நெடுஞ்சாலையில் பயணிக்கும் கட்டாக்காலிகள் அரசாட்சி! பனங்காட்டான்


சொல்வதைச் செய்யாது விடுவதும், சொல்லாதவைகளைச் செய்வதும், அதனூடாக இனவாதத்தையும் மதவாதத்தையும் தீமூட்டி அதில் குளிர் காய்வதும், சிங்கள பௌத்த அரசியல் தலைமைகளுக்கும் அதன் வால்பிடிகளுக்கும் கை வந்த கலை. 13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதிலும், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதிலும் உள்ளிருந்து நடத்தும் முன்னுக்குப் பின்னாலான குளறுபடிகள் - கட்டாக்காலிகளின் அரசாட்சி என்பது இதுதான்!

இலங்கையின் ஆட்சிபீடத்தைப் பொறுத்தளவில் எது நடைபெறும், எவை தரப்படும் என்று சொல்லப்படுகின்றனவோ, அவை நடைபெறுவதும் அவை தரப்படுவதும் என்பது நிச்சயமாக இடம்பெறுவதில்லை. 

முக்கியமாக, நாட்டின் பூர்வீக குடிகளான தமிழர் விவகாரங்களில் இவை எப்போதுமே வெறும் பேச்சாகி, நீண்டகால களமாகி இறுதியில் நிறைவேற்றப்படாது போகின்றன. 

பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி-செல்வா ஒப்பந்தம், பிரபாகரன் - ரணில் சமாதான ஒப்பந்தம், தமிழர் தீர்வுக்கான ராஜிவ் - ஜே.ஆர். ஒப்பந்தம் என்பவை ஏமாற்றப்பட்டதுக்கான தனியான வரலாற்றைக் கொண்டவை. இதற்கும் அப்பால், பேசிப்பேசி உறுதியளித்து உத்தரவாதம் கொடுக்கப்பட்டு மறக்கப்பட்டு மறுக்கப்பட்டவைக்கு இன்னொரு பட்டியலொன்றுண்டு. 

2015ஐ அடுத்து மொத்தமாக நாலரை ஆண்டுகள் திருமணமாகாது கூடி வாழும் தம்பதியராக ஷதேநிலவு| களித்து, தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்ட வரலாறு சம்பந்தன் - சுமந்திரன் இணைத்தலைமையில் இயங்கிய கூட்டமைப்புக்குண்டு.

கோதபாய ஜனாதிபதியானபோது இராணுவ ஆட்சிக்கான வாய்ப்பு உருவாகுவதாகக் கூறப்பட்டது. ஒருவகையில் அவரது ஆளும் போக்கு அவ்வாறுதான் காணப்பட்டது. தம்மை ஜனாதிபதியாக்கிய மூத்த சகோதரர் மகிந்தவை அதிகாரங்களற்ற ஒரு கதிரையில் அமர்த்தி அவரை அசட்டை செய்தார். இளைய சகோதரர் பசிலுக்கும் ஒரு கதிரையை கொடுத்து தனிப்போக்காக நடத்தினார். மற்றொரு மூத்த சகோதரரான சமல் ராஜபக்சவுக்கு மந்திரப் பதவி கொடுத்தாரே தவிர அவரது எந்த ஆலோசனையும் பெறப்படவில்லை. மூத்த சகோதரர்களின் புதல்வர்களுக்கும் மந்திரிப் பதவிகள் கிடைத்ததாயினும் அவர்கள் எட்டாம் கட்டையில்தான் அமர்த்தப்பட்டனர். 

வியத்மக என்ற பெயரில் ஷஅறிவாளிகள் குழு| ஒன்றை நியமித்து அவர்களின் ஆலோசனையின்படியே நடந்து கொண்டதால் அறகலய என்ற மக்கள் பேரெழுச்சி கோதபாயவை பதவி துறக்க வைத்தது. இன்றைய நாட்களில் பசில், நாமல் போன்றவர்களிடமிருந்து கோதபாய பற்றி வரும் விமர்சனங்கள் இவர்கள் வெளிவிறாந்தையில் அமர்த்தப்பட்டிருந்த மனக்கசப்பையும் மனத்தாங்கலையும் அம்பலப்படுத்துகிறது.

அறகலய காலத்தில் மகிந்தவை பிரதமர் பதவியிலிருந்து வெளியேற்றாது கோதபாய ஜனாதிபதி பதவியை துறந்திருந்தால், அரசியலமைப்பு முறையாக மகிந்தவே ஜனாதிபதியாகியிருப்பார் எனும் பசிலின் ஓலம், ரணிலின் ஜனாதிபதிப் பதவியிலுள்ள எதிர்ப்பினை வெளிப்படையாகக் காட்டுகிறது. 

பசில் அமெரிக்க பிரஜாவுரிமையைத் துறந்து, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பெரமுன சார்பில் போட்டியிடுவார் என்பதும், மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் பெரமுன அமோக வெற்றிபெறும் என்பதும் ரணிலுக்கு அச்சத்தை ஏற்படுத்தவென கூறப்படுபவை. இதனால் ரணில் தமது கதிரையை இறுகப்பற்றிக் கொள்ள வேண்டிய தேவை ஏற்படுத்தப்படுகிறது. 

இந்தப் பின்னணியிலேயே ரணிலின் ஆட்சிப் பயணத்தை இப்போது கூர்ந்து பார்க்க வேண்டும். 

13ம் திருத்தம் முழுமையாக அமல் செய்யப்படுமென்று அறிவித்ததும், சகல அரசியல் கட்சிகளினதும் பங்கேற்புடனேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமென தெரிவித்ததும், பெப்ரவரி 4ம் திகதிய உரையில் இது தொடர்பான உறுதிப்பாடுகள் வெளிப்படுத்தப்படுமென கூறியதும், உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல் மார்ச் மாதம் 9ம் திகதி இடம்பெறுமென பிரகடனம் செய்ததும்...... 

இவைகளில் ஏதாவது சாத்தியமானதா? சாத்தியப்படுமா? மார்ச் 8ம் திகதிவரை - அதாவது உள்ளூராட்சித் தேர்தலுக்கு முதல் நாள்வரை தேர்தல் நடைபெறுமென்று நிச்சயமாகக் கூறமுடியாதென்பது இப்போது உறுதியாகியுள்ளது. 

ஓர் அரசாங்கத்துக்குள் பல அமைச்சுகள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நிர்வாக சபைகள், ஆணையங்கள் இருந்தாலும் அனைத்துக்குமான 'தலை' ஒன்றுதான். இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று கூட்டிணைந்து செயற்படுவதுதான் அரச நிர்வாகம். இவை நிர்வாக முகாமைத்துவம், நிதி முகாமைத்துவம் ஆகியவற்றால் இணைக்கப்பட்டவை. ஆனால், ரணிலின் ஆட்சியில் அப்படியான அடையாளம் காணப்படவில்லை - காட்டப்படவும் இல்லை.

உள்ளூராட்சித் தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்களிப்பு அட்டைகளை அச்சடிப்பதற்கு முழுப்பணத்தையும் அரச அச்சகம் கேட்கிறது. யாரிடம் கேட்கிறது? தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்கிறது. தேர்தல் ஆணைக்குழு நிதியமைச்சிடமும் திறைசேரியிடமும் கை நீட்டுகிறது. அவர்கள் கை விரிக்கிறார்கள். அதற்குக் கூறப்படும் காரணம் விந்தையானது. 

'அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே நிதி செலவிடப்பட வேண்டும். புதிதாக காசு அச்சடிக்க முடியாது" என்று சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி என்ற அதிகார வழியாக ரணில் சகல அரசாங்க நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டார். அதனையே காரணம் காட்டி - அதாவது, தேர்தல் அத்தியாவசிய சேவை அல்ல என்று கூறி நிதி அமைச்சு கை விரித்துள்ளது. 

உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலுக்கான நியமனப் பத்திரங்கள் ஏற்கப்பட்டு, முற்கூட்டிய வாக்களிப்புக்கான திகதிகளும் அறிவிக்கப்பட்ட பின்னரே, ரணிலின் இந்த உத்தரவு அரசாங்க நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டது. அப்படியெனில் இதன் மறைபொருள் என்ன? தேர்தலுக்கு நிதி உதவி வழங்க வேண்டாமென்பது ரணிலின் உத்தரவு என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமென்றில்லை. 

ஆனால், தேர்தலுக்கு எதிரான எந்தக் கருத்தையும் பகிரங்கமாக வெளியிடாது பவ்வியமாக அடக்கி வாசிக்கிறார் அவர். இதுபற்றி சில ஊடக சந்திப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டபோது, பட்டும் படாமலும் மழுப்பிப் பதிலளித்தார் அவர். இதுதான் ரணிலின் பாணி. 

முக்கிய முடிவுகளை தாமே எடுப்பாராயினும், அதன் பொறுப்புகளை வேறு இடங்களுக்கு லாவகமாக ரணில் தள்ளி விடுவார். தேர்தலுக்குப் பொறுப்பான அமைச்சராக பிரதமர் தினேஸ் குணவர்த்தன இருப்பதால், அவரே இந்தப் பிச்சுப்பிடுங்கலுக்கு நடுவில் நிறுத்தப்பட்டுள்ளார். 

தேர்தல் வேண்டும், தேர்தல் இப்போதைக்கு வேண்டாம் என்ற இரு தரப்பும் நீதிமன்ற வாயிற்படி ஏறியுள்ளன. தேர்தல் ஆணையம் சுயாதீனமான ஒன்றாக இருப்பினும், அரசாங்கத்தின் கைகளுக்குட்பட்ட ஒன்றாகவுள்ளதால் இதற்காக ஆஜராக வேண்டிய சட்டமா அதிபர் திணைக்களம் அதனை புறக்கணிக்கிறது. இதனால் தனியார் சட்டவாளர்களை தேர்தல் ஆணையம் தமக்காக வாதிட நியமிக்கிறது. இவ்விடயத்தில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்ன? 

தேர்தல் தொடர்பாக கடந்த வாரம் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சாதாரண மக்களைப் பொறுத்தளவில் குதர்க்கமானதாக அவதானிக்கப்படுகிறது. 'தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தயாராகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்துக்குத் தெரிவித்துள்ளதால் மார்ச் ஒன்பதாம் திகதி தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட வேண்டியது அவசியமில்லை" என்ற நீதிமன்ற தீர்ப்பின் வாசகம் தேர்தல் நடத்தும் பொறுப்பை அதன் ஆணையத்திடம் தள்ளிவிட்டுள்ளது.

இத்தகைய ஒரு தீர்ப்புக்காகவா தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்திடம் சென்றது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த அரச இயந்திரத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்ற ஒரு தீர்ப்பை எதிர்பார்த்த வேளையில் இரண்டுக்குமிடையில், 'நடத்தலாம்' என்று ஒரு தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியது ஜனநாயக நாட்டில் நீதித்துறைக்கு ஏற்புடையதா என்ற கேள்வி எழுகிறது. 

தேர்தலை இடைநிறுத்தக்கோரி தாக்கலான மற்றொரு மனுவின் விசாரணை இந்த வாரத்து வியாழக்கிழமை (23ம் திகதி) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்தத் திகதிதான் தபால் மூல வாக்களிப்பின் ஒரு நாள். 

ஆனால், தபால் மூல வாக்களிப்பு சீட்டுகள் அச்சடிக்கும் பணி இதனை எழுதும்வரை நிறைவேறவில்லை. இதற்கான நிதியை முற்கூட்டியே வழங்க வேண்டுமென அரசாங்க அச்சகம் கேட்டுள்ளது. அது மட்டுமன்றி காவற்துறை பாதுகாப்பையும் அது கோரியுள்ளது. இவை இரண்டும் நிறைவேற்றப்படவில்லை என்று அரச அச்சக தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். அரச அச்சகம் என்பது தனியார்துறை சார்ந்ததல்ல என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 

நடைபெறும் சமாசாரங்களைப் பார்க்கையில், இலைமறைவில் ஒரு நாடக அரங்கேற்றம் இடம்பெறுவது நன்கு தெரிகிறது. தேர்தலை நடத்துவதற்கு அனுசரணையாக இருக்க வேண்டிய ஒவ்வொரு அரசாங்க அலகும், இதனைத் தடுப்பதில் அதீத கவனம் எடுக்கின்றன. அரசியல் அமைப்பின்படி, சகல நிறைவேற்று அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக இயங்குவது வெள்ளித்திரையில் பளிச்செனத் தெரிகிறது.

இவரது ஐக்கிய தேசிய கட்சி தேர்தலுக்குத் தயாரில்லை. இவரைக் கதிரையில் அமர்த்திய கோதபாயவின் சகோதரர்களது பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியினர் தேர்தல் இப்போது இடம்பெறுவதை விரும்பவில்லை.

தமிழர் தரப்பு இதற்கு விதிவிலக்கல்ல. இரண்டாகப் பிளவுபட்டு முன்னாள் இந்நாள் கூட்டமைப்பு என்று இருப்பவர்களும் தேர்தலை மனதார விரும்பவில்லை. முக்கியமாக தமிழரசின் ஷமறுதலை| என வர்ணிக்கப்படும் சுமந்திரன் தேர்தல் பரப்புரைகளை இன்னமும் தீவிரமாக ஆரம்பிக்காது நீதிமன்றங்களை நாடி ஓடித்திரிவதை பார்க்கையில் அவரும் தேர்தலை விரும்பவில்லையென தமிழரசின் முக்கியஸ்தர் ஒருவர் இப்பத்தி எழுத்தாளரிடம் கடந்த புதனன்று கூறியது உண்மையாக இருக்கலாம். 

தமிழரசு அணியின் நாடாளுமன்றத் தலைவர் சம்பந்தனைப் பொறுத்தளவில் எல்லாமே ஒன்றுதானாம். முதுமையும் இயலாமையும் முழுமையாக தேர்தல் வேலைகளில் அவரை நேரடியாக ஈடுபடுத்த அனுமதிக்கப்போவதில்லை. தேவைப்படின் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுவார். அதுவும்கூட  ஆட்சித்தரப்பையும், புதிய கூட்டமைப்பை உருவாக்கியவர்களையும் எச்சரிக்கும் பாணியில் அமையலாம். 

13ம் திருத்தம் முழுமையான அமல், உள்;ராட்சித் தேர்தல்கள் ஏற்பாடு, புதிய அரசியலமைப்பு உருவாக்கம் எனப்படுகின்ற ஒவ்வொரு அறிவிப்பும், அதன் பின்னணியும், மறைமுகமாக அவைகளை தட்டிக்கழிக்கும் வகையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும்... ரணில் தமக்கான திட்டத்தை தாமே வகுத்து அதற்கான நெடுஞ்சாலையில் பயணிப்பது தெரிகிறது. இது மேற்கு நாடுகளின் 'ஒம்னி' சட்டவாக்கம் போன்றது.

நாடாளுமன்றத்தில் தமக்கான ஆதரவை பெறத்தவறினால், தேர்தலை முற்கூட்டிய காலம் நெருங்கும்போது நடத்தப்போவதாக நினைவூட்டலாம். நாடாளுமன்றத்தில் தமக்கான ஆதரவு குறையுமானால் அது ஜனாபதியின் பதவிக் காலத்தைப் பாதிக்காது, நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான் வீட்டுக்கு அனுப்புமென அவர்களுக்கு அச்சமூட்டலாம்.

முக்கியமாக பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்ப முடியாத ஒரு தரப்பினரின் அறிவிப்பைக் கையிலெடுத்து தமிழ்த் தேசிய கட்சிகளை தட்டிப் பார்க்கவும் அவர் முனையலாம். கிழட்டு நரியின் வளர்ப்பிலான குள்ளநரிக்கு இதுவெல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. 

அரசுக்கு எதிரான போராட்டம், சட்ட மறுப்பு, வீதி மறிப்பு, கறுப்பு கொடி ஆர்;ப்பாட்டம் என்றால் அவை தமிழர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுபவை என்ற காலம் போய், இன்று தங்களின் சிங்கள பௌத்த அரசியல் தலைமைக்கு எதிராக அவர்களை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்களே நித்தம் நித்தம் போராடும் காலம் உருவாகியுள்ளது. 

கட்டாக்காலிகளின் அரசாட்சி என்றால் இது இப்படித்தான் இருக்கும் என்பதற்கு நிகழ்காலம் வரலாற்றுக்கான பதிவு. இது அரச இயந்திரத்துக்குள் ராணுவ பலத்தைப் புகுத்த ரணிலுக்கு வாய்ப்பளிப்பதாகவும் மாறலாம்! யார் கண்டது?

No comments