நிலைமாறு அரசியலில் தடுமாறும் தலைகள்! பனங்காட்டான்


அறகலய என்ற மக்கள் பேரெழுச்சியின் பின்னால் ரணில் மட்டுமல்ல நாமல் ராஜபக்சவும் இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது. இப்பேரெழுச்சியின் காரணமாக மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று பிரகடனம் செய்யும் ரணில், இன்னொரு மாற்றத்துக்கு இடமளிக்கத் தயாரில்லை. எதிரணிகளை பலவீனப்படுத்துவதன் மூலம் தமது அணியைப் பலமாக்கும் இவரது சூத்திரம், நிலைமாறு அரசியலில் பல தலைகளை தடுமாற வைக்கிறது. 

இலங்கையின் 1970ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் மார்க்ஸிஸ கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்து, புதிய அரசியலமைப்பை உருவாக்கி நாட்டை குடியரசாக மாற்றியது. 

151 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 17ஐ  மட்டும் இத்தேர்தலில் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி, 1977 பொதுத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மையில் வெற்றிபெற்று, அதன் தலைவரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவை முதலில் பிரதமராக்கி, அடுத்தாண்டில் அரசியலமைப்பு திருத்தத்தினூடாக முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக்கியது. 

1977ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சுதந்திரக் கட்சியை படுதோல்வியடையச் செய்வதற்கு, முக்கிய காரணியாக அமைந்தது ஒரு புத்தகம். மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தின் பெயர் 'குடும்ப மரம்' (Family Tree)

அவ்வேளை ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த கலாநிதி விக்கிரமவீரசூரிய என்பவரே இந்தப் புத்தகத்தை உருவாக்கியவர். ஜே.ஆரின் அமைச்சரவையில் முக்கியமானவராக இருந்த காமினி திசநாயக்கவின் மைத்துனர் இவர். 

1970-1977 சிறிமாவோவின் ஆட்சிக்காலப்பகுதியில் பல அரசியல் பதவிகளை வகித்த சுமார் 140க்கும் அதிகமான அவரின் உறவினர்களின் படங்கள், உறவு முறை, வகித்த பதவிகள், சுயவிபரங்களை உள்ளடக்கியதாக அரசியல் தேவையை ஒட்டி இப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. இதன் முகப்பு அட்டையில் சிறிமாவோவை ஒரு மரமாகச் சித்தரித்து அதன் ஒவ்வொரு இலைகளிலும் அரசியல் பதவிகளை வகித்த உறவினர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு தேர்தல் காலத்தில் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. 

மகிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சிக்காலத்தில் இவ்வாறான புத்தகமொன்றை ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டிருப்பாரானால், முகப்பு அட்டையில் இருநூறுக்கும் அதிகமான ராஜபக்ச குடும்பத்தினரின் படங்கள் இடம்பெற்றிருக்கும். ஜே.ஆரின் வாரிசாக இருந்தும் ரணிலுக்கு ஏனோ இந்தச் சிந்தனை தேர்தல் காலங்களில் வரவில்லை. 

காலம் பிந்தினாலும் இப்போது அதிர்ஸ்டமாகக் கிடைத்த ஜனாதிபதிப் பதவியை இறுகப் பற்றியவாறு ராஜபக்ச குடும்பத்தை அடியோடு அரசியலிலிருந்து அகற்றும் வேலையை அட்டகாசமாகவோ ஆர்ப்பாட்டமாகவோ இல்லாமல் அவர் ஆரம்பித்துள்ளதை காணமுடிகிறது. 

காலிமுகத்திடலை மையப்படுத்தி ஏற்படுத்தப்பட்ட மக்கள் புரட்சி மகிந்தவை பிரதமர் பதவி துறந்து திருமலைக்கு ஓடச் செய்தது. பசில் ராஜபக்சவை சகல பதவிகளையும் இழந்து வீடேக வைத்தது, மகிந்தவின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச, மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச, அவரது புதல்வர் சசீந்திர ராஜபக்ச ஆகியோரையும் அமைச்சர் பதவிகளை இழக்க வைத்தது. இறுதியில் கோதபாய ராஜபக்ச ஜனாதிபதிக் கதிரையிலிருந்து இறக்கியதோடு நாடோடியாகவும் திரியச் செய்தது. 

ரணில் ஜனாதிபதியாகி ஆறு மாதங்களுக்கிடையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் அரசியலில் பாரிய பின்னடைவை சந்தித்து வருகின்றன. ரணிலை ஆதரிக்கும் மகிந்தவின் பொதுஜன பெரமுன மூன்றாகப் பிளவுபட்டுள்ளது. சஜித் பிரேமதாச அணியினர் உதிரிகளாகக் கழன்று ரணிலுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர். 

மகிந்த ராஜபக்ச அரசியலிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக ஒரு செய்தி ஊடகங்களில் முதன்மையாக இடம்பெறுகிறது. ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக தம்மை நியமிக்கவில்லையென நாமல் ராஜபக்ச பொதுமக்களுக்கு அறிவிக்கிறார். பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதியினர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலை சந்திக்க விரும்புவதாக இன்னொரு செய்தி. படிக்கும்போது இவை வெறுமனே செய்திகளாகக் காணப்பட்டாலும், அடிப்படையில் இவை ஒரு விடயத்தைத் தெரிவிக்கின்றன. மகிந்த ராஜபக்சவின் அரசியல் அஸ்தமனம் அவர் கண்முன்னால் தெரியவந்துள்ளது. 

தமது புதல்வர் நாமல் ஜனாதிபதியாகும் வயது (பக்குவம் அல்ல) வரும்வரை தமது குடும்பத்தின் ஆளுகையில் ஜனாதிபதிப் பதவியை வைத்திருக்க வேண்டுமென்பதற்காகவே, அரசியலில் பூஜ்ய அனுபவம் கொண்ட கோதபாயவை ஜனாதிபதியாக்கினார் மகிந்த. ஆனால் அதுவே வினையாகி முழுக்குடும்பத்தையும் அரசியலில் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மகிந்த மூன்றாவது முறையும் ஜனாதிபதியாக விரும்பியதுதான் இன்றைய பாதகநிலைக்கு முக்கிய காரணமென்று பகிரங்கமாகக் கூறியுள்ளார் குடும்பத்தின் மூத்தவரான சாமல் ராஜபக்ச. அதுமட்டுமன்றி, பசில் ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் இழுக்க வேண்டாமென்று அவரது ஷஅடியவர்|களுக்கு எச்சரிக்கை கலந்த ஆலோசனையும் வழங்கியுள்ளார் சாமல். 

கோதபாயவுக்கெதிராக உருவாகி அவரை பதவியிழக்கச் செய்த பேரெழுச்சியில் நாமல் ராஜபக்சவுக்கும் பங்குண்டு என்பதை ஊடகங்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. கோதபாய ஜனாதிபதியாகத் தொடருவாரானால் அதனால் தங்கள் குடும்பத்துக்கு ஏற்படும் பாதிப்பு தமது ஜனாதிபதி ஆசையை நிர்மூலமாக்கும் என்ற அச்சத்தில் தமது ஆதரவாளர்களை காலிமுகத்திடல் போராட்டத்தில் நாமல் ராஜபக்ச இணைத்ததாக பொதுஜன பெரமுனவின் உள்வீட்டிலிருந்தே உண்மை வெளிவந்துள்ளது. 

மொத்தத்தில் பார்க்கப் போனால், ராஜபக்ச சகோதரர்களும் அவர்களின் குடும்ப உறவுகளும் இனிமேல் மனமொத்த எந்த அரசியல் வேலைகளையும் முன்னெடுக்க முடியாத நிலைமை மேலோங்கி வருகிறது. நாமலின் எதிர்காலத்தைச் சாதகமாக்கவென மகிந்த முன்னெடுத்துவரும் ஷமீண்டும் எழுவோம்| பேரணியும் பிசுபிசுத்துள்ளது. களுத்துறையிலும் கண்டியிலும் புத்தளத்திலும் இந்த எழுச்சிக் கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் ஊழல் பேர்வழிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள். இதன் காரணமாகவே இதன் ஏற்பாட்டாளர்களான ரோகண அபயகுணவர்த்தன, மகிந்தானந்த அளுத்கமகே, சனத் நி~hந்த ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க முடியாதென ரணில் தொடர்ந்து மறுத்து வருகிறார். இவர்களோடு நாமலுக்கும் அமைச்சரவை கதவை திறப்பதற்கு மகிந்த இணக்கமில்லை. 

ரணிலின் பொதுவான அரசியல் பண்பு பற்றி எல்லோரும் கூறிக்கொள்வது ஒன்றுதான். தமது தலைமையிலான அணியை அல்லது தமது கட்சியை பலப்படுத்துவதில் நேரடியாக ஈடுபடுவதைவிட, எதிர்தரப்பினரை பலவீனப்படுத்துவதன் வழியாகவே தமது தரப்பை இலகுவாக பலமாக்கிக் கொள்பவர் இவர். இது ஒருவகை அரசியல் சூத்திரம். 

1970ல் மூன்றிலிரண்டு பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய சிறிமாவோ அணியிலிருந்த மார்க்ஸிஸவாதிகளான 25 எம்.பிக்களை (சமசமாஜ கட்சி - 16, கம்யூனிஸ்ட் கட்சி - 9) சுதந்திரக்கட்சியின் ஒரு தரப்பினரை தம் வசமாக்கி அதனூடாக அவர்களை வெளியேற்றி, 1977 தேர்தலில் சிறிமாவோ அணியை தலைகுப்புற வீழ்த்தியவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன என்பதை இப்போது பலரும் மறந்திருக்கலாம். 

இந்த மாதம் 3ம் திகதி கொழும்பில் பாரிய போராட்டமொன்று அரசுக்கு எதிராக இடம்பெற்றது. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ரணில் விக்கிரமசிங்க, 'மக்கள் விரும்பிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இனியும் ஏன் போராட்டம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதன் மூலம் அவர் எதனைச் சொல்ல வருகிறார்? 

'மக்கள் பேரெழுச்சி ராஜபக்சக்களை வீட்டுக்கு அனுப்பவே இடம்பெற்றது. அது நிறைவேறி விட்டது" என்பதை நேரடியாகவே சொல்கிறார். போராட்டம் இடம்பெற்றபோது அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர் - அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தவர் ரணில். விரும்பிய மாற்றம் போராட்டத்தினூடாக நிறைவேறி விட்டது என்பதையே தமது கேள்வியின் வாயிலாக அவர் வெளிப்படுத்தியுள்ளார். 

ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நிரந்தரமானதாக, தமது தலைமையிலான அணியை தொடர்ந்து ஆட்சியில் வைத்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார். இலங்கையின் அரசியல் எதிர்காலமென்பது வேறெந்தத் தரப்புக்கும் மாறக்கூடாது என்பதே அவரது விருப்பு. அதற்காக நிலைமாறு அரசியலில் தலைகளைத் தடுமாற வைப்பது அவரது இலக்கு. இது அவருக்கு கைவந்த அரசியல் கலை.

No comments