குருந்தூர்மலை சென்ற முன்னணியினர்!


முல்லைத்தீவு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி இலங்கை படையினர் விகாரை கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ளமையினை தமிழ் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ள நிலையில் அப் பகுதிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளனர்.

கட்டுமானப் பணியினை இராணுவத்தினர் முன்னெடுப்பதாகவும் இரவு வேளைகளில் கட்டுமான பணிகள் இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேரில் பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் நேற்று இரவு விஜயம் செய்திருந்தனர்.

அப்போதே குருந்தூர் மலையின் கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும், முற்றுமுழுதான இராணுவ பிரசன்னத்துடன் காணப்பட்டுள்ளதுடன் இராணுவ சீருடையில் பலர் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் கட்டுமான பொருட்களும் காணப்பட்டதோடு ஆட்கள் தங்குவதற்கான வசதிகளுடன் கட்டில்கள் மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றபோது அங்கு இருந்தவர்கள் காட்டுக்குள் தப்பித்து ஓடியுள்ளனர்.

இதனிடையே திட்டமிட்ட பௌத்த மயமாக்கல் தொடர்பில் மார்ச் மாதம் இடம்பெறும் ஐ.நா அமர்வுகளில் சர்வதேச சமூகத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


No comments