கல்வியங்காட்டு வர்த்தகர் மீது தாக்குதல் ; டென்மார்க் விஷ்வாவின் கூலிப்படையே மேற்கொண்டது!


டென்மார்க்கில் இருந்து பணம் அனுப்பப்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மீதும் , அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டு , வர்த்தக நிலையத்தில் இருந்து 5 இலட்ச ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும், அதன் உரிமையாளர் மீதும், இனம் தெரியாத குழுவினர் கடந்த 18ஆம் திகதி இரவு தாக்குதல் நடத்தி, ஐந்து லட்ச ரூபாய் பணத்தினை கொள்ளையடித்து சென்று இருந்தனர். 

சம்பவம் தொடர்பில், பொலிஸார் முன்னெடுத்து வந்த விசாரணைகளின் அடிப்படையில், நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை , யாழ்ப்பாணம் , கல்வியங்காடு மற்றும் கோப்பாய் பகுதிகளை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , நேற்றைய தினம் புதன்கிழமை முதன்மை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முதன்மை சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , 

பாடசாலை ஒன்றின் அபிவிருத்தி சங்கத்தில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக , டென்மார்க் நாட்டில் வசிக்கும் விஷ்வா என அழைக்கப்படும் நபர் ஒருவரே யாழ்ப்பாணத்தில் இயங்கும் கூலிப்படையினருக்கு பணம் கொடுத்து , வர்த்தக நிலைய உரிமையாளர் மீது தாக்குதல் நடத்துமாறு பணித்துள்ளார். 

அவரிடம் பணத்தினை பெற்றுக்கொண்ட கூலிப்படையினர் 07 பேர் கொண்ட குழுவாக வர்த்தக நிலையத்தினால் புகுந்து வர்த்தகர் மீது தாக்குதலை மேற்கொண்டு , அங்கிருந்த ஐந்து இலட்ச ரூபாய் பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

கூலிப்படையை சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரையும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  

No comments