தாயைச் தேடிச்சென்ற இரு பிள்ளைகள் உயிரிழப்பு: உடலங்கள் மீட்பு!


பதுளை-ஹாலி-எல, போகொட கிராமத்தில் நீர்ப்பாதையை கடக்க முயன்றபோது, நீரால் இழுத்துச் செல்லப்பட்ட ஏழு வயது சிறுமி மற்றும் 10 வயது சிறுவன் ஆகியோரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நீர்ப்பாதையை கடக்க முற்பட்ட இந்த இரண்டு சிறு பிள்ளைகளும் நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் நேற்று வியாழக்கிழமை பதிவாகியுள்ளது.

இந்த இரண்டு பிள்ளைகளும் வேலைக்குச் சென்ற தங்கள் தாயைத் தேடிச் சென்றபோதே நீரால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

இந்த பிள்ளைகளின் தாய் தினசரி கூலிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்து வந்தார்,

சம்பவத்தி்ன்போது அவர் பக்கத்து வீட்டில் வேலை செய்து வந்தார்.

எனினும் அதனை அறியாத இரண்டு பிள்ளைகளும் தமது தாய் வீட்டிற்கு வர தாமதமானதால், பலத்த மழை பெய்து கொண்டிருந்த போது, அவரைத் தேடி வெளியே சென்றுள்ளனர்.

இந்தநிலையில் அவர்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள பிஹில்லா கந்துரா என்ற நீர்ப்பாதையைக் கடக்க முயன்றபோது நீரோட்டத்தில் இழுத்துச்செல்லப்பட்டனர்.

எனினும் இதனை அறியாத, இரண்டு பிள்ளைகளின் தாய் மாலை 5 மணியளவில் வீடு திரும்பியபோது, தனது பிள்ளைகளை காணவில்லை என்பதால், அவர்களைத் தேடி வெளியே சென்றுள்ளார்.

இதனையடுத்து ஊர் மக்களும் ஒன்று திரண்டு தாயுடன் காணாமல் போன குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

குறித்த பிள்ளைகள் பயன்படுத்திய குடை, நீரோடைச் செல்லும் பாதைக்கு அருகாமையில் இருந்ததால், அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது

இந்தநிலையில் காவல்துறையினரும் இராணுவமும் இணைந்து தீவிர தேடுதல்களை மேற்கொண்டு ஏழு வயது சிறுமியின் உடலத்தை நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டிலிருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மற்றொரு நீர்வழிப்பாதையில் மீட்டுள்ளனர்.

இந்தநிலையில் இன்று முற்பகல் சிறுவனின் உடலமும் மீட்கப்பட்டுள்ளது.

No comments