தலைவர் உயிருடன் உள்ளார் பழ. நெடுமாறனின் பரபரப்பு செய்தியாளர் சந்திப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நலமுடன் உள்ளார் என்று உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை  கவிஞர் காசி ஆனந்தன், பழ. நெடுமாறன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து, இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில், 

சர்வதேசச் சூழலும், இலங்கையில் இராசபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழத் தேசியத் தலைவர் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும், ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும், உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம். 

விடுதலைப்புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும், எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதிலும் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார் என்றார். 



இதுகுறித்து சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் ரவி ஹேரத் கூறுகையில்,

இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக வெளியான செய்திக்கு இலங்கை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரவி ஹேரத் மறுப்பு தெரிவித்துள்ளார். 

விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இல்லை. 2009 மே 18ல் நடந்த இறுதிகட்ட போரில் அவர் உயிரிழந்ததற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது என்றார்.

இச்செய்தி குறித்த வைகோ அவர்கள் தெரிவிக்கையில்,


தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக எந்தத் தகவலையும் என்னுடன் தொடர்பில் இருக்கும் போராளிகள் உறுதிப்படுத்தவில்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

அதேபோல், பழ.நெடுமாறன் கூறியது போல் பிரபாகரன் நலமுடன் இருந்தால், அதைவிட உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியது ஒன்றும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

இச்செய்தி குறித்து சீமான் தெரிவிக்கையில்,


பாலசந்திரனை சாக கொடுத்துவிட்டு எங்கள் அண்ணன் பிரபாகரன் பத்திரமாக தப்பிச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எந்த சூழ்நிலையிலும் நான் இந்த நாட்டை விட்டு போகமாட்டேன் என்று வீரமாக நின்று சண்டையிட்டவர் எங்கள் அண்ணன் பிரபாகரன். தன் உயிரை மட்டும் தற்காத்துக்கொண்டு தப்பிப்போகும் கோழையல்ல பிரபாகரன் என்று சீமான் கூறியுள்ளார்.

No comments