போராட்டம் வெற்றி:காங்கிரஸ் சிந்திக்கவேண்டுமாம்

 


வடகிழக்கில் தமிழ் தேசியக்கட்சிகள் விடுத்து கடையடைப்பு போராட்டத்தினால் தமிழர் தாயகம் முற்றாக முடங்கிபோயிருந்தது.

பொதுசந்தைகள் மூடப்பட்டதுடன் வர்த்தக நிலையங்களும் இழுத்து மூடப்பட்டிருந்தது.பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

சர்வதேச நாணய நிதியம் போன்ற இலங்கைக்கு உதவி வழங்கும் தரப்பினருக்கும், போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென்பதுடன், ஆட்சியாளர்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தியில் உள்ளனர் என்ற செய்தி தெளிவாக சொல்லப்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இன்றைய கதவடைப்பின் மூலம் மக்கள் வெளிப்படுத்தியுள்ள செய்தியை புரிந்து கொண்டு, தமிழ் காங்கிரஸ் தன்னை சுயபரிசோதனை செய்து, அரசியல் வழிமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்  என தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தை சேர்ந்த கஜதீபன் அழைப்புவிடுத்துள்ளார்.

இன்றைய கதவடைப்பு போராட்டத்துக்கு 7 கட்சிகளின் தலைவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர். அவர்கள் அழைப்பு விடுத்ததே தவிர, இந்த போராட்டத்தை வெற்றியடைய செய்தது தமிழ் தேசிய உணர்வுள்ள பொதுஅமைப்புக்களும், சங்கங்களும், மக்களுமே.

தமிழ் தேசிய உணர்விலேயே தொடர்ந்தும் பயணிக்கிறோம் என்பதை மக்கள் இன்று மீண்டும் சர்வதேச சமூகத்துக்கும், தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கும், வடக்கு கிழக்கிலுள்ள அரச முகவர்களுக்கும் தெளிவாக புரிய வைத்துள்ளனர்.

இன்றைய போராட்டத்தினாலும், பலர் ஏதோவொரு அசௌகரியப்பட்டிருக்கக்கூடும். என்றாலும், தேசியத்தின் பெயராலும், இனவிடிவின் பெயராலும், இன ஒற்றுமையின் பெயராலும் அதை தாங்கிக் கொள்ளும் சக்தியுடன்தான் அவர்கள் இன்னுமிருக்கிறார்கள் என்பதை புரிய வைத்துள்ளனர் எனவும் கஜதீபன் தெரிவித்துள்ளார்.


No comments