சிங்களத்தின் இறையாண்மையை நிலைநாட்ட தமிழ்த் தேசியம் அடகு வைக்கப்படுமா? பனங்காட்டான்


'என்னை நம்புங்கள். முன்நிபந்தனை வேண்டாம். முதலில் பேச்சை ஆரம்பிப்போம்" என்று அழைக்கும் ரணிலை நம்பி, அவருடன் நாலரை ஆண்டுகள் தேநிலவு கழித்து ஏமாந்தவர்கள் இரண்டாம் தேநிலவுக்கு ஏதோவொரு நம்பிக்கையில் ஆயத்தமாகிவிட்டனர். அதற்கான களமே முன்னால் விரி;ந்துள்ளது. 

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழருக்கு எவ்வாறு புராதன வரலாறுண்டோ, அவ்வாறு அவர்களின் உரிமைக்கான பேச்சுவார்த்தைகளுக்கும் உடன்படிக்கைகளுக்கும் தனியான ஒரு வரலாறுண்டு. இதற்கான அகவை 65 ஆண்டுகள்.

இந்த வரலாற்றை அறுந்துவிடாது தொடர்ச்சியாகக் கொண்டு செல்வதற்காக சிங்கள அரசாட்சியினர் காலத்துக்குக் காலம் தமிழர் தரப்போடு பேச்சுவார்த்தையும், உடன்பாடும் - சிலவேளை தேநிலவும்கூட மேற்கொள்கின்றனர். 

இலங்கைத் தமிழரின் அரசியல் தலைமைக்கும் சிங்கள அரசியல் தலைமைகளுக்குமிடையிலான முதலாவது நம்பிக்கை உடன்படிக்கை 1957 யூலை 26ம் திகதி ஒப்பமிடப்பட்டது. அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவும் தமிழரசுக் கட்சியின் தலைவராகவிருந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் இதில் ஒப்பமிட்டதால் பண்டா-செல்வா உடன்படிக்கையென இது பெயர்பெற்றது. 

இந்த ஒப்பந்தத்தின் ஷஆ| பகுதியில், பிரதேச சபைகளை உருவாக்கவும், வடமாகாணத்துக்கு ஒரு சபையும், கிழக்கு மாகாணத்துக்கு இரண்டு அல்லது கூடிய சபைகள் உருவாகவும், மாகாண எல்லைகளைத் தாண்டி இரண்டு அல்லது மேற்பட்ட பிரதேச சபைகள் இணைவதற்கு நாடாளுமன்றத்தில் சட்ட அங்கீகாரம் பெறலாமென்றும் தெரிவிக்கப்பட்டது. 

அதாவது, வடக்கிலும் கிழக்கிலும் உருவாகும் பிரதேச சபைகள் தேவைப்படின் இணைந்து செயற்பட வாய்ப்பளிக்க பண்டா-செல்வா உடன்படிக்கை இடமளித்தது. 

அந்த வேளையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களில் ஒருவராகவிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன இந்த உடன்படிக்கையை எதிர்த்து பௌத்த பிக்குகளை  அணியாகச் சேர்த்து கண்டி யாத்திரையை மேற்கொண்டதும், இதனைக் கண்டு அஞ்சிய பண்டாரநாயக்க ஒருதலைப்பட்சமாக உடன்படிக்கையைக் கிழித்து எறிந்ததும், தமிழர் ஏமாற்றப்பட்ட வரலாற்றின் முதலாவது அத்தியாயம். பின்னாளில் பண்டாரநாயக்கவை வேறு காரணத்துக்காக ஒரு பௌத்த பிக்குவே சுட்டு கொலை செய்தார். இதுவே இலங்கையின் முதலாவது அரசியற்கொலையாகும். 

1960ம் ஆண்டு பொதுத்தேர்தலையடுத்து இலங்கையின் இரண்டு சிங்கள பிரதான கட்சிகளான சிறிலங்கா சுதந்திர கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக் கட்சியின் ஆதரவைக் கோரின. அவ்வேளை குறைந்தபட்ச கோரிக்கையாக நான்கு அம்சங்களை தமிழரசுக் கட்சி முன்வைத்தது. 

ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு பதிலாக தமிழ் பேசும் மக்களின் பிரதேச சுயாட்சியை ஏற்றுக்கொள்ளும் இணைப்பாட்சி முறை ஏற்படுத்தப்பட வேண்டும், தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசத்தில் திட்டமிட்டு இடம்பெறும் சிங்கள குடியேற்றம் நிறுத்தப்பட வேண்டுமென்பவை இவற்றுள் முக்கியமானவை. (60 ஆண்டுகளைத் தாண்டியும் அதே இடத்திலேயே இன்றும் தமிழினம் போராடிக் கொண்டிருக்கிறது). 

1965ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி தமிழரின் சில நிபந்தனைகளை கொள்கையளவில் ஏற்க இணங்கியது. இதன் அடிப்படையில் அதன் தலைவர் டட்லி சேனநாயக்கவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகமும் உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர். டட்லி-செல்வா என்ற பெயரிலான இந்த உடன்படிக்கையில் மாவட்ட சபைகளை அமைக்க இணக்கம் காணப்பட்டது. டட்லியின் ஐந்தாண்டு ஆட்சி முடியும்வரை தமிழரசுக் கட்சி அதற்கு ஆதரவு வழங்கியதாயினும், உடன்படிக்கை நிறைவேறாத ஒன்றாகவே முடிவு பெற்றது. தமிழ் மக்கள் சிங்கள் ஆட்சியினரால் ஏமாற்றப்பட்ட இரண்டாம் கட்டம் இது. இன்றுவரை இந்த அரசியல் நாடகமே வெவ்வேறு பெயர்களில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. 

1987 யூலை 29ல் இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்க்கவென இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவம் ஓர் உடன்படிக்கை செய்தனர். இதன்வழியாக அரசியலமைப்பில் 13வது திருத்தம் ஏற்படுத்தப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. 

1957ம் ஆண்டில் பண்டா-செல்வா உடன்படிக்கை ஏற்றுக்கொண்ட பிரதேச சபை முறைமையை ஏற்றுக்கொள்ளாது, அதனை எதிர்த்து கண்டி யாத்திரை மேற்கொண்டு வெற்றிபெற்ற ஜெயவர்த்தன, முப்பது ஆண்டுகளின் பின்னர் - 1987ல் இலங்கை-இந்திய உடன்படிக்கையின் கீழ் அதிகார பரவலாக்கலுக்கென மாகாண சபைகளை உருவாக்கவும், வடக்கு கிழக்கு மாகாண சபைகளை இணைத்து செயற்படுத்தவும் எவ்வாறு இணங்கினர் என்பது பலரதும் புருவத்தை உயர்த்தும் முக்கியமான கேள்வி. 

இதற்கான பதிலை ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1992ம் ஆண்டில் எழுதி வெளியிட்ட அவரது நினைவுப் பகிர்வான 'Men and Memories' என்ற நூலின் 109ம் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: 

''I Suggested that the temporary joinder should have a time-limit and that a referendum be held in the

Eastern Province to decide whether or not people there wished their Province to be linked to the

Nothern Province. The Indians agreed to this. I took a caclulated risk, as I had in 1957, opposed the

Bandaranaike-Chelvanayagam Packed on this very issue. There was however the escape clause of a

referendum which I hope would mollify critics of this move, because the Sinhalese and Muslims who

together constituted 60 percent of the population of the Eastern Province would not willingly accept this

merger and that at a referendum the 60 percent would win."

இதன் தமிழாக்கம் வருமாறு:

'தற்காலிக இணைப்புக்கு காலவரையறை இருக்க வேண்டுமெனவும், வடக்கு மாகாணத்துடன் இணைந்து இயங்குவதா இல்லையா என்பதை முடிவெடுக்க கிழக்கு மாகாண மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு (சர்வஜன வாக்கெடுப்பு) நடத்தப்பட வேண்டுமெனவும் நான் ஆலோசனை கூறினேன். 1957ம் ஆண்டு பண்டாரநாயக்க - செல்வநாயகம் உடன்படிக்கையின் இதே விடயத்தில் (இணைப்பு) நான் எவ்வாறு ஒரு கணிப்பீட்டு அபாயத்தை முடிவெடுத்து எதிர்த்துச் செயற்பட்டேனோ அதுபோலவே இங்கும் (கருத்துக் கணிப்பீட்டில்) முடிவெடுத்தேன். கருத்துக் கணிப்பீட்டின் முடிவு பற்றி எனக்கொரு நம்பிக்கை இருந்தது. கிழக்கு மாகாணத்தின் சனத்தொகையில் சிங்களவரும் முஸ்லிம்களும் இணைந்து 60  வீதமாக இருந்தமையால் வடக்குடன் இணைவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். எனவே கருத்துக் கணிப்பில் 60 வீதமே வெற்றிபெறும்".

ஜே.ஆர்.ஜெயவர்த்தன எப்போதும் குள்ளநரித்தன்மை கொண்டவர் என்பதை இவ்விடயத்தில் அவரே தமது கூற்றினூடாக நிரூபித்துள்ளார். வடக்கிலும் கிழக்கிலும் மாகாண சபைகள் அமைக்கப்பட்டனவாயினும் அவைகளை இணைப்பதற்கு ஒருபோதும் கருத்துக் கணிப்பு இடம்பெறவில்லை. அதுமட்டுமன்றி இலங்கையின் உச்ச நீதிமன்றம் சட்ட நுணுக்கத்தை முன்னிறுத்தி இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்ட இணைப்பை ரத்தாக்கி விட்டதையும், இப்போது பேச்சுவார்த்தை முயற்சியில் ஈடுபடும் தமிழர் தரப்பினர் கவனத்தில் கொள்ளவேண்டும். 

1987ம் ஆண்டுக்குப் பின்னர் கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்களை கவனத்தில்கொண்டு, தற்போது கிழக்கு மாகாண மக்களிடையே ஏதாவதொரு காரணத்தையொட்டி கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்படுமானால் அதன் முடிவு எவ்வாறு அமையுமென்பதை இலகுவாக ஊகித்துக் கொள்ளலாம். 

கடந்த மூன்று தசாப்தங்களாக இனப்பிரச்சனைத் தீர்வுக்கென இடம்பெற்ற சந்திப்புகளும் பேச்சுவார்த்தைகளும் புதிய வரலாறு. தாயகத்தில் வாழ்பவர்கள் மட்டுமன்றி, புலம்பெயர்ந்தும் புலன்பெயராது வாழும் தமிழ் மக்களும் இவ்விடயத்தில் சமபங்காளர்களாக இருக்கிறார்கள். நிகழ்கால சாட்சிகளாக ஜெனிவா அமர்வு, அதன் தீர்மானங்கள், சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்பவைகளை குறிப்பிட முடியும். 

நாடாளுமன்றத் தேர்தலில் படுகுப்புற விழுந்தபோதிலும், தேசியப் பட்டியல் ஊடாக எம்.பியாகி, அறகலய போராட்டத்தின் சின்னமாக முதலில் பிரதமராகி பின்னர் ஜனாதிபதியாகியுள்ள ரணில் விக்கிரமசிங்க தமது பங்குக்கு தமிழர் தரப்போடு பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளார். 2002 முதல் 2004 வரை விடுதலைப் புலிகளோடு சர்வதேச நாடுகளில் ஆறு சுற்றுப் பேச்சுகளை நடத்தி வரலாற்றில் பதிவுக்குரியவரான ரணில் இப்போது புதிய தோற்றத்தில் சமாதான தேவதையாக காட்சி கொடுக்கிறார். இலங்கையில் அனைத்துக்குமே தட்டுப்பாடு எனும் இன்றைய சூழலில், இனப்பிரச்சனைக்கு மூன்று மாதங்களில் தீர்வு காணப்போவதாக அதே ரணில் இப்போது உறுதியும் கூறுகிறார். 

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க ஏற்றுக்கொண்ட பிரதேச சபை முறைமை, டட்லி சேனநாயக்க முன்மொழிந்த மாவட்ட சபை முறைமை, இலங்கை-இ;ந்திய ஒப்பந்தத்தின் கீழ் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒப்புக்கொண்டு அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை, சந்திரிகா குமாரதுங்கவின் தீர்வுப்  பொதியில் இடம்பெற்ற பிராந்தியங்களின் ஒன்றியம் என்பவைகளின் வரிசையில் ரணில் எதனை முன்வைக்கப் போகிறார்?

மறுபுறுத்தில், சமஷ்டி கோரும் தமிழர் தரப்பினர் சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா, கனடா என்ற எந்த நாட்டின் அரசியல் யாப்பை முன்வைக்கப் போகிறார்கள்?  மாநிலங்களை விரும்பும் நேரத்தில் கலைக்கும் ஆளுமை அதிகாரத்தைக் கொண்ட இந்திய அரசியலமைப்பை நாடுவார்களா?

'என்னை நம்புங்கள். முன்நிபந்தனை வேண்டாம். முதலில் பேச்சை ஆரம்பிப்போம்" என்று அழைக்கும் ரணிலை நம்பி, அவருடன் நாலரை ஆண்டுகள் தேநிலவு கழித்து ஏமாந்தவர்கள் இரண்டாம் தேநிலவுக்கு ஏதோவொரு நம்பிக்கையில் ஆயத்தமாகிவிட்டனர். அதற்கான களமே முன்னால் விரி;ந்துள்ளது. 

சிங்கள தேசியத்தின் இறையாண்மையை நிலைநாட்ட, தமிழ்த் தேசியம் அடகு வைக்கப்படுமா?

No comments