கடலட்டை பண்ணைகள்:பூநகரி பிரதேசசபை கண்டனம்!



 சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்ற, இலங்கை அரசினை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிளிநொச்சி பூநகரி பிரதேச சபையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பூநகரியின் மேற்கு கடலின் பெரும்பாலான பகுதிகளில், கடலட்டை பண்ணைகள் அமைக்க வழங்கப்படுகிறது. அங்குள்ள உள்ளுர் மீனவர்;களுக்கு, யார் என்று அடையாளம் தெரியாதவர்களுக்கு, ஏக்கர் கணக்கில் கடல்கரைகள் சட்டவிரோதமாக வழங்கப்படுகிறது. இதனால், பாரம்பரிய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அண்மையில், பத்திரிகை விளம்பரம் ஒன்று, தேசிய உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில், அட்டைப்பண்ணை மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், எமது கடல் நிலத்தையும் கைவிட வேண்டிய நிலை வரும் எனவும் பிரதேசசபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களாகிய நாம், எங்களுக்கான காணி உரிமைக்காக பேராடிக்கொண்டிருக்கும் வேளையில், சத்தமில்லாது, எங்களின் கடலில் மேற்கொள்ளப்படும் பாரிய சவாலை காணமுடிகிறது. சந்ததிகளாக, வாழ்வாதாரத்திற்கு கடலை மட்டும் நம்பியிருக்கும் மக்களை, கடலில் இருந்து அந்நியப்படுத்தி, எங்கள் கடலை, கடலட்டை பண்ணை என்ற போர்வையில், சீனாவுக்கு நேரடியாகவும் மறை முகமாகவும் தாரை வார்க்கும் சதியை, பூநகரி பிரதேச சபை வன்மையாக கண்டிக்கிறது.

வடக்கில் எந்தவித ஒழுங்கும் இல்லாத கடலட்டை பண்ணைக்கு எதிராக, அனைவரும் போராடி வரும் வேளையில், ஆயிரக்கக்கான ஏக்கரில் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு விலைமனு கோரல் விடுக்கப்பட்டிருக்கிறது. கடலட்டை பண்ணைகளின், தீமை பற்றிய விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு, முடிவு வரும் வரையும், சட்டவிரோத கடலட்டை பண்ணைகளை அகற்றுமாறு, அரசாங்கத்தை கோருகின்றோம். என தவிசாளர் தெரிவித்துள்ளார்.


No comments