இருபாலையில் மீட்கப்பட்ட சிறுவர்களுக்கு மாத்திரைகள் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் நடத்தப்பட்டு வந்த சட்டவிரோத சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமைக்கான காயங்கள் காணப்படுவதாகவும் , அவர்களுக்கு விட்டமின் சி மற்றும் டி மாத்திரைகள் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

அதேவேளை சிறுவர்களை கட்டாய மதமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

இருபாலை பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் சிறுவர் இல்லம் ஒன்று நடாத்தப்பட்டு வருவதாக கோப்பாய் சிறுவர் நன்னடத்தை அலுவலகருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்  கோப்பாய் பொலிசாரின் உதவியுடன் குறித்த சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டது. 

அங்கிருந்த சிறுமிகள் உள்ளிட்ட 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சிறுவர்கள் துன்புறுத்தப்பட்டமை , போசாக்கான உணவுகள் வழங்கப்படாமை , விட்டமின் மாத்திரைகள் கட்டாயப்படுத்தி வழங்கப்பட்டமை , நாய்களை பராமரிக்க நிர்பந்திக்கப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்கள் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சிறுவர்களை சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி அறிக்கை பெற்று நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments