ஜே.ஆரை ஜனாதிபதியாக்கியது 2வது திருத்தம்! ரணிலைப் பலமாக்குகிறது 22வது திருத்தம்! பனங்காட்டான்


1977ல் நேரடியாக தேர்தல் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவாகாத ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமது அரசியலமைப்பில் 2வது திருத்தத்தை
ஏற்படுத்தி தம்மைத் தாமே அக்கதிரையில் ஏற்றினார். அதே தடத்தில் ரணிலும் தேர்தல் மூலமாகவன்றி, நாடாளுமன்ற பெரும்பான்மையால் ஜனாதிபதியாகி 22வது திருத்தத்தின் வழியாக அக்கதிரையை இப்போது இறுகப் பற்றியுள்ளார். 

ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1978ல் நடைமுறைக்குக் கொண்டுவந்த அரசியலமைப்புச் சட்டம் இந்த மாதம் 21ம் திகதி 22வது திருத்தத்தை அமோக வாக்குகளால்  நிறைவேற்றியுள்ளது. 

தமக்குக் கிடைத்த அதீத பெரும்பான்மையை பயன்படுத்தி புதிய அரசியலமைப்பை உருவாக்கி, பின்னர் அதில் ஒரு திருத்தத்தை ஏற்படுத்தி தம்மைத் தாமே முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக்கி சாதனை புரிந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அப்போது அவருக்கு வயது 71. 

1989 இறுதியில் ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், தம்மால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பில் 16 திருத்தங்களை அடுத்தடுத்து ஏற்படுத்திய சாதனையாளரும் இவரே. இவற்றுள் இரண்டு திருத்தங்கள் தமிழ் மக்களின் அரசியல் வாழ்வுடன் சம்பந்தப்பட்டவை. 

1983 இனஅழிப்பை அடுத்து அவரால் நிறைவேற்றப்பட்ட ஆறாவது திருத்தம் தனிநாட்டுக் கோரிக்கையை உச்சரிப்பதைக்கூட தடுத்ததுடன், அரசாங்க ஊழியர்களிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள்வரை அனைவரும் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்கவில்லையென்று உறுதி எடுப்பதை சட்டமாக்கியது. 

13வது திருத்தம் 1987ல் இடம்பெற்ற இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ் அதிகாரப் பரவலுக்காக கொண்டுவரப்பட்டது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையின் அலங்கோல நிலைபற்றி இங்கு விபரிக்கத் தேவையில்லை. 

14வது திருத்தம் ஜனாதிபதிக்கு சட்ட விதிவிலக்கை ஏற்படுத்தியதோடு  நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 ஆக அதிகரிக்கச் செய்தது. 15ம் 16ம் திருத்தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் தொகையை மாற்றியதுடன் தேர்தல் மாவட்ட வரைபையும் நிர்ணயம் செய்தது. இந்தத் திருத்தங்கள் 1988 செப்டம்பரிலும் டிசம்பரிலும் இடம்பெற்றன. ஜனாதிபதிப் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்னாக இவைகளை ஜே.ஆர். செய்து முடித்தார். இந்தப் பின்னணியில், இந்த மாதம் 21ம் திகதி நிறைவேற்றப்பட்ட 22வது அரசியல் திருத்தம் முன்னையதின் தொடர்ச்சியாக வரலாற்றில் பதிவு பெறுகிறது. 

22வது திருத்தத்தை இப்போது நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தை ராஜபக்சக்களே உருவாக்கினர் என்பதை அவர்களின் பொதுஜன பெரமுனவினரே ஒப்புக் கொண்டுள்ளனர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த வேளையில் - 2010 செப்டம்பர் 18ம் திகதி நிறைவேற்றப்பட்ட 18வது திருத்தமும், கோதபாய ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தபோது - 2020 அக்டோபர் 22ம் திகதி நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தமுமே 22வது திருத்தத்தின் அவசியத்தையும் அவசரத்தையும் ஏற்படுத்தியது. 

ஒருவர் ஜனாதிபதிப் பதவியை இரண்டு தடவைகள் மட்டுமே வகிக்கலாமென்ற அரசியலமைப்பை மாற்றி எத்தனை தடவையும் வகிக்கலாமென்று 18வது திருத்தம் கொண்டுவரப்பட்டது. தமக்காக இத்திருத்தத்தை கொண்டு வந்த மகிந்த மூன்றாம் தடவை போட்டியிட்டு மண் கவ்வியது தனி வரலாறு. 

ரணில் தரப்பினரின் ஆதரவோடு 2015ல் ஜனாதிபதி பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன 19வது திருத்தத்தை நிறைவேற்றி 18ம் திருத்தத்தை செல்லாக்காசாக்கினார். ஆனால், 2019 இறுதியில் ஜனாதிபதியான கோதபாய ராஜபக்ச 19வது திருத்தத்தை நிராகரிக்கும் 20வது திருத்தத்தை அமுலாக்கி, ஜனாதிபதியாகிய தமக்கு சகல அதிகாரங்களையும் வழங்கும் வலுவை ஏற்படுத்தினார். 

இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள 22வது திருத்தம் கோதபாயவின் 20வது திருத்தத்தை தூக்கி வீசிவிட்டு முன்னைய 19ம் திருத்தத்தின் அடிப்படையை மூலமாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் அதிகாரங்கள் பலவற்றை 22வது திருத்தம் நாடாளுமன்றத்துக்கு மாற்றியுள்ளது. 

அதுமட்டுமன்றி, மற்றிரு முக்கிய அம்சங்களையும் இது கொண்டுள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது. நாடாளுமன்றத்தை அதன் முதல் அமர்விலிருந்து இரண்டரை வருடங்களின் பின்னர் எப்போது வேண்டுமானாலும்; கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்குகிறது. இதன் பிரகாரம், பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு வருவது தடுக்கப்படுகிறது. (அவர் விரும்பினால் அமெரிக்க பிரஜாவுரிமையை ரத்துச் செய்துவிட்டு தேர்தலுக்கு வரமுடியும். முன்னர் கோதபாய செய்தது போன்று பசில் செய்வாரா என்று நிச்சயமாகக் கூற முடியாது).

20வது திருத்தத்தின்படி நாடாளுமன்றத்தை நாலரை ஆண்டுகளின் பின்னரே கலைக்க முடியும். ஆனால், 22வது திருத்தம் அதில் இரண்டு ஆண்டுகளைக் குறைத்து இரண்டரை ஆண்டாக்கி விட்டது. இதன் வழியாக தற்போதைய நாடாளுமன்றத்தை 2023 மார்ச் மாதத்தின் பின்னர் எப்போது வேண்டுமானாலும் ரணிலினால் கலைக்க முடியும். 

22வது திருத்தம் அமைச்சர்களின் ஆகக்கூடிய எண்ணிக்கையை முப்பது ஆகவும், பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கையை நாற்பதாகவும் மட்டுப்படுத்துகிறது. ஆனால், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் இணைந்த தேசிய அரசு அமையுமாயின் இந்த எண்ணிக்கையில் மாற்றம் கொண்டு வரலாம். 

பொதுத்தேர்தலில் தோல்வியடைந்து, தேசியப்பட்டியலூடாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் என்ற வகையில் தனியனாக நாடாளுமன்றத்தில் எம்.பியாகி, ராஜபக்சக்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் பரிசாக முதலில் பிரதமராகி பின்னர் நாடாளுமன்றத்தால் ஜனாதிபதியாகத் தெரிவான ரணில், தமது தந்திரோபாய நகர்வினால் அரசியலமைப்பில் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்திவிட்டார். 

கட்சிகளைப் பிரித்து பிளவுபடுத்தி அதில் ஆதாயம் பெற்றுள்ள ரணில் தம்மை அரியாசனம் ஏற்றிய பொதுஜன பெரமுனவையும் துண்டுகளாக்கி விட்டார். இதற்கு அவரது பெரிய தந்தையார் உருவாக்கிய அரசியலமைப்பே கைகொடுத்து உதவுகிறது. நாற்பத்துநாலு வருடங்களைப் பூர்த்தி செய்த ஜே.ஆரின் அரசியலமைப்பு 22 திருத்தங்களைக் கண்டுவிட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒன்று என்ற வகையில் இதனைப் பார்க்கலாம். 

22வது திருத்த வாக்களின்போது 179 எம்.பிக்கள் இதனை ஆதரித்தனர். முன்னாள் கடற்படை அதிகாரியும் சிங்கள இனவெறியருமான சரத் வீரசேகர மட்டும் இதனை எதிர்த்து வாக்களித்தார். மகிந்த ராஜபக்ச உட்பட பெரமுனவின் 44 எம்.பிக்கள் வாக்களிப்பின்போது சபையில் சமுகமளிக்கவில்லை. ஆனால், மகிந்தவின் மகனான நாமல் ராஜபக்சவும், மகிந்தவின் தமையனாரான சாமல் ராஜபக்சவும், அவரது புதல்வரான சசீந்திர ராஜபக்சவும் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தனர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தன், சாணக்கியன், வினோநோகராதலிங்கம் ஆகியோர் சபையில் இருக்கவில்லை. 22ஐ எதிர்த்து உரையாற்றிய சுமந்திரனை தனியே விட்டு செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் உட்பட கூட்டமைப்பின் ஆறு எம்.பிக்களும் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்தனர். (கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் முதன்முறையாக இவ்வாறான தனிமைப்படுத்தலுக்கு உள்ளானதும் ஒரு வரலாறு). 

ஒட்;டுமொத்தத்தில் பார்க்கப் போனால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் 22வது திருத்தத்தை ஆதரித்துள்ளன. ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவின் 44 பேர் தவிர மிகுதிப்பேர் திருத்தத்தை ஆதரித்துள்ளனர். கூட்டமைப்பிலும் நான்குபேர் தவிர மிகுதி ஆறுபேரும் ஆதரித்துள்ளனர். விக்னேஸ்வரனும் ஆதரவாக வாக்களித்தார். ஆனால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இருவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனூடாக எவ்வகையில் கட்சிகளை பிளவுபடுத்தும் கைங்கரியத்தை ரணில் செய்துள்ளாரென்பதை காணமுடிகிறது. 

1978ல் தம்மால் உருவாக்கப்பட்ட புதிய அரசியலமைப்பில் இரண்டாவது திருத்தத்தைக் கொண்டு வந்து அதன் வழியாக (தேர்தலின்றி) தம்மை ஜனாதிபதியாக்கியவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அவரது அரசியல் வாரிசான ரணிலும் நேரடியாக மக்கள் வாக்களிப்பின்றி ஜனாதிபதிக் கதிரையில் அமர்ந்து, அதனைப் பலப்படுத்த பக்குவமாக 22வது திருத்தத்தை நிறைவேற்றியுள்ளார். 

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு கிழட்டு நரி முன்னெடுத்த அரசியல் பாதையில், அச்சொட்டாகப் பாதம் பதித்து நடைபோடுகிறது ஒரு குள்ளநரி என்று சொன்னால் அது தவறாகாது. 

No comments