மானிப்பாயில் தாக்குதல்:மாணவர்கள் விடுவிப்பு!



மானிப்பாயில் பொதுமகன் ஒருவர் இராணுவ மற்றும் விசேட அதிரடி படையினரால் தாக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தாக்குதலுக்குள்ளான நபரின் வாக்குமூலம் இன்று யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைத்து பதிவு செய்யப்பட்டதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் சட்ட மருத்துவ அறிக்கையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனிடையே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் ந.திவாகரன் மற்றும் செயலாளர் எஸ். பபில்ராஜ் ஆகிய இருவரும், அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அனைத்து வழக்குகளில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரிலேயே இருவரும் முழுமையாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் காவல்துறையினரால் முற்றுகையிடப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டிருந்தது.

தேடுதலின் போது , பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். 

அதனை அடுத்து அவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும்  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


No comments