மீனவர்கள் போராட்டம்! யுத்த காலத்தில் கூட மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருந்ததில்லை!!

தடையில்லாமல் மண்ணெண்ணெயை வழங்குமாறு கோரி காக்கைதீவு துறைமுகத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் காக்கைதீவு மற்றும்

சாவல்கட்டு மீனவர்கள் இன்றைய தினம் கவயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் யுத்தம் நடந்த காலப்பகுதியில் கூட மண்ணெண்ணெய்க்கு இவ்வாறான தட்டுப்பாடு நிலவவில்லை. அந்த காலப்பகுதியிலும் நாங்கள் மிக இலகுவாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொண்டோம்.

காக்கைதீவு துறைமுகத்தில் 225 படகுகள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. தற்போது ஒரு படகுக்கு வாரம் ஒன்றிற்கு 30 லீற்றர் மண்ணெண்ணெயே வழங்கப்படுகிறது. எமக்கு ஒருநாள் பாவனைக்கே 50 லீற்றர் மண்ணெண்ணெய் தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்த 30 லீற்றர் மண்ணெண்ணெய் ஒரு வாரத்திற்கு எவ்விதம் போதும்?

இந்த மண்ணெண்ணெய் பிரச்சினை காரணமாக 225 படகுகளில் 10 படகுகள் மாத்திரமே அன்றாடம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. தற்போது மீன்பிடிக்கான பருவகாலம் நடந்துகொண்டிருக்கிறது. மீன்பிடி பருவகாலத்தில் ஆறு மாதங்கள் மாத்திரமே நாங்கள் திருப்திகரமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடலாம். நாங்கள் தொழில் செய்து உழைக்கின்ற இந்த காலப்பகுதியில் எமக்கு மண்ணெண்ணெயை சீராக வழங்காவிட்டால் நாங்கள் எவ்வாறு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது?

அரசியல்வாதிகள் தங்களது இருப்பினை தக்கவைத்துக்கொள்ளவும் அரசியல் இலாபங்களுக்காகவும் அடிபடுகின்றார்களே தவிர, எங்களது பிரச்சினைகளுக்கு செவிசாய்ப்பதாக தெரியவில்லை.

இந்தநிலை. இவ்வாறு தொடர்ந்துகொண்டு இருப்பதால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நாங்கள் அன்றாட உணவினையும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பூர்த்தி செய்ய முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம்.

எனவே சம்பந்தப்பட்ட தரப்பினர் எமது பிரச்சினைகளை கருத்து கொண்டு எமக்கான சீரான மண்ணெண்ணெய் விநியோகத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். (க)

No comments