இனப்பிரச்சனைக்கான இலகு தீர்வு: சமஷ்டி இல்லை! 13 மைனஸ் ஆகலாம்!பனங்காட்டான்


ரணில் கூறுபவைகளையும், செய்யப்போவதாகச் சொல்பவைகளையும் பார்க்கும்போது ஒன்று நன்றாகப் புலனாகிறது. எக்காரணம் கொண்டும் சமஷ்டி முறையை தான் அமுல்படுத்தப் போவதில்லையென்று கூறுபவர், 13 பிளஸ் என்பதை 13 மைனஸ் ஆக்கும் முறையையும் நாசூக்காக சொல்லியுள்ளார். சமஷ்டி இல்லை, 13 பிளஸ் நிச்சயமில்லை, 13 மைனஸ் வழியுண்டு - இனப்பிரச்சனைக்கான தீர்வு பூஜ்யம்தானா? 

மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படாது, மக்களால் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களால் இலங்கை வரலாற்றில் முதன்முதலாக தெரிவான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. 

69 லட்சம் வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கோதபாய ராஜபக்ச அந்தக் கதிரையில் தொடர்ந்து இருக்க முடியாத நிலையில், அவரால் அந்தக் கதிரையில் அமர்த்தப்பட்டவர் ரணில் விக்கிரமசிங்க என்று சொன்னால், அதிலும் தவறில்லை. 

என்னவோ, ஒருவாறு இந்த மாதம் 20ம் திகதியுடன் தமது முதல் ஆறு மாதங்களை ரணில் ஷவெற்றி|கரமாக பூர்த்தி செய்துவிட்டார். வெற்றிகரமாக என்று கூறுவதற்கு பல நியாயப்பாடுகள் உண்டு. அறகலய என்ற மக்கள் பேரெழுச்சியை மீள எழமுடியாதவாறு ஒருவாறு அடக்கியுள்ளார். முழுமையான அமைச்சரவையை இன்னும் நியமிக்கவில்லை. தேவைக்கேற்றவாறு அவ்வப்போது ஓரிருவராக நியமித்து வருகிறார். 

வரவு செலவுத் திட்ட வாக்களிப்பின்போது ஆதரிக்க மறுத்த மகிந்தவின் பெரமுனக்காரரரைப் பார்த்து, 'தோல்வியடைந்தால் நீங்கள்தான் வீட்டுக்குப் போவீர்கள் - நானல்ல" என்று பயமுறுத்தி காரியத்தைச் சாதித்தார். இப்போது மகாநாயக்கர்கள் ரணிலின் பக்கம் சரிந்துவிட்டதுபோல காணப்படுகிறது. 

ஒருவாறு அரசியலமைப்புச் சபையை உருவாக்கி விட்டார். அடுத்து சகல ஆணைக்குழுக்களுக்கும் புதியவர்கள் நியமிக்கப்படுவர். சிலவேளை இதனால் உள்;ராட்சித் தேர்தல்கூட பின்போடப்படலாம். இவ்வாறு பல காரியங்களுக்கு கண்கட்டு அரசியல் விளையாட்டை ரணில் மேற்கொண்டு வருகிறார். 

எல்லாவற்றுக்கும் உச்சமானது, தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கென தமிழ் கட்சிகளுடனென ஆரம்பமான மாநாடு. சூட்சுமமாக இதனை சர்வகட்சி மாநாடாக்கி அனைத்து முடிவுகளும் அனைவருக்காகவும் எடுக்கப்படுமெனக் கூறி - எல்லாமே தொங்குபாலமாக நிற்கின்றன. 

கடந்த டிசம்பர் 13ம் திகதி ஆரம்பமான இந்த மாநாடு, 13ம் திருத்தத்தின் எதிர்காலத்தை சவாலுக்குட்படுத்தியுள்ளது. அதுமட்டுமன்றி, 13ம் திருத்தத்தையே நம்பியிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பை கச்சிதமாக சின்னாபின்னமாக்கி, அடுத்தது என்னவென்று எவருக்கும் புரியாத நிலைக்கு அனைத்தையும் ஒடுக்கி வைத்துள்ளது.

1980ல் ஒப்பமிடப்பட்ட ராஜிவ் - ஜே.ஆர் இணக்கத்தின் பிரசவமே 13ம் திருத்தம். இதற்கு இப்போது வயது 35 பிளஸ். ஒப்பந்த காலத்தில் தமிழர் தாயகத்தில் எல்லாமாகவிருந்த விடுதலைப் புலிகள் ஒப்பந்தத்தை ஏற்காதபோதிலும், பிராந்திய வல்லரசின் திணிப்பை ஏற்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. இதன் தொடர்ச்சியாகவே இன்றும் மாகாண சபை முறைமையும், 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் பேச்சுவார்த்தையில் முதலிடம் பெறுகிறது. 

கடந்த வருடம் மார்ச் மாதம் அப்போதைய ஜனாதிபதி கோதபாய நடத்திய சர்வகட்சி மாநாட்டின் தொடர்ச்சியாகவே ரணிலின் தற்போதைய சர்வகட்சி மாநாடை நோக்குவதே சரி. 

ஜனாதிபதி பதவி பறிபோவதற்கு முன்னர் கோதபாய நடத்திய முக்கிய மாநாடு இது. இனப்பிரச்சனைத் தீர்வுக்கென இது ஒழுங்கு செய்யப்படவில்லை. பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணவென நடத்தப்பட்டது இந்த மாநாடு. 

முப்பது வருட யுத்தத்துக்கான காரணத்துக்குரிய விடயங்கள் தீர்த்து வைக்கப்படாமையே பொருளாதார நெருக்கடி உருவாகக் காரணமென தமிழரசுக் கட்சியின் சம்பந்தன் சரியான நேரத்தில் இங்கு தூக்கிப்போட்டார். புலம்பெயர்வாழ் சமூகத்தின் ஒத்துழைப்பை பெறக்கூடிய திட்டமொன்று தங்களிடம் இருப்பதாக சுமந்திரன் தனது பங்குக்கு எடுத்துக் கூறினார். 

இந்த மாநாட்டை சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புறக்கணித்தனர். அன்றைய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவுக்கு தமிழரசுடனான முறுகல் ஆரம்பிக்கப்பட்டு விட்டதென்பதை செல்வம் அடைக்கலநாதனின் புறக்கணிப்பு வெளிக்கொணர்ந்தது. சஜித் பிரேமதாச அணி, அமைச்சரவையிலிருந்து தூக்கியெறியப்பட்ட விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அணி மட்டுமன்றி மனோ கணேசனும் இதனைப் புறக்கணித்தார். 

அதே 23ம் திகதியன்றே கோதாவின் மிரிகான வீட்டுக்கு அருகாமையில் உள்ள நுகேகொடவில் ஜே.வி.பி.யினர் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு அறைகூவல் விடுத்தனர். இதோடு கோதபாயவின் சர்வகட்சி மாநாடு முடிவுக்கு வந்தது. 

ஆனால், அமெரிக்காவும் இந்தியாவும் இதனைப் பற்றிக் கொண்டன. அப்போது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட உயர் அதிகாரி விக்டோரியா நோலன்ட், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் சம்பந்தனும் சுமந்திரனும் கோதாபாயவுடன் தாங்கள் தனியாக நடத்திய பேச்சுவார்த்தையின் நம்பிக்கையை வெளிப்பிடுத்தியிருந்தனர். இவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நான்கு  அம்சங்கள் இணக்கம் காணப்பட்டதாக கோதபாய கூறியதையே அச்சொட்டாக சம்பந்தனும் சுமந்திரனும் பொதுவெளியில் வழிமொழிந்தனர். 

'இரு தரப்புக்கும் இணக்கம் ஏற்பட்டது நல்லது. இனி இவ்விடயத்தில் இந்திய மத்தியஸ்தம் தேவையில்லை. நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளலாம்" என்று கூறிவிட்டு ஜெய்சங்கர் நாடு திரும்பி விட்டார். 

இது இடம்பெற்று ஒரு வருடமாவதற்கு இன்னமும் ஒரு மாதமே இருக்கிறது. அந்த நான்கு அம்சங்களில் ஒன்றுகூட எட்டியும் பார்க்கப்படவில்லை. கண்ட மிச்சம் - கோதபாய பதவி துறந்தது மட்டுமல்ல, அரசியலில் உயர்மட்ட பதவிகளை வகித்த ராஜபக்சர்கள் அனைவரும் கூண்டோடு இறக்கப்பட்டதும்தான். 

வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியதுபோன்று அதே நான்கு அம்சங்களுடன்தான் கடந்த டிசம்பர் 13ல் ரணில் சர்வகட்சி மாநாட்டை ஆரம்பித்தார். எமக்காக இல்லாவிட்டாலும் உலகுக்கு இலங்கை அரசாங்கத்தின் போக்கைக் காட்டுவதற்காக நம்பிக்கையின்றியே இம்மாநாட்டில் பங்குபற்றுவதாகக் கூறிய தமிழர் தரப்பினர், இப்போது அதுதான் நடந்து விட்டதென்று கூறிவருகின்றனர். 

பெப்ரவரி 4ம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன்னர் பிரச்சனைகளை தீர்க்கப்போவதாக கூறிய ரணில், அது முடியாவிட்டால் அதனை பகிரங்கப்படுத்துவேனென்றும் அறிவித்திருந்தார். அன்று, கோதபாயவின் சர்வகட்சி மாநாட்டை பகிஸ்கரித்த அத்தனை சிங்கள அரசியல் தலைவர்களும் (மனோ கணேசன் உட்பட) இப்போது ரணிலின் மாநாட்டையும் பகிஸ்கரிக்கின்றனர். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ஒற்றைப் பனையாக நிற்கும் தமிழரசுக் கட்சி அறிக்கைப் போரில் ஈடுபட்டுள்ளது. மற்றிரு பங்காளிக் கட்சிகளும் மேலும் மூன்று தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து ரணிலையும் தமிழரசுக் கட்சியினரையும் பேச்சுவார்த்தையின் கோலத்தையும் அம்பலப்படுத்தி வருகின்றன. காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் எல்லாமே காற்றோடு காற்றாக போய்விட்டன.

சிலவேளை ஓரிரு அரசியல் கைதிகளை பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னர் ரணில் விடுதலை செய்யக்கூடும். இதனையே இனப்பிரச்சனைத் தீர்வுக்கான முதற்கட்டமென்றும் அவர் பிரகடனம் செய்யலாம். 

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் முதன்முறையாக தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தையும் ஒன்றாக அழைத்து ஒரே மேசையில் அமர்ந்து உரையாடினார். 13ம் திருத்தத்தை ஒன்றுபட்டு ஒரே குரலில் வலியுறுத்துமாறு ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு பாடம் புகட்டுவது போன்று வகுப்பு நடத்தினார். ரணிலைச் சந்தித்தபோதும் அதனையே தாம் அவரிடம் வலியுறுத்தியதாக ஜெய்சங்கர் ஊடகங்களுக்கும் கூறிச் சென்றார். 

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் (?) நடைபெற்றது என்ன. 13ம் திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிவிட்டதாகக் கூறிய ரணில் அதனை நடைமுறைப்படுத்தப்போவதாக சொன்னார். அதற்கு அரசாங்க தரப்பினர் பலர் தங்கள் ஆட்சேபணையைத் தெரிவித்தனர். அப்போது அவர்களைப் பார்த்து 13ம் திருத்தம் வேண்டாமென்றால் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்றி அதனைச் செயற்படுத்தலாமென்று சற்றுக் கோபத்தோடு சொன்னார். 

உண்மையாகவே இதனை எச்சரிக்கைப் பாணியில் சொன்னாரா? அல்லது, 13ம் திருத்தத்தை அரசியல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கு இப்படியொரு வழிமுறை இருக்கென்று எடுத்துக் காட்டினாரா? இதற்கான பதிலுக்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிவராது. 

ரணில் கூறுபவைகளையும், செய்யப்போவதாகச் சொல்பவைகளையும் பார்க்கும்போது ஒன்று நன்றாகப் புலனாகிறது. எக்காரணம் கொண்டும் சமஷ்டி முறையை தான் அமுல்படுத்தப் போவதில்லையென்று கூறியவர், 13 பிளஸ் என்பதை 13 மைனஸ் ஆக்கும் முறையையும் நாசூக்காக சொல்லியுள்ளார். சமஷ்டி இல்லை, 13 பிளஸ் நிச்சயமில்லை, 13 மைனஸ் வழியுண்டு - இனப்பிரச்சனைக்கான தீர்வு பூஜ்யம்தானா? 

No comments