வட்டுவாகல் கடற்படை தளத்திற்கான காணிசுவீகரிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு!


முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள ‘கோத்தபாய கடற்படை கப்பல் ‘ கடற்படை முகாமுக்காக 617 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் நில அளவீட்டு நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிந்த காணி உரிமையாளர்கள் பலர் கடற்படை முகாமிற்கு முன்னால் ஒன்றுகூடி எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் நிலங்களை கடந்த 13 வருடங்களாக ஆக்கிரமித்து பாரிய கடற்படை முகாம் ஒன்றினை அமைத்துள்ள கடற்படையினர் அந்த காணிகளை படை முகாமின் தேவைக்காக கடந்த சில வருடங்களாக நிரந்தரமாக சுவீகரிக்கும் பொருட்டு பலதடவைகள் நில அளவை திணைக்களத்தால் அளவீடு செய்ய எடுத்த முயற்சிகள் காணி உரிமையாளர்களான மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் எதிர்ப்பால் கைவிடப்பட்டிருந்தது.

காணி எடுத்தற் சட்டம் (அத்தியாயம் 450) 05 ஆம் பிரிவின் (1)ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சின் கட்டளை நிமித்தம் 2017ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியாகிய வர்த்தமானியின் பிரகாரம் கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள 271.62 ஹெக்டெயர் விஸ்தீரனமுடைய காணி கையகப்படுத்தப்பட்டுள்ளது என வர்த்தமானி வெளியாகியிருந்ததோடு காணி உரிமையாளர்களான மக்களை காணி ஆவணங்களோடு வருகைதந்து கடற்படை முகாமுக்கு காணியை வழங்க அளவீடுகளை செய்ய எல்லைகளை அடையாளம் காட்டுமாறு நில அளவை திணைக்களத்தால் பல தடவைகள் காணி உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட ஏற்பாடாகியிருந்தது



இதற்க்கு காணி சுவீகரிப்பு தொடர்ச்சியான மக்களின் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமையால் அளவீட்டு பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை இந்த நிலையில் இன்று அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளதாகவும் இதற்க்காக சிறப்பான நில அளவையாளர் குழு ஒன்று கொழும்பிலிருந்து முல்லைத்தீவுக்கு வருகைதரவுள்ளதாகவும் அறிந்த சில காணி உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு கணியினை வழங்குவதற்கு எதிர்பினை தெரிவித்துள்ளார்கள்.

தமது பூர்வீக காணிகளை அரசாங்கம் தங்களுக்க வழங்கவேண்டும் என்றும் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இதன்போது முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ளார்கள்.

காணிகளை திரும்ப திரும் அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள் மக்கள் தற்போது பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கின்றார்கள்.

யாழில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்காக போராட்டம் நடத்தியுள்ளார்கள் அதன் விளைவுதான் இன்று அவர்கள் இங்கு வரவில்லையோ என்று எண்ண தோன்று கின்றது.

தமிழர்களின் நிலங்களை பறிக்கின்றார்கள் ஆலயங்களை பறிக்கின்றார்கள் இது இன்னும் இனப்பிரச்சிpனையினை சிக்கலாக்கும் இராணுவ முகாம்களை குறைத்து மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்

செய்தி: ஜெகதீஸ்வரன் டிசாந்த்


No comments