முருகன், நளினி விடுதலையில் தாமதம்!!


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இந்நிலையில், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் முருகனும், சாந்தனமும் அடைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை புழல் சிறையில் ஜெயக்குமார், ராபர்ட் ஆகியோர் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள நளினியின் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு நேற்று பிற்பகல் முதல் அதிகரிக்கப்பட்ட நிலையில் நளினி இன்று பெண்கள் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார்.

இருப்பினும் நளினி விடுதலை தொடர்பான உத்தரவு நகல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் அவர் இன்று மாலைக்குள் விடுதலையாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நளினியின் கணவர் முருகன் மீது சிறையில் பெண் அதிகாரியிடம் ஆபாசமான முறையில் நடந்துகொண்ட வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அவரது விடுதலை மட்டும் தாமதமாகும் என கூறப்படுகின்றது.

No comments