கொள்கை வழியாக இணைய முடியாதவர்கள் தமிழ்த் தேசியத்தை எவ்வாறு காப்பாற்றுவர்? பனங்காட்டான்


கலைஞர் பாணியில் கதிரையைக் கைவிடாது பிடித்திருக்கும் தலைவர்! கூடாரத்துக்குள் தனது வேலையை ஆரம்பித்திருக்கும் ஒட்டகம்!
அன்னத்துக்கு மக்கள் திண்டாட சின்னத்துக்காக நடக்கும் போராட்டம்!

ஒவ்வொரு புத்தாண்டும் பிறக்கும்போது பழையன கழிதலும் புதியன புகுதலும் என கூறுவது வழமையென இவ்வருட ஆரம்பத்தில் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இலங்கை அரசியலைப் பொறுத்தளவில் - இரு தரப்பிலும் பழையனவே நீட்சி பெற்று அறுவடை செய்ய ஆரம்பித்திருப்பதுபோல தெரிகிறது. 

ரணில் விக்கிரமசிங்க அரசு அறிவித்திருக்கும் உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு சகல கட்சிகளையும் உலுப்பி எடுக்க ஆரம்பித்துள்ளது. வெவ்வேறு கட்சிகள் ஒன்றுசேர்ந்து புதுப்புது கூட்டுகளும் கூட்டணிகளும் தேர்தலுக்காக உருவாகி வருகின்றன. 

முக்கியமாக, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பு நாளொரு வண்ணம் புதுப்புது கூறுகளாக அலங்கோலமாகி அசிங்கப்படுகிறது. 

தெற்கைப் பொறுத்தளவில் அரசியலுக்கு அப்பால் - ஓரளவுக்கு அதனோடிணைந்த சில நடவடிக்கைகள் பெருந்தலைகளை உருள வைக்கிறது. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் என்ற உயிர்த்தஞாயிறு நாள் சம்பவம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எழுவர் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளனர். முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன பத்துக்கோடி ரூபாவை நஸ்டஈடு வழங்க வேண்டுமென நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

குண்டுத் தாக்குதல் காலத்தில் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபர், அரச மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதம அதிகாரிகளாகவிருந்த இருவர் என நால்வரும் தனித்தனியாக மொத்தம் 21 கோடி ரூபாவை நஸ்டஈடாக வழங்க வேண்டுமென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி பதவி வகிக்கும்போது கிடைக்கும் அவர்களுக்கான சட்ட விதிவிலக்கு, அவர்கள் ஜனாதிபதி பதவியை இழந்த பின்னர் இல்லாமல் செய்யப்பட்டதால் கிடைக்கும் 'பரிசு' இதுதான் என்பதை மைத்திரிபால சிறிசேன மட்டுமன்றி சகல முன்னாள்களும் அறிந்திருப்பர். ரணில் விக்கிரமசிங்கவும் 'முன்னாள் ஜனாதிபதி' யாகும் வேளையில் இவ்வகை சட்ட நடவடிக்கைகளைச் சந்திக்கும் பேறு பெறுவார். 

மைத்திரிக்குக் கிடைத்த எதிர்பாராத நெருக்கடி போன்று மற்றொரு முன்னாள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவும் இப்போது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ளார். கடந்த வருடம் யூலை மாதம் 22ம் திகதி பொதுமக்கள் எழுச்சிப் போராட்டத்தின்போது இவரது இல்லத்திலிருந்து 17.5 மில்லியன் ரூபா மீட்கப்பட்டது. இது தொடர்பாக இவரிடம் வாக்குமூலம் பெறுமாறு விசேட பொலிஸ்  விசாரணைப் பிரிவுக்கு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

நாட்டைவிட்டுத் தப்பியோடி, பரதேசியாக அலைந்து எந்த நாடும் அடைக்கலம் கொடுக்காததால் மீண்டும் இலங்கை திரும்பிய கோதபாயவுக்கு அமெரிக்கா எந்தவகையிலும் தற்காலிக வசிப்பிட உரிமைகூட இதுவரை வழங்க முன்வரவில்லை. இந்த நெருக்கடி போதாதென்று நிதி மோசடி விசாரணையையும் அவர் சந்திக்க நேர்ந்துள்ளது. 

சமகாலத்தில் கனடிய அரசு இவருக்கும் இவரது அண்ணரான முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கும் பயணத்தடை விதித்துள்ளதுடன், கனடிய சட்ட வரம்புக்குள் இவர்களுக்கிருக்கும் சொத்துகளை சுவீகரிக்கும் அறிவிப்பை விடுத்துள்ளது. 

இவர்களுக்கு 'என்ன காலமோ, என்ன நேரமோ' என்ற பாடலுக்கு விளக்கம் தேடின் எல்லாமே முள்ளிவாய்க்காலின் 'செய்-வினை' என்பதுதான் பதில் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. 

இலங்கையின் ஜனாதிபதிகளாகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிரேமதாச, டி.பி.விஜேதுங்க, சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோதபாய ராஜபக்ச ஆகிய ஏழு பேரில் முதல் மூவரும் இன்று உயிருடன் இல்லை. மிகுதி நால்வரில் மூவர் வெவ்வேறு விடயங்களில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரேயொரு பெண் ஜனாதிபதியான சந்திரிகா மட்டும் இதுவரை எதிலும் அகப்படாதவராக உள்ளார். ரணில்...? காலம் நின்று பதில் சொல்லும்!

இன்னமும் நிச்சயமற்ற நிலையிலிருக்கும் உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு, தமிழர் தாயகத்தின் தலைமை அரசியல் அமைப்பான கூட்டமைப்புக்குள் நீறு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்த நீயா நானா மோதலை, வெட்ட வெளிக்குள் இழுத்து வந்து நேரடி மோதலாக மாற்றி, 'களத்தில் சந்திப்போமா' என்ற சவாலுக்கு கொண்டு வந்துள்ளது. 

ஒருபுறத்தில் தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தை என்ற பச்சைக்கொடியை காட்டியவாறு, தமிழர் தரப்பை பிளந்து மோதவிடும் நிலைமையை உள்ளூராட்சித் தேர்தல் என்ற பெயரில் உருவாக்கியவர் ரணிலே என்பதை இங்கு தவறாது பதிய வேண்டும். 

தள்ளாத வயதிலும், தனித்து எழுந்து நடமாட முடியாத நிலையிலும், அடுத்த மாதம் 90 வயதைத் தாண்டும் வேளையிலும் தலைமையைக் கைவிட விரும்பாத சம்பந்தனும், ''நீ மரம் - நான் காற்று" என்ற பாணியில் சம்பந்தனை ஆட்டிக் கொண்டிருக்கும் சுமந்திரனின் தனிஆவர்த்தனமுமே கூட்டமைப்புக்குள் இருந்த கீறலை ஆழமாக்கி இன்றைய நிலைமையை உருவாக்கியிருக்கிறது என்பது வெளிப்படை. 

இவ்விடத்தில் மூன்று முக்கிய விடயங்களை முன்வைக்க வேண்டியுள்ளது:

1. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உருவாக்கிய நாளிலிருந்து இன்றுவரை அதற்கு அதிகாரபூர்வமாக தலைவர் என்று எவரும் நியமிக்கப்படவில்லை. பங்காளிக்கட்சிகள் இணைந்து எவரையும் அப்படியொரு பதவிக்கு தெரிவு செய்யவும் இல்லை. கூட்டமைப்பு என்பது நாடாளுமன்றத்தில் ஓரணியாக இயங்க வேண்டுமென்பதால் அதன் நாடாளுமன்ற குழுத் தலைவராக ஒருவர் இருக்க வேண்டும். அந்தப் பதவிக்கு மட்டுமே மூப்பு அடிப்படையில் சம்பந்தன் நியமிக்கப்பட்டார். 

2. கலைஞர் கருணாநிதி பாணியில் 'ஐயா' இருக்க விரும்புகிறார் என்று கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி. ஒருவர் இந்தப் பத்தியாளரிடம் தெரிவித்தது ஞாபகம் இருக்கிறது. அதாவது அரச மரியாதையுடன் 21 மரியாதைக் குண்டுகள் வெடிக்க வைத்து தமது இறுதிச் சடங்கு நடைபெற வேண்டுமென்பதற்காகவே சுயமாக இயங்க முடியாத நிலையிலும் கலைஞர் கருணாநிதி இறுதிவரை தலைமைப் பதவியை தம்முடன் வைத்திருந்தார் என்பதை இந்தக் கூற்று தெரியப்படுத்தியது. 

3. ஒட்டகம் தனது தலையைத்தான் முதலில் கூடாரத்துக்குள் நுழைக்கும். பின்னர் படிப்படியாக முழு உடலையும் உள்ளே தள்ளி கூடாரத்தை தம்வயமாக்கி விடும். வேறு வழியின்றி கூடாரத்திலிருந்தவர்கள் வெளியேற நேரும். தேசியப் பட்டியலில் கொழும்பிலிருந்து 'சுமா' உள்ளிறக்கப்பட்டபோது பொதுவாக ஊடக வட்டாரங்களில் இடம்பெற்ற உரையாடல் இது.

இப்போதுள்ள தமிழ்த் தேசிய அரசியல் களம் இங்கு கூறப்பட்டவைகளை நடைமுறையில் காட்டுகிறது. இத்தளம் நாளாந்தம் மாற்றம் பெற்று வருகிறது. ரெலோவையும் புளொட்டையும் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றாது, அவர்களை அவர்களாகவே வெளியேறச் செய்யும் வகையில் உள்வீட்டுக்காரர்கள் சாதுரியமாக வேலைகளைச் செய்தனர். 

வரப்போகும் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதென்பது அக்கட்சியின் தலைமைப்பீடத்தால் எடுக்கப்பட்ட முடிவு. ஆனால், இதனைப் பங்காளிக் கட்சிகளிடம் தெரிவிக்காது சில விடயங்களை பேசி முடிவெடுப்பதுபோல் காட்சி கொடுத்து, தங்கள் முடிவை தமிழரசுக்கட்சி தெரிவித்தது. இதற்குக் கிடைத்த பலாபலனே புளொட்டும் ரெலோவும் தத்தம் வழியே சென்று புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்கும் இறுதி முயற்சிக்கு வழிவகுத்தது. 

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஏற்கனவே இதற்கான வாய்க்காலை வெட்டி நீர் பாய்ச்ச வழி வகுத்துக் கொடுத்திருந்தார். அந்த வழியில் புளொட்டும் ரெலோவும் விக்னேஸ்வரனுடைய அணியும் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்,  சிறிகாந்தா - சிவாஜிலிங்கம் அணியும் சேர்ந்து புதிய கூட்டின் சந்திப்பு சுடச்சுட ஆரம்பமாகி அறிவிப்புகள் தொடர்ச்சியாக வந்தன. இதற்கு முன்னோடியாக யாழ். நகர மேயராகவிருந்த மணிவண்ணன் விக்னேஸ்வரன் அணியோடு இணைந்துவிட்ட தகவல் ஊடகங்களில் படமாகவும் செய்தியாகவும் வந்து அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. 

விக்னேஸ்வரன் தலைமையில் ஐந்து கட்சிகள் இணைந்த புதிய கூட்டணி தனிச்சின்னத்தில் போட்டியிடப் போவதாக வெளியான செய்திகள் வந்த பத்திரிகைகளின் மை காய்வதற்கு முன்னரே, அது பிசுபிசுத்துப் போன செய்தி வந்தது. புதிய கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரனும் மணிவண்ணனும் வெளியேறும் படங்களை வெளியிட்டு பத்திரிகைகள் சலசலப்பை ஏற்படுத்தின. 

புதிய கூட்டமைப்பின் தலைமைப்பதவி அல்லது செயலாளர் பதவி மற்றும் தேர்தல்  சின்னத்துக்கான தெரிவு, இக்கூட்டில் இணைந்த ஜனநாயகப் போராளிகள் மீதான சந்தேகம் என்பவையே புதுமுயற்சி கருவிலேயே கருகிப்போகக் காரணமென விக்னேஸ்வரன் அறிக்கை தெரியப்படுத்தியது. இருந்தாலும் ரெலோவும் புளொட்டும் களைத்துப் போகவில்லை. விக்னேஸ்வரன் மணிவண்ணனைத் தவிர்த்து மிகுதி ஐந்து அணிகளையும் இணைத்து புதிய கூட்டமைப்புக்கு வடிவம் கொடுத்துள்ளனர். இதற்கான சின்னமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காலக்கிரமத்தில் புதிய கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதியப்படுமென்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுமோ இல்லையோ, 'ஒறிஜினல்' கூட்டமைப்பிலிருந்து இன்னொரு கூட்டமைப்பு பிறந்துள்ளது. இது ஆரோக்கியமானதா இல்லையா என்பதை உடனடியாகக் கூறமுடியாது. 

ஆனால், இவ்வாறான போட்டிக் கூட்டமைப்பு தனித்துப் போட்டியிடும் தமிழரசுக் கட்சியை பாதிக்கலாமென்ற அச்சத்தில் புத்திசாலித்தனமான பரப்புரையை தமிழரசார் ஆரம்பித்துள்ளனர். தேர்தலின்போது அதிக ஆசனங்களைப் பெற்று ஸ்திரமான பிரதேச சபைகளை அமைப்பதற்காகவே தனித்தனியாக போட்டியிடுவதாகவும், தேர்தலின் பின்னர் கூட்டமைப்பின் பங்காளிகள் அனைவரும் இணைந்தே இயங்குவர் எனவும் அறிவித்தவாறு கட்டுப்பணங்களை செலுத்தி வருகிறது தமிழரசு. ஒற்றுமை என்ற வார்த்தையை பயன்படுத்தி வாக்குகளை அபகரிக்கும்; ஒருவகை ஏமாற்றுத் தந்திரம் என்றே இதனைக் குறிப்பிட வேண்டும். 

இதனை எழுதும் வேளையிலுள்ள நிலைமையின்படி - உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுமானால், ஒன்றுசேர முடியாத ஒரே கொள்கையை வாய்ப்பேச்சில் வைத்திருக்கும் தமிழரசு, மற்றும் புளொட், ரெலோ, இவர்களுடன் இணைந்த அணிகள் விக்னேஸ்வரன் - மணிவண்ணன் தரப்பு கஜேந்திரகுமாரின் தமிழ்க் காங்கிரஸ் அணி ஒருபுறமாகவும் சிங்கள தேசக் கட்சிகளின் வேட்பாளர்களும், அரச ஆதரவு கட்சிகளின் வேட்பாளர்களும் கொள்கையில்லாத சுயேட்சைக் குழுக்களும் ஒன்றுடனொன்று மோதி குளத்தைக் கலக்குவார்களானால், எந்தக் கொக்குக்கு எந்த இடத்து மீன்கள் கிடைக்குமோ?

ரணிலின் தமிழர் பிரச்சனைக்கான தீர்வு பேச்சுவார்த்தை ஒருபுறத்தே ஒதுக்கப்பட்டு விட்டது. அது தொடர்வதற்கு முன்னராக ரணில் விரும்பும் தமிழ்த் தேசிய பிளவு ஏற்படுத்தப்பட்டு விட்டது. கூட்டமைப்பின் ஆயுட்கால தலைவர், கூடாரத்துக்குள் புகுந்த ஒட்டகம், அங்கிருந்து வெளியேறிய (வெளியேற்றப்பட்ட) தலைகள்,  அன்னத்துக்காகப் போராடும் மக்களை மறந்து சின்னத்துக்காகப் போராடுவது... 

கொள்கை வழியாக ஒன்றுபட முடியாதவர்கள் எவ்வாறு தமிழ்த் தேசியத்தை எதிர்காலத்தில் காப்பாற்றப் போகிறார்கள்?

No comments