ஜனவரி மாதம் 18:பரிசீலனைக்கு!



உள்ளூராட்சி மன்ற தேர்தலை விரைவாக நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

பேராசிரியர் G.L.பீரிஸ், அநுர பிரியதர்சன யாப்பா, தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெல்ல, M.A. சுமந்திரன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, குமுதினி விக்ரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் குறித்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

மனுகளில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கு இந்த விடயம் தொடர்பில் அறிவித்தல் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடுத்த வருடத்தின் முதலாவது காலாண்டிற்குள் நடத்த வேண்டும் என்றாலும், அதனை பிற்போடுவதனூடாக நாட்டு மக்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படுவதாக தெரிவித்து குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

No comments