தமிழரை மீண்டும் எத்திப் பிழைக்க பேச்சுவார்த்தைப் பொறிக்கிடங்கு! பனங்காட்டான்


ஒரு மேசையும் கதிரையும் வாங்கக்கூட அதிகாரமில்லாத மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவராக இருந்து பயனில்லை என்று கூறி 1983ல் பதவி துறந்தவர் அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் சு.நடராஜா. நாற்பது வருடங்களின் பின்னர் அதே மாவட்ட அபிவிருத்தி சபையை தமிழர் பிரச்சனைக்கான தீர்வாக தலையில் கட்டிவிடவா தமிழர் தரப்புடன் ரணில் விக்கிரசிங்க பேசத் துடிக்கிறார். அப்படியானால் 13வது திருத்தத்துக்கும் மாகாண சபை முறைமைக்கும் முடிவு வருகிறதா?

மாகாண சபை, மாவட்ட அபிவிருத்திச் சபை, உள்;ராட்சிச் சபை, நாடாளுமன்றம், ஜனாதிபதி என்பவற்றுக்கான தெரிவுமுறை அல்லது தேர்தல்கள் என்பவை இலங்கையின் அரசமைப்பு நிர்வாகத்துக்குள் இப்போது அதிகம் பேசப்படுபவை. 

தமிழரின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற அல்லது இனப்பிரச்சனைக்கு 'சகல தரப்பினரும்' இணங்கும் தீர்வுகாண மேற்சொன்ன ஐந்து அடுக்கு நிர்வாக கட்டமைப்புகளுக்குள் ஏதாவது ஒன்று நியாயமானதாக செயற்படுகிறதா என்ற கேள்வியுடன் தமிழினம் விழி பிதுங்கி நிற்கிறது.

தமிழ்த் தேசிய தலைமைகள் என்று கூறப்படுபவை தங்களுக்குள் ஒன்றுபட்டு சரியான தீர்வு எதுவென்று கூடி முடிவெடுக்காத வரைக்கும், சிங்கள தேசத்துக்கு காலத்தை இழுத்தடிப்பதற்கான நல்ல வாய்ப்புண்டு. 

எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதியான இலங்கையின் சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சனைக்கு ஏதோவொரு தீர்வு காணப்போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். இதற்கு சிங்களத் தரப்பிலிருந்து நாட்டைக் கூறுபோடும் திட்டமெனவும் தமிழருக்கு தனி நாடு அமைக்கும் வாய்ப்பு எனவும் சில குரல்கள் எழுந்துள்ளன. 

சிங்கள பௌத்தம் என்ற இனவாதத்தை மீண்டும் கிளர்ந்தெழச் செய்ய எடுக்கப்படும் முயற்சி இது என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தச் சூழலில்தான் மாவட்ட அபிவிருத்திச் சபை என்ற குரல் மீண்டும் எழும்ப  ஆரம்பித்துள்ளது. 

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வந்த 13வது திருத்தமே மாகாண சபைகள் உருவாகக் காரணம். கடந்த 35 ஆண்டுகளில் வடமாகாண சபை ஐந்து ஆண்டுகள் மட்டுமே இயங்க முடிந்தது. ஆனால் மற்றைய எட்டு மாகாணங்களிலும் மாகாண சபை நிர்வாகம் தடங்கலின்றி முப்பதாண்டுகள் இடம்பெற்றது. 

புதிய தேர்தல் சட்டம் நிறைவேறிய பின்னரே மீண்டும் மாகாண சபைகளுக்குத் தேர்தல் என்பது ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது. அதேசமயம் மாகாண சபைகளுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. 

மாகாண சபை உறுப்பினர்களை அந்தந்த மாகாணங்களிலுள்ள உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களைக் கொண்டு இயங்க வைக்கும் யோசனை ஒன்றை ரணில் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்ததை பலரும் மறந்துவிட்டதுபோலத் தெரிகிறது. இதற்கு இயைவாக, தற்போது எண்ணாயிரமாக இலங்கை முழுவதும் உள்ள உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை நாலாயிரமாக்க - அதாவது ஐம்பது வீதத்தினால் குறைக்கும் உத்தேசத்தையும் ரணில் தெரிவித்திருந்ததை நினைவுக்குட்படுத்தப்பட வேண்டியுள்ளது. 

இவ்விடயத்தில் இறுதியாக வெளிவந்துள்ள அறிவிப்பே, மாவட்ட அபிவிருத்திச் சபைகள் என்பது. நாடாளுமன்ற உரையின்போது இதனை முன்மொழிந்தவர் தற்போது எம்.பியாகவிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. உடனடியாக, இந்த யோசனையைத் தாம் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார் இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. 

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திச் சபைகளா? ஒன்பது மாகாண சபைகளுக்குப் பதிலாக இருபத்தைந்து மாவட்ட அபிவிருத்திச் சபைகளா? அப்படியானால் மீண்டும் மாவட்ட அமைச்சர்கள் நியமனமா? இப்படியான கேள்விகள் அங்குமிங்கும் எழும்பியுள்ளன. 

'இல்லையில்லை. அப்படியாக ஜனாதிபதி சொல்லவில்லை. மாகாண சபை கட்டமைப்புக்குள் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை அமைக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டது" என அலறியடித்துக் கொண்டு ஜனாதிபதி அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு நிலைமையைச் சமாளிக்க முயன்றது. 

மைத்திரி என்ன சொன்னார், ரணில் என்ன கருதினார், அல்லது இவர்கள் இருவரும் ஏற்கனவே இதுபற்றி என்ன திட்டம் உருவாக்கினார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் ஒரு விடயம் மட்டும் அம்பலத்துக்கு வந்துவிட்டது. ஏதோவொரு வகையில் இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக மாவட்ட ரீதியாக அபிவிருத்திச் சபைகளை உருவாக்க எங்கோ முடிவெடுக்கப்பட்டு விட்டது. 

இதனை எழுதும்வரை மாவட்ட அபிவிருத்திச் சபைகள் உருவாகுவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எதனையும் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முக்கியமான ஒரு விடயத்தை பகிரங்கப்படுத்தி அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். 

கடந்த மே மாதம் 12ம் திகதி பிரதமர் பதவி ஏற்பதற்கு முதல் நாள் ரணில் விக்கிரமசிங்க தம்மை அழைத்து இனப்பிரச்சனை பற்றி பேசியதாகவும், தீர்வு சமஷ்டி அடிப்படையில் அமைய வேண்டுமென்று தாம் வலியுறுத்தியதாகவும், அது நடைமுறைக்குச் சாத்தியமில்லையென கூறிய ரணில் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் பற்றியே கூறியதாகவும் கஜேந்திரகுமார் இப்போது தெரிவித்துள்ளார். 

அத்துடன் மாவட்ட அபிவிருத்திச் சபை யோசனை தம்முடையதல்லவென்றும், மைத்திரிபால சிறிசேன கூறியதை பரிசீலிக்கத் தயார் என்றே தாம் கூறியதாகவும் ரணில் விக்கிரமசிங்க இப்போது கூறுவது அப்பட்டமான பொய் என்றும் கஜேந்திரகுமார் அழுத்திக் கூறியுள்ளார். 

ஆறு மாதங்களுக்கு முன்னர் ரணில் கூறிய மாவட்ட அபிவிருத்திச் சபை விடயத்தை இதுவரை காலமும் கஜேந்திரகுமார் எதற்காக வெளியில் தெரிவிக்காது மறைத்து வைத்திருந்தார் என்ற கேள்வி இங்கே அவரது பதிலுக்காக முன்வைக்கப்படுகிறது. 

ரணிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் சேர்ந்து சமஷ்டி என்று கூறிக்கொண்டு ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் மக்களை முடக்க சதி செய்கின்றனர் என்று குற்றஞ்சாட்டும் கஜேந்திரகுமார், அதன் பின்னணியில் மாவட்ட அபிவிருத்திச் சபை இருக்கிறது என்பதை ரணில் வாயால் அறிந்து கொண்டும் இதுவரை மறைத்து வைத்திருந்ததிலும் ஏதோவொரு திட்டம் இருப்பதாகவே தெரிகிறது. 

மாவட்ட அபிவிருத்திச் சபை என்ற விவகாரத்தை அணுகுவதென்றால், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்துக்கு நாம் செல்ல வேண்டும். 1977ல் இவரது தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. வடக்கு கிழக்கில் தமிழர் விடுதலை கூட்டணி பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றியதால் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான சிறிலங்கா சுதந்திர கட்சி படுதோல்வி அடைந்ததால் தமிழர் விடுதலை கூட்டணிக்கு இந்தக் குருட்டு நல்வாய்ப்பு| கிடைத்தது. 

1977ல் பிரதமராகி 1978ல் ஜனாதிபதியான ஜே.ஆர்., தமிழர் விடுதலை கூட்டணியுடன் இதுவரை வெளியில் தெரியவராத ஏதோ ஒரு அடிப்படையில் அவர்களை மாவட்ட அபிவிருத்தி சபைக்கு இணங்க வைத்தது. 1977 தேர்தலில் கூட்டணி தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தே அமோக வெற்றி பெற்றதாயினும் ஜே.ஆரின் வலைக்குள் சிக்கி மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் போட்டியிட்டது. 

1981ல் இடம்பெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட சபைத் தேர்தலில், இதனைக்  கைப்பற்றிய கூட்டணியின் வேட்பாளரான 'பொட்டர்' என அழைக்கப்பட்ட முன்னாள் செனட்டர் சு.நடராஜா தலைவரானார். ஆனால், 1983ல் இப்பதவியை அவர் துறந்தார். தமது அலுவலகத்துக்கு தேவையான மேசையும் கதிரையும் வாங்குவதற்குக் கூட அதிகாரமில்லாத மாவட்ட சபைத் தலைவர் பதவி தேவையில்லையென்று தமது பதவி விலகல் கடிதத்தில் அவர் தெரிவித்ததை இப்போது நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். 

இவ்வாறு அதிகாரங்கள் ஏதுமில்லாத - வெறும் பெயர்ப்பலகை மட்டும் கொண்ட மாவட்ட அபிவிருத்திச் சபையின் பிதாமகர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. தமிழரின் கனவாக தேர்தல் காலத்திலிருந்த தனிநாடு என்ற உரிமைக் கோரிக்கையை மாவட்ட சபைக்குள் தள்ளி, கூட்டணியின் முதுகில் ஏறி சவாரி செய்தவர் இவர். 1983ன் பின்னர் வட்டமேசை மகாநாடு என்று கூறி கூட்டணியினரை ஏமாற்றி அதில் சுவை கண்டவர் ஜே.ஆர். 

இவரது அரசியல் வாரிசும், பெறாமகனுமான ரணில் விக்கிரமசிங்க அதே மாவட்ட அபிவிருத்திச் சபையை தூசு தட்டி எடுத்து தங்கத்தட்டில் வைத்து தமிழருக்குக் கொடுக்க எத்தனிப்பது புதினமானதல்ல. ஜே.ஆர். அன்று அ.அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியை எவ்வாறு ஏமாற்றி அரசியல் செய்தாரோ அதேபாணியில், இன்று சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை ரணில் ஏமாற்றுவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதனால்தான் சர்வதேசத்தின் பங்களிப்பு தமிழர் பிரச்சனைத் தீர்வுக்கு தேவையென்று சம்பந்தன் கோருகிறார் போலும். 

மாவட்ட அபிவிருத்திச் சபை யோசனை பற்றி ரணில் கூறியதாக கஜேந்திரகுமார் கூறியிருப்பது உண்மையானால், கூட்டமைப்பு அமைதி காக்காது தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வெளிப்படுத்த வேண்டியது கட்டாயம். 

நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றுவதன் ஊடாக மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தல்கள் பின்போடப்படப் போவது நிச்சயமாகிவிட்டது. இந்த நிலையில் தமிழர் தரப்பை பேச்சுக்கு வருமாறு அழைத்துள்ள ரணில், இதற்கு முன்நிபந்தனை எதனையும் அவர்கள் வைக்கக்கூடாதென்று அறிவித்துள்ளதை கவனிக்க வேண்டும். 

ஏற்கனவே சிங்களத் தலைவர்களுடன் - முக்கியமாக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது விடுதலைப் புலிகள் வெளிநாடுகளில் ஆறு சுற்றுப் பேச்சுகள் நடத்தி தோல்வி கண்ட வரலாறு உண்டு. அதற்கு முன்னரும் பல பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் வழியாக ஏமாற்று அனுபவம் பெற்றவர்கள் தமிழர் தரப்பு. 

இதனால் இப்போது பேச்சுவார்த்தைக்கு மூன்று முக்கியமான அம்சங்களை தங்கள் கோரிக்கையாக தமிழர் தரப்பு முன்வைத்திருப்பதில் என்ன தவறு? இதனை முன்நிபந்தனையாகப் பார்க்காது பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கும் தரப்பினரின் நிகழ்ச்சி நிரலாகவே அழைப்பவர்கள் பார்க்க வேண்டும். 

மேசையில் ஒரு நிகழ்ச்சி நிரல் இல்லாது எந்தக் கூட்டத்தையும் நேர்த்தியாக ஆரம்பிக்க முடியாது, நிறைவேற்றவும் முடியாது. சர்வதேசத்தின் பார்வைக்கு தமிழர் தரப்புடன் நேரடியாக பேசுவதாகக் காட்ட மட்டுமே தேவையென்றால் அதற்கு நிகழ்ச்சி நிரல் தேவையில்லை. ஆனால் தமிழர் தரப்பு இம்முறையாவது ஒரு தீர்வு காணப்பட வேண்டுமென்ற விருப்பின் அடிப்படையில், ஆகக்குறைந்த - நிறைவேற்றப்படக்கூடியதான மூன்று கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மேசையில் வைத்துள்ளது. அவ்வளவுதான்!

பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலைக் கண்டே கலக்கமடையும் ஜனாதிபதி ரணில் ஆத்மசுத்தியாக பேச்சுவார்த்தையை முன்னெடுப்பார், புரையோடிப்போன இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவார் என்று எவ்வாறு நம்புவது?

தமிழரை எத்திப் பிழைத்து தமது சிம்மாசனக் கதிரையை இறுகப் பற்றவே பேச்சுவார்த்தையை அதற்கான உபாயமாக ரணில் பயன்படுத்துகிறார் என்றால், தமிழர் தரப்பு அதனைத் தெரிந்து கொண்டும் அந்தப் பொறிக்கிடங்குள் வீழ்ந்துவிடாதிருக்க தயாராக வேண்டும். 

No comments