தேசியவாதமே குற்றவாளிகளின் இறுதி இடம் - ரவூப் ஹக்கீம்


நிறைவேற்று ஜனாதிபதி என்றவகையில் அரசியலமைப்பில் இருக்கும் விடயங்களை  நிறைவேற்ற வேண்டும். அது அவரின் பொறுப்பு. 

பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகார பரவலாக்கத்தை கோருவதை ஏன் பெரியவிடயமாக அலட்டிக்கொள்ள வேண்டும் என கேட்கின்றேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (10) இரண்டாவது தினமாக இடம்பெற்ற ஜனாதிபதியின் அரச கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு  மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொள்கை விளக்க உரையாற்றும் போது  நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் தொழிற்சங்கங்களின் போராட்டம் இடம்பெற்றிருந்தன.

வரி அதிகரிப்புக்கு எதிராகவே இந்த போராட்டம் இடம்பெற்றது. இதனை உணர்ந்து  வரியின் தேவை தொடர்பில் தெளிவுடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். 

ஆனால் அதனை செய்யவில்லை. அதேநேரம் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் வரி கொள்கையை இன்னும் 6மாதங்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியுமானால் அதன் மூலம் அரச, தனியார் ஊழியர்களுக்கு நிவாரணம், மற்றும் சலுகைகளை வழங்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இவை கற்பனை கதை. இதுவெல்லாம் நடக்குமா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

அத்துடன் ஜனாதிபதி உரையாற்றிக்கொண்டிருக்கும்போது வரலாற்றை மீண்டும் திருப்பும் வகையில் ஆயிரக்கணக்கான பெளத்த தேரர்கள் ஊர்வலமாக வந்து, நாட்டின் அரசியலமைப்பை தீயிட்டார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சபையில் உரையாற்றும் போது அவரின் உரையில் விரக்தியை காண முடிந்தது. அவரின் தந்தை தர்மலிங்கம் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் புலிகளால் கொலை செய்யப்பட்டார். 

சித்தார்த்தன் ஆயுதம் ஏந்தியவர்தான். ஆனால் அதிகார பரவலாக்கத்திட்டம் நிறைவேற்றப்படும் என்ற அபிலாசையில் ஆயுதத்தை கைவிட்டார். ஆனால் இங்கே சுதந்திர தினத்தில் இருந்த விடயங்கள் மீண்டும் இடம்பெறுவருவதை காண்கிறோம்.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ, ஆர்.டி. பண்டாரநாயக்க அதிகாரபரவலாக்கலுக்கு நடவடிக்கை எடுத்தபோது அவரை கொலை செய்ததும் பெளத்த பிக்கு ஒருவராகும். எவ்வாறு இதனை மறக்கலாம். 

கடந்தகால வரலாறுகள் மீண்டும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றதை காணக்கூடியதாக இருக்கிறது. எனவே நாங்கள் கேட்டுக்கொள்வது என்ன வென்றால், நிறைவேற்று ஜனாதிபதி என்றவகையில் ஜனாதிபதி அரசியல் அமைப்பில் இருப்பதை நிறைவேற்ற வேண்டும். அது அவரின் பொறுப்பாகும்.

அத்துடன் பிரிக்கப்படாத நாட்டுக்குள்  அதிகார பரவலாக்கத்தையே கோருவதாக சுமந்திரன் எம்.பியும்  இங்கு தெரிவித்திருந்தார். அப்படியாயின் ஏன் இந்த விடயத்தை நாங்கள் பெரியவிடயமாக அலட்டிக்கொண்டிருக்கிறோம்.

அன்று வடக்கு கிழக்கு மாகாணத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலில் போட்டியிட பகிஷ்கரித்தபோது நாங்கள் மாத்திரமே தமிழ் கட்சியாக போட்டியிட்டு எதிர்க்கட்சியாக செயற்பட்டோம். வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபையில் முதல் தடவையாக நாங்கள் நுழைந்தோம். 

இணைப்புக்கு எதிரான எதிர்ப்பின் கீழே நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம். முஸ்லிம்களுடன் கலந்துரையாடப்பட்டே அந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டது.

அந்த இணைப்பில் 3இல் ஒரு பகுதி தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டுத்தான் அந்த இணைப்பு மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக வடக்கு கிழக்கு இணைப்பு அரசியலமைப்புக்கு  முரண் என உயர் நீதிமன்றம் தனக்கு கிடைத்த நியாயமான காரணங்களின்  பிரகாரம் தீர்ப்பளித்தது.

எனவே பிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகார பரவலாக்கத்தை கோரும்போதும் அதனை ஏமாற்றுக்காரர், மோசடிக்காரர்கள் என தெரிவிக்கின்றனர்.சில கட்சிகள் இந்தியாவையும் குற்றம் சாட்டியிருந்தன. இந்தியா எமது நாட்டுக்கு செய்த பாரியளவிலான மனிதாபிமான உதவிகளை மறந்து செயற்படுகி்ன்றனர். 

No comments