பூநகரிலும் புத்தர் நிற்கிறார்!



வன்னியில் பூநகரி, மாங்குளம், பரந்தன், உருத்திரபுரம் பகுதிகளில் அரச மரங்கள் நடப்பட்டு சமநேரத்தில் புத்தர் சிலைகளை வைக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர் தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் தற்போது அதிகளவான புத்த சிலைகள் வைக்கப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் வடக்கு - கிழக்கு முழுவதும் இடம்பெறுகின்றன.அதேநேரம் கச்சதீவிலும் புத்த விகாரை கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. வலி. வடக்கில் உள்ள பல ஆலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. 

பலாலி மற்றும் மயிலிட்டி போன்ற இடங்களில் தேவாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் இனப்பிரச்னையை திசைதிருப்பும் வகையிலும் - குறுகிய அரசியல் நோக்கங்களுக்காவும் இவ்வாறு சில மத நிறுவனங்களை உருவாக்கி அரசியல் இலாபம் தேடப்படுகிறது என்றும் சிவஞானம் சிறீதரன்; குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கையின் முப்படைகளும் நிலைகொண்டுள்ள வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் படைமுகாம்கள் தோறும் புத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments