நாயுடன் சேர்ந்தால் உண்ணிதான் மிஞ்சும்! நரியுடன் சேர்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும்! பனங்காட்டான்


சிறிமாவோவின் அரசியலமைப்பு, ஜே.ஆரின் அரசியலமைப்பு, சந்திரிகாவின் பிராந்திய ஒன்றியத் தீர்வு, நல்லாட்சிக் கால அரசியல் வரைபு, கோதாவின் புதிய அரசியலமைப்புத் திட்டம் அனைத்துமே தமிழருக்கு நிவாரணம் அளிக்காத நிலையில், ரணிலின் புதிய அரசியலமைப்பு தமிழருக்கு தீர்வு தருமென நம்ப இடமுண்டா?

மக்களால் தெரிவு செய்யப்படாத முதலாவது இலங்கை ஜனாதிபதி என்ற புகழ் கொண்ட ரணில் விக்கிரமசிங்க, தமிழர் பிரச்சனைக்கு(?) தீர்வு காணப்போவதாக அறிவித்ததையடுத்து, தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை உள்ளும் புறமும் மோதிக் கொள்ளும் நிலைமையை கச்சிதமாக ஆரம்பித்து வைத்துள்ளார். 

எந்த விடயத்தை எடுத்தாலும் எதிர்தரப்பை பலவீனப்படுத்தி, அதனூடாக தம்மைப் பலப்படுத்துவதில் கைதேர்ந்தவர் என்பதை தமிழர் விடயத்திலும் ரணில் நிலைநாட்டியுள்ளார். கடந்த நான்கு மாதங்களில் இடம்பெற்ற பல விடயங்களை மையப்படுத்தி இதனைக் குறிப்பிடலாம். 

தம்மை ஜனாதிபதி கதிரைக்குக் கொண்டு வந்த பொதுஜன பெரமுனவுடனும், தம்மை அந்தக் கதிரையிலிருந்து இழுத்து விழுத்த முனையும் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியுடனும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விடயங்களை சாம்பிளாகப் பார்க்கலாம். 

வரவு செலவுத்திட்டத்துக்கு முன்னர் புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டுமென்றும், அதில் தாங்கள் குறிப்பிடுபவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமெனவும் பெரமுன வலியுறுத்தி வருகிறது. இதற்கு இணங்கும் நிலையில் ரணில் இல்லை. அப்படியென்றால் வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க முடியாதென்று பெரமுன அச்சுறுத்தியது. 

இதற்கு ரணில் சொன்ன பதில் - 'அப்படியென்றால் நீங்கள்தான் வீட்டுக்குப் போவீர்கள்" என்பது. இதன் அர்த்தம் வரவு செலவுத் திட்டம் தோல்வியடையுமென்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படும்போது எம்.பிக்கள் தான் பதவி இழப்பர். ஜனாதிபதி அல்ல என்பது. 

சில நாட்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனிமையில் சந்தித்து உரையாடினார். வரவு செலவுத் திட்டம், நாட்டின் பொருளாதார நிலைமை, சர்வதேச கடனுதவி விபரங்கள் பற்றி அலசிய பின்னர், சந்திப்பின் முக்கிய சமாசாரத்துக்கு சஜித் தாவினார். அமைச்சர் பதவிகளை வழங்கி தமது கட்சிக்காரரை அரச தரப்புக்கு இழுக்க வேண்டாமென்பதே சஜித்தின் கோரிக்கை. ஒருவகையில் இது நியாயமானதுதான். 

இதற்கு ரணில் அளித்த பதில் - 'நான் ஒருபோதும் எவரையும் அவ்வாறு இழுக்க மாட்டேன். ஆனால் எம்முடன் இணைய விரும்பி வருபவர்களை எவ்வாறு தடுப்பது" என்பதாகும். அதாவது, 'உங்கள் வீட்டை நீங்கள்தான் கண்காணித்துக் கொள்ள வேண்டும்" என்ற எச்சரிக்கை ஆலோசனை இது. 

ரணிலின் தந்திரோபாய கையாளுகைக்கு இவை இரண்டு உதாரணமும் போதுமானது. இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம் இன்றைய நிலையில் தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்கும் இது பொருத்தமானது என்பதாலேயே. 

இந்த மாதம் பத்தாம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, வடக்கு மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண, வடக்கின் தமிழ் எம்.பிக்களுடன் அந்த மக்களின் பிரச்சனை குறித்து அடுத்த வாரம் பேசவிருப்பதாக ரணில் தெரிவித்தார். இது முக்கியமானதொரு அறிவிப்பாக இருந்ததால் ஊடகங்களுக்கு தலைப்புச் செய்தியானதில் வியப்பில்லை. 

இப்போது ஒரு வாரம் கழிந்துவிட்டது. எதனையும் காணவில்லை. நாடாளுமன்ற உணவறையில் ரணிலைச் சந்தித்த கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் இதுபற்றிக் கேட்டபோது, இந்த வாரம் பேசலாமே என்று ரணில் பதிலளித்ததாக ஒரு செய்தி. ஆனால் மேற்கொண்டு எதுவும் நடைபெறவில்லை. 

இலங்கையின் 75வது சுதந்திர தினம் எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி. அந்த நிகழ்வுக்கு முன்னர் வடக்குத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என ரணில் தெரிவித்ததும் வெறும் செய்தியாகவே தொக்கி நிற்கிறது. கூட்டமைப்பின் சம்பந்தனை சுதந்திர தின விழா அரங்கின் முன்வரிசையில் அமரச் செய்யும் யுக்தியாக இது இருக்கலாமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. 

ரணிலின் அறிவிப்புத் தொடர்பாக தமிழர் தரப்பு வெவ்வேறு விதமாக தங்கள்  பிரதிபலிப்பைக் காட்டி வருகிறது. பேச்சுவார்த்தைக்கு முதலில் பச்சைக்கொடி காட்டியவர்கள் கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும். இதுபற்றி உரையாட மற்றைய தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு 'ஐயா அழைக்கிறார், அவரின் கொழும்பு இல்லத்துக்கு வாருங்கள்" என்று சுமந்திரன் அழைப்பு விடுத்தார். இக்கூட்டத்தில் சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா தவிர வேறு எவரும் பங்குபற்றவில்லை. கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களும் புறக்கணித்துவிட்டனர். 

இதற்குச் சில நாட்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சியின் எம்.பி. சிறீதரனும், ரெலோ எம்.பி. வினோநோகராதலிங்கமும் சுமந்திரனை பகிரங்கமாக பிய்த்தெறிந்து சாடியதன் பலாபலன் இதனூடாக தெரிய வந்தது. ஆனால், அவர்களின் கூற்றை மறுதலிக்கும் வகையில், கூட்டமைப்புக்குள் முரண்பாடு கிடையாதென கனவுப் பிதற்றல் போன்று சம்பந்தன் விடுத்த அறிக்கையை, அவரின் முகத்தின் முன்னால் கிழித்தெறிந்தது போன்று கூட்டத்தில் பங்குபற்றாது ரெலோ, புளொட் தலைவர்கள் செயலில் காட்டினர். 

இதனைப் பார்த்து தமது காய்நகர்த்தல் நன்றாக வேலை செய்கிறது என ரணில் நிச்சயம் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. 

சம்பந்தனின் இல்லக் கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளாததன் பின்னணியில் மாவையர் இயங்கியது போலவும், சுமந்திரன் அழைப்பு விடுத்ததால்தான் இந்த நிலைமை ஏற்பட்டதாகவும் செய்திகள் உலா வருவதில் உண்மை இல்லாமலில்லை. 

இதனைப் புரிந்து கொண்ட சம்பந்தன், கள்வனைக் கொண்டு கள்வனைப் பிடிப்பதுபோல பந்தை மாவையர் பக்கம் அடித்து, அனைவரும் கலந்து கொள்ளக்கூடிய கூட்டத்தை பொது இடத்தில் வைக்குமாறும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்;ளுமாறும் மாவையரையே கேட்டுக் கொண்டார். சுமந்திரன் மீதான ஷகாய்ச்சல்| கூட்டமைப்புக்குள் இருக்கும் அனைவருக்குமே உண்டு என்பதை சம்பந்தன் இவ்வேளை புரிந்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

விவகாரம் இத்துடன் முடிந்து விடவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை தாமதிக்காது விரைவாகக் கூட்டுமாறு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் கூட்டாக சம்பந்தனுக்கும் மாவையருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். கூட்டமைப்புக்குள்ளிருக்கும் அங்கத்துவ கட்சிகளுக்கிடையே பூசல்களும் முரண்பாடுகளும் அதிகரித்து வருவதையும் இவர்கள் இக்கடிதத்தில் குறிப்பிடத் தவறவில்லை. நிலைமை கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாகியுள்ளது. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே பூசலும் முரண்பாடும் காணப்படுகையில், தமிழ்த் தேசிய கட்சிகளுடன் கூட்டம் நடத்த முனைவதில் அர்த்தமில்லையென்பதை இவர்கள் இருவரும் தங்கள் கடிதத்தின் வாயிலாக பகிரங்கப்படுத்தியுள்ளனர். அதுமட்டுமன்றி, கூட்டமைப்புக்குள் எந்த முரண்பாடும் கிடையாதென ஏற்கனவே சம்பந்தன் தெரிவித்தது உண்மைக்குப் புறம்பானது என்பதையும் இவர்களின் கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது. 

தமிழ்த் தேசிய கட்சிகளை இணைத்து கூட்டம் நடத்துவதைவிட, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையும் நம்பிக்கையும் எற்படுத்தப்பட வேண்டுமென்பதையும் இவர்களின் கடிதம் வலியுறுத்தியுள்ளது. சமகாலத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றொரு முக்கிய விடயத்தை நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தவேளை அவரால் முன்வைக்கப்பட்ட பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற முறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது இவரது கோரிக்கை. 

தமிழரின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் எந்தத் திட்டத்தை  நடைமுறைப்படுத்தலாம்?

இலங்கை - இ;ந்திய ஒப்பந்தம் ஏற்படுத்திய 13ம் திருத்தத்தின் கீழான மாகாண சபை முறைமை, 2015ல் ஆட்சிக்கு வந்த ரணில் - மைத்திரி அரசு கூட்டமைப்பின் பூரண பங்களிப்புடன் நான்கரை ஆண்டுகள் இழுத்தடித்து உருவாக்கிய அரசியலமைப்பு வரைபு, சந்திரிகா குமாரதுங்கா முன்மொழிந்த பிராந்தியங்களின் ஒன்றிய முறை, கோதபாய நியமித்த ஒன்பது உறுப்பினர்கள் தயாரித்த  அரசியலமைப்புத் திட்டம் - இவற்றைவிட இப்போது ரணில் அறிவித்திருக்கும் வடபகுதி மக்களின் பிரச்சனைக்கான தீர்வு முயற்சி. 

புரையோடிப் போன இலங்கைத் தமிழர் பிரச்சனையை வடபகுதித் தமிழர் பிரச்சனை என்று ரணில் சுட்டியிருப்பது தற்செயலான சொல்லாடல் அன்று. வடக்கையும் கிழக்கையும் அரசியல் ரீதியாக பிரித்துவிடும் தந்திரோபாயம். கிழக்கு வாழ் தமிழரின் பிரச்சனையில் வடக்குத் தமிழருக்கு சம்பந்தமில்லையென காட்டுகின்ற அரசியல். 

இதனூடாக ஒரு விடயம் நன்றாகப் புரிகிறது. தமிழர் இனப்பிரச்சனைக்கு ரணில் தீர்வு காண விரும்பவில்லை. பொதுஜன பெரமுனவையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் சின்னாபின்னமாக்கி வருவதுபோன்று தமிழர் தரப்பையும் சிதறடிக்க அவர் கையில் எடுத்திருக்கும் கூராயுதமே, வடக்கு தமிழர் பிரச்சனைக்கு தீர்வு என்பது. 

பாடசாலையில் கல்வி கற்கும்போது ஆசிரியர் ஒருவர் நாய்க்கும் நரிக்குமுள்ள உறவு என்ன என்று கேட்டு, அதற்கு அவரே அளித்த விளக்கமான பதில் இவ்வேளை நினைவுக்கு வருகிறது. 

நாயுடன் சேர்ந்தால் உண்ணிதான் மிஞ்சும். நரியுடன் சேர்ந்தால் ஏமாற்றமே மிஞ்சும். எக்காலத்துக்கும் பொருத்தமான பொன்மொழி. 

No comments