அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு கொடுங்கள்: ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் பேரணி


இலங்கையிலிருந்து பாதுகாப்புத் தேடி வெளியேறிய ஈழத்தமிழர்கள் உள்பட அனைத்து நாட்டு அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு கொடுக்க வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் சிட்னி நகரில் பேரணி நடத்தியிருக்கின்றனர். 

ஆஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னரும் அகதிகளுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்க மறுக்கப்பட்டு வரும் பின்னணியில், கடந்த நவம்பர் 6ம் தேதி இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

நிரந்தர பாதுகாப்புக்காக காத்திருக்கும் தனது தாயின் நிலைக் குறித்து பேரணியில் விளக்கிய 19வயது குமரன், “படகில் 30 நாட்கள் பயணித்து ஆஸ்திரேலியாவுக்கு வந்தோம். உள்நாட்டுப் போரின் போது வெளியேறிய காரணங்கள் குறித்து எங்கள் அனைவரிடமும் கேட்கப்பட்டது. ஆனால் அது உள்நாட்டுப் போரல்ல, தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலை. எங்களது தஞ்சக்கோரிக்கை விவகாரம் பரிசீலிக்கப்பட்ட வந்த அதே சமயம், நாங்கள் இரண்டு ஆண்டுகளாக தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டோம். பின்னர் சமூகத்தடுப்பிற்குள் விடப்பட்டோம். மெல்பேர்னில் குடியமர அனுமதிக்கப்பட்ட நிலையில் நாங்கள் திடீரென வேறு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டோம். தடுப்பு முகாம் வாழ்க்கை கணிக்க முடியாதது. எப்போது வரை தடுப்பில் வைக்கப்படுவார்கள் என அகதிகளிடம் சொல்ல மாட்டார்கள். நிச்சயத்தன்மையற்ற ஒரு நடைமுறை அது,” என அவர் கூறியிருக்கிறார். 

நிரந்தர பாதுகாப்பு வழங்குவது மட்டுமே ஈழத்தமிழ் அகதிகளுக்கான ஒரே சாத்தியமான தீர்வு எனக் கூறுகிறார் தமிழ் அகதிகள் கவுன்சிலின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார். 

“ஆஸ்திரேலிய அரசாங்கம் அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் இனவாத குடியேற்ற முறைக்குள் தனது நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த இவ்வாறான பேரணிகள் தொடர்ந்து நடைபெறுவது முக்கியம்,” எனக் கூறியிருக்கிறார் ரேணுகா இன்பகுமார். 

தஞ்சம் கோருவது குற்றம் ஆகாது, 10 ஆண்டுகளாக தடுத்து வைத்திருப்பது போதாதா? குடும்பம் மீண்டும் ஒன்றிணைதல் என்பது அடிப்படை உரிமை, மனநலப் பாதிப்பால் பல உயிர்கள் மாண்டுள்ளன போன்ற வாசகங்கள் பேரணி பதாகைகளில் இடம்பெற்றிருந்தன. 

அகதிகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான பரப்புரையின் அங்கமாக வரும் நவம்பர் 29ம் தேதி ஆஸ்திரேலியாவின் கன்பரா நகரில் மற்றொரு பேரணியை தமிழ் அகதிகள் கவுன்சில் நடத்தியிருக்கிறது.        

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக சுமார் 700க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் ஆஸ்திரேலியாவின் கடல் பகுதிகளில் இடைமறிக்கப்பட்டு மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர்.  

அத்துடன் படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை வழங்கும் செயலையும் ஆஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. 


No comments