போராட்டத்தில் குதிக்க வடக்கு கடற்தொழிலாளர்கள் தீர்மானம்!


இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதித்தமைக்கு எதிராகப் பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வடக்கு மாகாண மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண மீனவர் சார் பிரச்சினைகள் குறித்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளுடான கலந்துரையாடல் நிகழ்வின் போதே வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தலைமையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தாம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடினர்.

மேலும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராகப் பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதற்கும் தீர்மானித்தனர். மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடிய பின்னர் போராட்டம் நடைபெறவுள்ள திகதி விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் போது தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் சீ. வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை.

No comments