வீடொன்றில் இருந்து தாயும் மகளும் சடலமாக மீட்பு!


கினிகத்தேனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து தாயும், மகளும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். 

கினிகத்தேனை- பேரகஹமுல பிர​தேசத்தைச் சே​ர்ந்த 50 வயதுடைய தாயும், அவரது 30 வயதுடைய மகளுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்து சில நாட்களாக எவரும் வெளியே வராத நிலையில், அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக பிரதேசவாசிகள் கினிகத்தேனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை சோதனை செய்த போது, தாயும் மகளும் கட்டிலில் சடலமாக காணப்பட்டுள்ளனர். 

உயிரிழந்த இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் எனவும், உயிரிழந்த பெண்ணின் கணவனும், மகனும் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் , அயலவர்கள் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தனர். 

No comments