ரணிலுடன் பேச புரோக்கர் வேண்டாம்!இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அது பற்றி முடிவுகளை அறிவிக்க சொல்ஹெய்முக்கு எந்த அருகதையும் இல்லை. அவர் ஒரு நாட்டினுடைய பிரதிநிதியோ அல்லது ஒரு ராஜதந்திரியோ அல்ல. அவருக்கு இட்ட பணியை அவர் செய்வதே சாலச் சிறந்ததாகும். அதை விடுத்து தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தமான விடையங்களில் அழையா விருந்தாளியாக கருத்துச் சொல்வது அவசியம் அற்றது என டெலோ தெரிவித்துள்ளது

இன்றைய அரசியல் சூழலையில் எரிக் சொல்ஹெய்மினுடைய தகுதி என்ன? எந்த நாட்டினுடைய பிரதிநிதியாக அவர் செயல்படுகிறார்? யாருடைய தூண்டுதலில் தமிழ் மக்களின் அரசியல் விடயங்கள் பற்றி கருத்து கூற முற்படுகிறார்? அல்லது யாரைத் திருப்திப்படுத்த முனைகிறார்? என்ற கேள்விகளுக்கு பதிலளிப்பாரா?


மேலும் அவருடைய ஆலோசனையோ தலையீட்டையோ கருத்துக்களையோ தமிழ்த் தலைவர்கள் யாரும் கோரவில்லை. யுத்தம் முடிவடைந்த பின் இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் நீதி, மனித உரிமை, நல்லிணக்கம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்கதையாகி பல சிரமங்களை எதிர்கொண்ட பொழுது இப்போது கருத்துச் சொல்பவர்கள் எங்கு சென்றார்கள்?

ஒருமித்த நிலையில் தமிழ் தலைவர்கள் பயணிக்காமல் தனித்தோட முயற்சி செய்வதாலேயே இப்படியான கருத்துக்களை சிலர் சொல்வதும் தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளி விடுவதுமாக வரலாறு கடந்திருக்கிறது.

காலம் காலமாக புரையோடிப் போன தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எப்படியாக முன் நகர்த்த வேண்டும் என்பதில் தமிழ் தலைவர்கள் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டியுள்ளனர். ஆகவே எரிக் சொல்ஹம் அவர்கள் தன்னுடைய உத்தியோபூர்வமான பணி எதுவோ அதைச் செவ்வனே செய்யுமாறு கோருகிறோம் என டெலோ தெரிவித்துள்ளது.

No comments