ஊரெழு பொக்கனையில் கசிப்பு நிலையம் முற்றுகை!
யாழ்ப்பாணம் ஊரெழு பொக்கணைப் பகுதியில் நீண்டகாலமாக இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையமொன்று இன்றையதினம் யாழ். மாவட்ட காவல்துறைப்
புலனாய்வுப் பிரிவினரால் அதிரடியாக முற்றுகையிடப்பட்டது.அங்கிருந்து கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கருதப்படும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் 200 லீற்றர் கோடா,60 லீற்றர் ஸ்பிரிட் மற்றும் கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
யாழ். மாவட்ட காவல்துறைப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 1 மணியளவில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருட்கள் , கசிப்பு தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதுடன் நீதிமன்றில் கைது செய்தவர்களை முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் யாழ்ப்பாணம் உரும்பிராய் முருகன் வீதியில் 6 போத்தல் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்பாய் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர் நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணையின் பின் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை கோப்பாய் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். (க)
Post a Comment