முதல்வர் வேட்பாளராக வித்தி!

 




யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வர் வேட்பாளராக ஊடகவியலாளர் ந.வித்தியாதரனிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையிலேயே ந.வித்தியாதரன் தேர்தலில் போட்டியிட முன்வந்திருந்தார்.கட்சி தலைமையால் ஏனைய சபைகளில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர்களது பெயர் அறிவிக்கப்பட்டது போன்றே யாழ்.மாநகரசபை முதன்மை வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்படுமென தமிழரசுக்கட்சியின் உப தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களது கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மாநகரசபைக்கான முதல்வர் வேட்பாளர் பற்றி தெரிவித்திருந்தார்.

இதனிடையே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிச்சயமற்ற தன்மையிலேயே காணப்படுகிறது. சில அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ள போதிலும், வேட்பாளர்கள் மந்தமாகவே காணப்படுகின்றனர்.


தேர்தல் குறித்த நிச்சயமற்ற தன்மைதான் இதற்கான காரணமாகும் என்று இலங்கை தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் வாக்குச் சீட்டு அச்சிடும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என அரச அச்சகம் அண்மையில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.

போதிய பணம் கிடைக்கவில்லை எனக் கூறி உரிய பணத்தை விடுவிக்குமாறு திறைசேரியையும் கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.  

தேர்தல் ஆணைக்குழு, திறைசேரி மற்றும் அரசாங்கம் ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே இடத்தில் கூடி; ஆராய்ந்து நிதி தொடர்பில் உடன்பாட்டை எட்டுவது பொறுத்தமானதாகுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அறிவித்துள்ளன.


No comments