பருத்தித்துறையில் கடற்தொழிலாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!


ஒரு வாரத்திற்குள் தீர்வு என்ற பொலிஸாரின் வாக்குறுதிக்கமைய வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சங்கங்கங்களின் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சுருக்கு வலை உள்ளிட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துமாறு கோரி வடமராட்சி வடக்கின் 14  கடற்றொழிலாளர் சங்கங்களால் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதேச செயலகம், பருத்தித்துறை வீதியை  முற்றுகையிட்டு இன்றையதினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

போராட்டம் காரணம் பருத்தித்துறை பிரதேச செயலக செயற்பாடுகள், பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

பிரதேச செயலர் மற்றும் பொலிஸார் போராட்டகாரர்களுடன் சமரசப் பேச்சில் ஈடுபட்டநிலையில், கடற்படையினருடன் கலந்துரையாடி ஒரு வாரத்திற்குள் சுருக்கு வலை உள்ளிட்ட சட்ட விரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் வாக்குறுதியளித்தனர். 

இந்நிலையில் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன் ஜனாதிபதிக்கான மகஜரொன்று போராட்டகாரர்களால் பிரதேச செயலருக்கு வழங்கிவைக்கப்பட்டது. 

கடற்றொழில் அமைச்சர் தமது பிரச்சினை தொடர்பாக கரிசனையுடன் செயல்படுவதில்லை என போராட்டகாரர்கள் குற்றஞ்சாட்டினார்.

போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட நிலையில் பிரதேச செயலக செயற்பாடுகள் பருத்தித்துறை வீதியூடான போக்குவரத்து என்பன இயல்பு நிலைக்கு திரும்பியது. 

இதற்குத் தீர்வு கிடைக்கவில்லையெனின் மாகாணம் தழுவிய போராட்டத்தை மேற்க்கொள்வோம் என கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், கடற்படை, பொலிஸார் இணைந்த கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அதன் போது கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு பிரச்சினைகளை பேசித் தீர்க்கவும் வலியுறுத்ப்பட்டது.

No comments