தேர்தல் அறிவிப்பது ஆணையாளர்! வாக்குப் பெட்டிகள் ரணில்வசம்!பனங்காட்டான்


அடுத்த மாதம் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் என்ற நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஈடுபட்டு வருகிறார். அதனை தடுத்து நிறுத்தும் மும்முனைச் செயற்பாடுகளில் ஜனநாயக சோசலிஸ அரச இயந்திரம் இயங்குகிறது. வாக்களிப்புப் பெட்டிகள் ரணிலிடம் இருக்கும்வரை தேர்தல் ஆணையாளரால் என்ன செய்ய முடியும்?

மார்ச் மாதம் 9ம் திகதி தேர்தல் நடைபெறுமென ஆணைக்குழுவின் தலைவரால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் காணாமல் போய்விட்டது. 

நடக்கும் ஆனால் நடக்காது - இல்லையில்லை, நடக்காது ஆனால் நடக்கும் என்ற பாணியில் பேசப்பட்டு வந்த இந்தத் தேர்தல், ஏப்ரல் 25ம் திகதி நடைபெறுமென சிறப்பு வர்த்தமானி ஊடாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வாக்குச் சீட்டுகளை அரசாங்க அச்சகம் அடித்துக் கொடுக்குமாம். அதற்கான பாதுகாப்பு வழங்கப்படுமென காவற்துறை மேலிடம் கூறியுள்ளதாம். தேர்தல் பணிக்கென எரிபொருளை வழங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு உறுதி அளித்துள்ளதாம். 

இப்படியெல்லாம் அரசாங்கமோ அல்லது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியோ கூறவில்லை. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரான நிமால் புஞ்சிஹேவதான் அறிவித்துள்ளார். தேர்தல் குழுவுக்கு புதிய தலைவர்களையும் உறுப்பினர்களையும் அரசியலமைப்புச் சபை நியமித்து, அவர்கள் பதவி ஏற்பதற்கு முன்னர், முடிந்தளவுக்கு ஆட்சித்தரப்புக்கு தலையிடியைக் கொடுப்பது என்ற முடிவுடன் இவர் செயற்படுவதாக கூறப்படுகிறது. அதேசமயம், அரசாங்கம் தேர்தலை பின்போடுவதற்குச் சாதகமாக இவரது நடவடிக்கைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் சந்தேகம் தெரிவிக்கின்றன. 

கடந்த 3ம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பொன்று, உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு கதவுகளைத் திறந்துவிட்டதாகவும், இதனால் ரணிலின் அரசு இக்கட்டுக்குள் சிக்கியுள்ளதாகவும்கூட சில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அரசியலமைப்புக்கு உட்பட்டதாக சட்டங்களை இயற்றுவது நாடாளுமன்றம். இதனால் இதனை சட்டசபை என்றும் அழைப்பர். இந்தச் சட்டங்களை நீதி பிறழாது செயற்பட அனுமதிப்பது நீதிமன்றங்களின் தலையாய பணி. அப்படியென்றால் நீதிமன்றத் தீர்ப்பு நாடாளுமன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாது என்ற கருத்தியல் அடிப்படையில், நிறைவேற்று அதிகாரங்கள் பயன்படுத்தப்படுகிறது என்பது நன்றாகத் தெரிகிறது. 

2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இத்தேர்தலுக்கென ஒதுக்கப்பட்ட நிதியை அதற்குச் செலவிடுவதை தடுக்கக்கூடாதென்பதுதான் கடந்த 3ம் திகதிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு. 

அதாவது, அந்த நிதியை தேர்தலுக்கு வழங்க வேண்டுமென்பது இதன் அர்த்தம். வரவு செலவுத் திட்டத்தில் இதற்கென நிதி ஒதுக்கப்பட்டது உண்மை. உத்தேச மதிப்பீடுகளின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் வரையப்படும். ஒதுக்கப்படும் நிதிக்குரிய பணத்தை கட்டுக்கட்டாக ஒரு பெட்டிக்குள் போட்டு அதன்மேல் பெயர் ஒட்டி (வணிக நிறுவனங்கள் போன்று) வைக்கப்பட்டுள்ளது என்று இதற்கு அர்த்தப்படாது. 

இதற்கு நல்லதொரு உதாரணத்தைக் கூறலாம். 1965 - 1970 வரை டட்லி சேனநாயக்க தலைமையிலான தேசிய அரசு ஆட்சியில் இருந்தது. தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக எம்.திருச்செல்வம் உள்;ராட்சி அமைச்சராகவும், தமிழ் காங்கிரஸின் பிரதிநிதியான உடுப்பிட்டி நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவசிதம்பரம் உபசபாநாயகராகவும் இந்த அரசில் இருந்தனர். 

தமிழருக்கான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்காக தேசிய அரசின் ஐந்து வரவு செலவுத் திட்டத்திலும் நிதி ஒதுக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி திருமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் கேட்டது. தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் இந்து பல்கலைக்கழகம் கேட்டது. இரு தரப்பினரும் இணைந்து வந்தால் (இது நடைபெறாது என்பது தெரிந்து கொண்டு) ஒரு பல்கலைக்கழகம் தருவேன் எனக் கூறி வந்த டட்லி, தமிழ் தலைகளின் ஒற்றுமை இன்மையால் பல்கலைக்கழகத்தை 'கோவிந்தா' ஆக்கிவிட்டார். 

தமிழருக்கான பல்கலைக்கழகத்துக்கு  என ஒதுக்கப்பட்ட நிதி என்னாச்சு என்று எவரும் கேட்க முடியாது. இதனை இங்கு சுட்டிக்காட்டுவதற்கான காரணம் வரவு செலவுத் திட்டம் என்பது உத்தேச செலவினத்துக்கான ஒரு வரைபு என்பதற்காகவே. இது உயர் நீதிமன்றத்துக்கு தெரியாததல்ல. அதனால்தான் உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை உடன் வழங்குமாறோ அல்லது குறிப்பிட்ட காலவரையறைக்குள் விடுவிக்கப்பட வேண்டுமென்றோ உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிடவில்லை. 

உயர் நீதிமன்ற தீர்ப்பு வெளியான அடுத்தடுத்த நாட்களில், இந்த வருடத்தில் எந்தத் தேர்தலும் நடைபெறாது என்று ரணில் பகிரங்கமாகக் கூறியதிலிருந்து அவரது நிலைப்பாட்டை புரிந்து கொள்ளலாம். இவரது அறிவிப்பை நீதிமன்ற அவமதிப்பாக கருத இடமில்லை என்பது சட்ட அறிஞர்களின் வாதம். எடுத்ததற்கெல்லாம் நீதிமன்ற படியேறும் தமிழரசின் பேச்சாளர் சுமந்திரன் இவ்விடயத்தில் அமைதி காப்பதிலிருந்து இதனை அறிந்து கொள்ள இடமுண்டு. 

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தம்பாட்டில் தேர்தல் திகதியை அறிவிக்கிறார். இது தொடர்பான திணைக்களங்களின் அதிகாரிகளை கூட்டத்துக்கு அழைக்கிறார். மாவட்ட அத்தாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவுகள் வழங்குகிறார். தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தி விடுப்புப் பெற்ற அரசாங்க ஊழியர்களுக்கு இடைக்காலத்துக்கு அடிப்படைச் சம்பளத்தை வழங்கலாமென ஆலோசனை வழங்குகிறார். 

ஆனால், இந்த நடவடிக்கைகள் எதுவுமே தமது முடிவை மாற்றாது என்ற தோரணையில் ரணில் ஓரங்க நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். இதன் அடிப்படையில் மூன்று விடயங்கள் வெவ்வேறு மட்டங்களில் ஒன்றுடனொன்று சம்பந்தப்படாதது போன்று மேற்கொள்ளப்படுவதை இங்கு சுட்ட முடியும். இவை மூன்றுமே தேர்தலை இப்போதைக்கு எவரும் எண்ணிப் பார்க்கக்கூடாதென்பதை தெட்டத்தெளிவாக தெரியவைப்பவை. 

1. மகிந்த தேசப்பிரிய தலைமையில் இயங்கும் தேர்தல் எல்லை நிர்ணயக்குழு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு இந்த மாதம் 31ம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதுமுள்ள உள்;ராட்சிச் சபைகளின் 8,200 உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4,850 ஆகக்குறைக்க இடைக்கால அறிக்கையை இக்குழு தயாரித்துள்ளது. ரணில் பல தடவை தெரிவித்த அவரது விருப்பத்தின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கையின் அடிப்படையிலேயே தேர்தல் நடைபெறுமாயின் வேட்பு மனுக்கள் புதிதாக கோரப்பட வேண்டும். தேர்தல் வட்டார எல்லைகளும் மாற்றியமைக்கப்படும். இதற்கு ஆகக்குறைந்தது ஒரு வருடமாவது தேவைப்படும். 

2. இனி நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலுக்கான திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் இளையோருக்கு இருபத்தைந்து வீதம் ஒதுக்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உபசபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான சட்ட நிலையியற் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆலோசனை சட்ட மாஅதிபர் அலுவலகத்துக்கு கையளிக்கப்பட்டுள்ளது. சட்ட வரைஞர் திணைக்களம் இந்த ஆலோசனையை உள்வாங்கி 126ம் இலக்க சட்டத்தயாரிப்பில் இதனை உள்ளடக்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களென 16 பேர் ஒப்புதல் வழங்கியுள்ளனர். 

3. அதிமுக்கியமான ஓர் அம்சமாக, தேர்தல் தொடர்பாக மார்ச் 3ம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவுக்கு உட்படுத்தி  இடைநிறுத்த சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இந்த முன்மொழிவை அரசாங்கத்தின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். சிறப்புரிமையை பயன்படுத்தி நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கை இதுவென எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. 

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள உரிமையின் அடிப்படையிலேயே சிறப்புரிமை பயன்படுத்தப்படுவதாக குறிப்பிட்ட செஹான் சேமசிங்க, இவ்விடயத்துக்கு உபசபாநாயகர் உத்தரவிட வேண்டுமெனவும் வேண்டினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கிருக்கும் சிறப்புரிமையை இன்னொரு உறுப்பினர் கேள்விக்குட்படுத்த முடியாது என்று பதிலளித்த உபசபாநாயகர், இவ்விடயம் சிறப்புரிமைக் குழுவுக்கு சமரப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி முடிவு கட்டினார். இனி, சிறப்புரிமைக் குழுவின் முடிவு எவ்வாறு அமையுமென்பதை சொல்ல வேண்டியதில்லை. 

ஆக, ஒன்றுமட்டும் வெட்டவெளியில் நன்றாகத் தெரிகிறது. எந்தக் காரணம் கொண்டும் உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலை இப்போதைக்கு ரணில் அரசு நடத்த மாட்டாது. யார் எப்படித்தான் தலையால் மண் கிண்டினாலும், இத்தேர்தல் இப்போதைக்கு இடம்பெறாது என்றே சொல்லலாம். சிலவேளை ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கைகூடலாம். 

80,720 வேட்பாளர்கள் இத்தேர்தல் நடைபெறுமெனச் செலுத்திய பதினெட்டுக் கோடி நானூற்றி அறுபது லட்சம் ரூபா இப்போதைக்கு அரச கல்லாப்பெட்டிக்கு சுவீப் பணமாகச் சேரும். 

தேர்தலுக்கான திகதியை நிர்ணயிப்பது, வர்த்தமானியில் அறிவிப்பது, வாக்குச்சீட்டுகளை தயாரிப்பது தேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் வேலை. ஆனால், தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் ரணிலிடம்தான் உள்ளன. கடந்த வாரம் எழுப்பிய அதே கேள்விதான் - வெல்லப் போவது யார்?

No comments