விசாரணைக்கு பாஸ்கரனிற்கு அழைப்பு!தமிழ் ஊடக குழுமமொன்றின் தலைவரும் , தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரனுக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கான அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணை பிரிவின் கிளிநொச்சி பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு விசாரணைக்கு சமூகமளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி - பூநகரி வீதியில் பரந்தன் குமரபுரம் பகுதியில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணை பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியை சந்திக்குமாறு அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் என்ன காரணத்திற்காக விசாரணைக்காக சமூகமளிக்க வேண்டுமென்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லையென தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மைக்காலமாக தமிழ் தரப்பினை சேர்ந்தவர்களை விசாரணைக்கென கொழும்பு நாலாம் மாடிக்கு அழைக்கப்படுகின்ற நிலையில் கந்தையா பாஸ்கரன் பரந்தனிற்கு விசாரணைக்கு வருகை தருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் விசாரணை பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனத்தினை தாண்டி தாயகத்தில் பல்வேறு தொழில் நடவடிக்கைகளிலும் கந்தையா பாஸ்கரன் முதலிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments