தேர்தல் பேய்:பதுங்குகின்றது!



நடைபெறும் நடைபெறாதென பேசப்பட்டுவந்த உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தபால் மூல வாக்கெடுப்புக்கான உத்தியோகபூர்வ திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உறுதியளித்தவாறு அரச அச்சகத்தினால் உரிய வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாமையினால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு தொடர்பான வாக்குச் சீட்டுகள் இன்று அல்லது நாளை கிடைக்கப் பெற்றால், திட்டமிட்டபடி இம்மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகளை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனிடையே இரண்டு நாட்களுக்குள் வாக்குச் சீட்டுகள் கிடைக்கப்பெறாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை தபால் மூல வாக்களிக்கும் திகதி தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னதாக தெரிவித்திருந்தது.

இதேவேளை, தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி தொடர்வது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியும் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.


No comments