத்வத்தையினால் துப்பாக்கிமுனையில் சிறையில் வைத்து கொலை அச்சுறுத்தலிற்குள்ளான அரசியல் கைதி சுலக்சன் விடுதலையாகியுள்ளார்.
சரணடைந்திருந்த தனது உறவினரான இராணுவத்தினரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டியே றொகான் ரத்வத்தை சுலக்சனை தேடி மதுபோதையில் சிறை சென்றிருந்தார்.
கடந்த 14 வருடங்களாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்றைய தினம் திங்கட்கிழமை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் பின்னராக மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்த இ.திருவருள் (வயது 45), கரவெட்டியை சேர்ந்த ம. சுலக்சன் (வயது 34), முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் (வயது 33) ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்திருந்தது.இந்நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூப்பிக்கப்படாத நிலையில், மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் விடுதலை செய்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக சதித் திட்டம் தீட்டிய குற்றம் அவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் ஏற்கனவே வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்மானித்தது.
அதனைத் தொடர்ந்து சுயாதீன சாட்சிகள் எதிராக முன்வைக்கப்பட்டன. சாட்சியங்கள் அவர்களது குற்றத்தை நிரூப்பதற்கு நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூப்பிக்கப்படவில்லை. அதன் காரணமான அனைத்து குற்றங்களிலும் இருந்து இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.
விடுதலை செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றம் முன்பாக வருகை தந்திருந்த தமது குடும்பத்தினருடன் கட்டியணைந்து தமது மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் வெளிப்படுத்தியதுடன் தமது விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தனர்.
Post a Comment