13 வேண்டும்!


தீவிர இனவாத பௌத்த அமைப்புக்கள் 13வது திருத்த சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் 13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்துத்துவ அமைப்புக்கள் பதிலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.

அதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவோம் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

சிவராத்திரியை முன்னிட்டு இலங்கையில் உள்ள ஐந்து ஈச்சரங்களையும் தரிசிப்பதற்காக தமிழகத்தில் இருந்து இந்து மக்கள் கட்சியினர் வருகை தந்த நிலையில், யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  மாலை ஊடகவியலாளர்களை சந்தித்திருந்தனர்.

ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் ஈழத் தமிழர்களுக்காக இந்தியா தொடர்ந்தும் குரல் கொடுக்கவும் செயற்படவும் தயாராக இருக்கின்ற நிலையில் 13-ஆம் திருத்தம் தொடர்பில் சிலர் அறியாமல் பேசுகின்றனர். 13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டும்.வடகிழக்கில் நடைபெறுகின்ற மதமாற்றங்கள் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் கவனத்தில் கொள்வோம் என அர்ஜீன் சம்பத் தெரிவித்திருந்தார்.

திருகோணமலையில் உள்ள திருகோணேச்சர ஆலயம் தொடர்பாகவும் அங்கு தொல்லியல் திணைக்களத்தினரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் நாங்கள் இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் அர்ஜீன் சம்பத் தெரிவித்திருந்தார்.

முன்னதாக ஈழம் சிவசேனை தலைவர்களை அர்ஜீன் சம்பத் குழுவினர் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments