ஆளுநர் அரசியலமைப்பினை படிக்க வேண்டும்!



வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தெளிவாக சட்டத்தை விளங்கிக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம்சாட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட இரு நியதிச் சட்டங்களை ஆளுநர் உருவாக்கியமை தொடர்பாக வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் அதிகாரம் அற்ற செயலை செய்கின்றார் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வடமாகாண ஆளுநர் என்ற வகையில் மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்காக சட்ட திட்டங்களை உரிய வகையில் நிறைவேற்றுவேன். வரம்பு தெரியாமல் எனக்கு வகுப்பெடுக்கக் கூடாது என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, “அரசியல் அமைப்பினைக்கூட வாசித்து அறிய முடியாத ஒருவர்தான் வடக்கு மாகாணத்திற்கு ஆளுநராக உள்ளார் என்பதனை நினைக்கும்போது வேதனையாகவுள்ளது.

இதேநேரம் நிறைவேற்றுச் செயற்பாட்டிற்கும் சட்டவாக்கச் செயற்பாட்டிற்கும் வித்தியாசம் தெரியாத ஆளுநர், மாகாண சபையை கேலிக்கூத்தாக்க வேண்டாம். இலங்கையில் சர்வ நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் ஜனாதிபதி எனக் கூறினாலும் ஜனாதிபதியினால் கூட ஒரு வரியில்கூட சட்டம் நிறைவேற்றும் அதிகாரம் கிடையாது.

இவ்வாறு இருக்க ஜனாதிபதி நியமிக்கும் ஒரு போடுதடிதான் ஆளுநர். அவருக்கு சட்டம் இயற்றும் ஒரு சிறு துளி அதிகாரம் கூடக் கிடையாது எனபதனை அறியாதவர்களை ஆளுநர் பதவியில் இருத்தியதன் விளைவுதான் அவரது அறிவிப்பாகும்.

நியதிச் சட்டம் ஒன்றை உருவாக்கும் அதிகாரம் எந்த மாகாண ஆளுநருக்கும் கிடையாது. அவ்வாறு நான் உரைப்பது தவறு எனில் எந்த நீநிமன்றிலும் சந்நிக்கவும் தயாராகவே இருக்கின்றேன் எனவும் சி.தவராசா தெரிவித்துள்ளார்.


No comments