இறுகிறது: வடக்கின் சுகாதார மோசடி விசாரணை

கொரோனா பெருந்தொற்றின் போது வட மாகாணத்தில் சுகாதார துறையில் நடந்தேறிய ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணையின் தொடர்ச்சியாக  கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய மருத்துவர் ந. சரவணபவன் மத்திய சுகாதார அமைச்சின் செயலாளரினால் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் மாகாண சுகாதார சேவைகள் பணிமனைக்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையில் கொரோனா பெருந்தொற்று காலப்பகுதயில் நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட மோசடிகள்,முறைகேடுகள் குறித்த விசாரணைகள் நிறைவுபெறும் வரை வைத்தியர் ந.சரவணபவன் தற்காலிக இணைப்பில் நீடிப்பார் எனவும் தெரியவருகிறது

கிளிநொச்சியில் உள்ள  வடமாகாண தொற்றுநோய் வைத்தியசாலையோடு தொடர்புபட்ட முறைகேடுகளை ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஆரம்ப புலன் 

விசாரணைக் குழுவானது கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணினையில் கடமையாற்றும் இரு அரச அதிகாரிகள் மற்றும் மூன்று அரச அலுவலர்கள் பாரிய ஊழல்களை புரிந்துள்ளதாக கண்டறிந்துள்ளது.

இதன் அடிப்படையில்  மருத்துவரொருவர் மற்றும் கணக்காளர் என ஜவருக்கெதிராக குற்றப்பத்திரம் தயாரிக்கப்பட்டு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளரினால் ஒழுக்காற்று அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் போது உணவு விநியோகம் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவதில் மில்லியன் கணக்கில் மோசடிகள் நடந்ததாக அம்பலமாகியுள்ளது.


No comments