கரிநாள்:அணி திரளும் தரப்புக்கள்!



இலங்கையின் சுதந்திர தினமான பிப்ரவரி நாலாம் திகதியைக் கரி நாளாக பிரகடனப்படுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் முடிவுக்கு பல தரப்புக்களும் தமது ஆதரவை வெளியிட்டுவருகின்றன.

உண்மையில் இத்தீவின் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ்த் தேசத்தை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர் தாம் கொண்டிருந்த ஆக்கிரமிப்பு மேலாதிக்கத்தை இத்தீவின் இன்னொரு தேசமாகிய பௌத்த சிங்கள தேசத்திடம் தாரை வார்த்த கரி நாளாகவே பிப்ரவரி நாலாம் திகதியை நாம் கருதுகின்றோம்.

இன்றுவரை இரண்டு லட்சத்துக்கும் மேலான தமிழ் மக்களைக் கொன்றும் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்களை புலம்பெயர வைத்தும் பல்லாயிரம் தமிழர்களை காணாமல் போகச் செய்தும் பல நூறு தமிழர்களை பல்லாண்டுகளாக சிறைகளில் அடைத்தும் உள்ளது சிங்கள தேசம்.அத்துடன் தமிழர்களின் தாயகத்தில் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலங்களை குடியேற்றமுட்பட பலவழிகளிலும் அபகரித்தும் தமிழர்களின் பல ஆயிரம் கோடி செல்வங்களை அழித்துமுள்ளது.அது மட்டுமல்லாது தனிச்சிங்களச்சட்டம், கல்வியில் தரப்படுத்தல், வேலைவாய்ப்புகளில் பாரபட்சம், அபிவிருத்தியில் புறக்கணிப்பு என ஒரு நாடு என தாங்கள் கூறிக் கொள்ளும் இத்தீவில் தமிழர்களை தொடர்ச்சியாக ஓரம் கட்டியும் வந்துள்ளது சிங்கள பௌத்த தேசம் என வடகிழக்கு சிவில் சமூகம் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

தொடர்ந்து வந்த அரசுகள் காலங்காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்போம் எனக்கூறி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட வண்ணம் எம்மை ஏமாற்றியது மட்டுமல்லாது, அக்காலங்களை தமிழர்களின் அடையாளங்களை அழிக்கவும் இனவழிப்புக்கு எதிரான எமது போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதற்கும் பயன்படுத்துவதை  தனது தந்திரோபாயமாகவும் கொண்டுள்ளது. இன்று இலங்கை அரசு மீண்டும் ஒரு தடவை பேச்சுவார்த்தை என்று இனவழிப்பைத் தொடர்வதற்கான கால அவகாசத்தை பெறுவதற்கும் ஈற்றில் எம்மை ஏமாற்றுவதற்கும் முயன்று நிற்கின்றது.

இந்நிலையில் சிறீலங்காவின சுதந்திர தினம் உண்மையில் தமிழர்களின கரி நாள் என்பதே தமிழ்த் தேசத்தின் யதார்த்தமாகும். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள இப்போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவைத் தெரிவித்து நிற்கின்றோம் எனவும் தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.



No comments