சினிமா எங்கள் பண்பாட்டை, கலாசாரத்தை சிதைப்பதாக அமைந்து விடக்கூடாது

ஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத் தொடங்கியிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகின்றது. அதனால்

இங்கிருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் என தான் நம்புவதாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். தந்தை செல்வா கலையரங்கில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ஈழத்து சினிமா கலைஞர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வான ‘குவியம் விருதுகள் 2022’ இல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

‘நான் பெரிதாக சினிமா பார்ப்பது கிடையாது. இங்கு இன்று திரையிடப்படும் காட்சிகளைப் பார்க்கும் போது இந்த மண்ணிலே கமலஹாசன்களும், ஏ.ஆர்.ரஹ்மான்களும், பிரபுதேவாக்களும் பிறந்து விட்டார்கள் என எண்ணத் தோன்றுகின்றது. 

மிகவும் பிரமிப்பாக இருக்கின்றது. உண்மையிலேயே ஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத்தொடங்கியிருக்கின்றது என்று தான் நான் நினைக்கின்றேன். 

அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

சினிமா மீதான பற்றுக் காரணமாகவும், ஆர்வம் காரணமாகவும், நீங்கள் இந்த செயற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தாலும்,  இதன் மூலம் பெரியளவில் வருமானம் ஈட்ட முடியாது என நான் நினைக்கின்றேன். 

எதிர்காலத்திலே வர்த்தக ரீதியான சினிமாவையும் இங்கு உருவாக்க வேண்டும். இந்த துறையில் நின்று பிடிப்பது என்பது தான் மிக முக்கியமாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

எங்களுக்குள்ளும் கலைஞர்கள் இருக்கிறார்கள், திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை உலகத்திற்குச் சொல்ல வேண்டும்.

ஈழத்தில் இருந்தும் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. நம்பிக்கையோடு போராடுங்கள். நிச்சயம் சிகரம் தொடுவீர்கள்.

ஈழத்து சினிமாவை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்போடு போராடிக்கொண்டிருக்கும் அத்தனை கலைஞர்களிடமும் ஒரு வேண்டுகோளை நான் விடுக்கின்றேன்.

சினிமாவில் நல்லதும் இருக்கின்றது கெட்டதும் இருக்கின்றது. சினிமா எங்களை வளப்படுத்தவும் முடியும் அழித்தொழிக்கவும் முடியும். 

சினிமா எங்கள் பண்பாட்டை சிதைத்துவிடும், உரிமைக்கான எம் தாகத்தை தணித்து விடும் என்ற காரணத்திற்காக ஒரு காலத்தில் இங்கு இந்திய சினிமா படங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன.

யுத்தத்திற்கு பின்பு எங்கள் சமுதாயம் பண்பாட்டை இழக்கின்றதா? கலாசாரத்தை இழக்கின்றதா? என்ற கவலை எல்லோர் மனதிலும் எழுந்து நிற்கின்றது. 

இந்த சினிமா எங்கள் பண்பாட்டை, கலாசாரத்தை சிதைப்பதாக அமைந்து விடக்கூடாது. மாறாக எம் சமுதாயத்தை வளர்த்தெடுக்கும் முகமாக ஈழத்து சினிமாவை கட்டமைக்க வேண்டும். எதிர்கால சந்ததியை வளர்த்தெடுக்கும் விதமாக இந்த சினிமாவை நாங்கள் பயன்படுத்த வேண்டும்’ என்றார்.

அதேவேளை குவியம் விருது விழாவில் போட்டிகள் மூலம் தெரிவு செய்யப்பட்ட 28 கலைஞர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டதுடன், 17 சினிமா கலைஞர்களுக்கு விசேட விருதுகளும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 

அதுமட்டுமல்லாது ஈழ சினிமா துறையில் பல வருடங்களாக பணியாற்றிக் கொண்டிருக்கும் பிரான்சிஸ் ஜூல்ஸ் கொலினுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

செய்தி: பு.கஜிந்தன்

No comments