ஈழத்தமிழர் ஓர் இனக்குழுமமெனில், இடம்பெற்றது இனப்படுகொலையே! பனங்காட்டான்


'மகாவம்ச மனப்போக்கின் தொடர்ச்சியான வெளிப்பாடுகளே 1983லும், அதற்கு முன்னும் பின்னுமாக அடிக்கடி இடம்பெற்ற தமிழினப் படுகொலைகளும், ராஜபக்ச சகோதரர்கள் தலைமையில் 2009 வைகாசி மாதத்தில் உச்ச நிலையை எய்திய தமிழினப் பேரழிவும் கொடுங்கொலைகளுமாகும்" - ஒன்ராறியோ உச்ச நீதிமன்ற தமிழினப் படுகொலை வழக்கு விசாரணையில் பேராசிரியர் அமுது யோசப் சந்திரகாந்தன் தெரிவித்த கூற்று. 

உள்நாட்டு யுத்த காலத்தில் காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய புதிய அறிவிப்பொன்று கடந்த வாரம் வெளியானதையடுத்து, ரணில் விக்கிரமசிங்க அரசின் திட்டம் இதுதானா என்ற கேள்வி எழும்பியுள்ளது. 

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லையென்றும், இறுதி யுத்தத்தில் சரணடைந்த தமிழர்கள் காணாமல் போகவில்லையென்றும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். சரணடைந்தவர்கள், காணாமல் போனவர்கள் என்ற சொற்பதங்களையும் அவர் மறுத்துள்ளார். 

இது தொடர்பாக ஆரம்பத்திலேயே ஒரு மயக்கம் ஏற்படுகிறது. காணாமல் போனவர்கள் என்று சொல்ல முடியாதென்றால் எதற்காக அந்தப் பெயரில் ஒரு அலுவலகத்தை அரசாங்கம் நிறுவியது? எதற்காக இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டது? இதனை மறுக்கும் அதன் தலைவர் ஏன் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்? இதற்கான பதில்களை எங்கிருந்தும் எதிர்பார்க்க முடியாதென்பதால் தமிழினப் படுகொலையின் வரலாற்றை மீள்நினைவுக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. 

1950களிலிருந்து இன்றுவரை தமிழினப் படுகொலை தொடர்ச்சியாக இடம்பெறுகிறது. சிங்கள ஆட்சியாளர்களின் முன்னெடுப்பில் அவர்களின் படைத்தரப்புகள் இதனை மேற்கொண்டு வருகின்றன. ஆரம்பத்தில் இதனை தமிழர் மீதான தாக்குதல்கள் எனவே பலரும் பார்த்தனர். தமிழர்களின் கல்வி முன்னேற்றம், வாழ்க்கைத்தர உயர்வு, நாடு தழுவிய ரீதியிலான பொருளாதார வளம் போன்ற காரணங்களால் பொறாமையும் எரிச்சலும் கொண்ட சிங்களவர்கள் அவ்வப்போது தெற்கில் வசித்த தமிழர்களைத் தாக்குவதும் சொத்துகளை அழிப்பதும் சூறையாடுவதும் கொள்ளையடிப்பதுமாக இடம்பெற்றபோது அதனை இனஅழிப்பாகப் பார்க்கவில்லை. 

தமிழ் மக்களின் உரிமைக்கான சாத்வீக ரீதியான போராட்டங்கள் இடம்பெற்ற காலங்களில் இதனை அரசியல் ரீதியான தாக்குதல்களாகப் பார்க்க முடிந்தது. தெற்கில் வசித்த தமிழர்களை துரத்தியடிக்கும் அல்லது அழித்தொழிக்கும் வன்மம் இதன் தொடர்ச்சியாது. அந்தக் காலங்களில் இதனை பொதுப்படையாக இனக்கலவரம் என்றே அழைப்பர். இரு தரப்பு ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்வதே கலவரம். அடிப்பது சிங்களவராகவும், அடி வாங்குவது தமிழராகவும் இருப்பதை இனக்கலவரம் என்று சொல்ல முடியாதென்பதை உணர்ந்து கொள்ள ஆண்டுகள் பல எடுத்தது. 

எண்ணுக்கணக்கில் தங்களை பெரும்பான்மையினர் என கூறிக்கொண்ட சிங்களவர், ஆட்சித்தரப்பு தங்கள் இனம் சார்ந்ததாக இருந்ததால் தமிழரை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்கள் பலவாறு அடையாளம் காணப்பட்டது. இனவாதம், இனச்சுத்திகரிப்பு, இனசங்காரம் என்பவைகளின் ஒட்டுமொத்தமாக இனஅழிப்பு தெரியவந்தது. 

உள்நாட்டு யுத்தம் எனப்படும் 2019ல் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் உறைநிலைக்குச் சென்ற காலமே இப்போதைய பேசுபொருள் காலம். தமிழர் ஓர் இனக்குழுமம் என்ற வகையில் அவர்கள் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் இனப்படுகொலை அல்லது இனஅழிப்பு எனப்படும். 

'ஒரு தேசத்தை அல்லது ஒரு குழுவை அழிக்கும் நோக்குடன், ஒரு குறிப்பிட்ட தேசம் அல்லது இனக்குழுவைச் சேர்ந்த பெருமளவான மக்களை வேண்டுமென்றே கொலை செய்வது" இனஅழிப்பு என அதற்கான வரைவிலக்கணம் சொல்கிறது. அதன் ஆங்கில வடிவம் பின்வருமாறு :''Thedeliberate killing of a large number of people from a particular nation or ethnic group with the aimof destroying that nation or group''.

இலங்கையில் தமிழினப் படுகொலை நிகழ்ந்ததென்பதை ஆதாரப்படுத்தி  உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வடமாகாண சபை 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி இனப்படுகொலை என்ற தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. தற்போது நாடாளுமன்ற உறுப்பினராகவிருக்கும் திரு. சி.வி.விக்னேஸ்வரன், அப்போது மாகாண சபையின் தலைவர் என்ற வகையில் தாமே இத்தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றியிருந்தார். 

அத்துடன் இதனை ஜெனிவா மனித உரிமைப் பேரவைக்குச் சமர்ப்பித்து, இதன் கண்டறிவுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் மேல்நடவடிக்கைகளுக்காக பாரப்படுத்துமாறும் கோரியிருந்தார். இலங்கையின் அரசியல் சட்ட  நியாயாதிக்கத்துக்குட்பட்ட வடமாகாண சபை நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தை முன்வைத்து இலங்கை அரசு இதுவரை எந்த நடவடிக்கையையும் விக்னேஸ்வரன் மீது எடுக்கவில்லையென்பதை கவனிக்கலாம். 

புலம்பெயர்ந்துள்ள தமிழர்களில் கூடுதலானவர்கள் கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழ்கின்றனர். ஒன்ராறியோ மாகாண சட்டசபை 2019ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்றது தமிழினப் படுகொலை என்பதை ஏற்றுக் கொள்ளும் தீர்மானமொன்றை சட்டமாக்கியது. விஜே தணிகாசலம் என்ற உறுப்பினர் முன்மொழிந்த இந்தத் தீர்மானமானது, ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ம் திகதியை முதன்மைப்படுத்தி வரும் அடுத்த ஏழு நாட்கள் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரமென கொள்ளப்படுமென்பதை அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் பேராதரவுடன் சட்டமாக்கியுள்ளது. 

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த கனடாவாழ் சிங்கள சமூகத்தவர்கள் சிறீலங்கா அரசின் பின்பலத்துடன் ஒன்ராறியோ உச்ச நீதிமன்றத்தை நாடினர். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லையென்ற வாதத்தின் அடிப்படையில் ஒன்ராறியோ மாகாண சபை நிறைவேற்றிய சட்டத்தை ரத்துச் செய்ய வேண்டுமென இது கோரியது. 

இது தொடர்பான நீதிவிசாரணை இவ்வருடம் மே மாதம் 24ம் 25ம் திகதிகளில் நீதியரசர் ஜே.ரி.அக்பரலி முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இவ்விசாரணையில் முக்கியமான ஒருவராக ரொறன்ரோ பல்கலைக்கழக பேராசிரியர் அமுது யோசப் சந்திரகாந்தன் சாட்சியமளித்தார். இலங்கையின் பல்சமய விவகாரங்களில் நிபுணத்துவ சாட்சியாளராக கனடிய உச்ச நீதிமன்றம் 1993ல் இவருக்கு அங்கீகார நியமனம் வழங்கியதால், இவரது மூன்று  மணித்தியால சாட்சிய விசாரணை முக்கியமானதாகக் கருதப்பட்டது. 

'இலங்கையில் தமிழினத்தை வேரோடு அழிக்கும் இனப்படுகொலை 2000  ஆண்டுகளுக்கு முன்னர் புத்த மதத்தின் ஆசீர்வாதத்தோடு துவங்கியது. சிங்கள மன்னன் துட்டகெமுனு 10,000 தமிழர்களை அநியாயமாக படுகொலை செய்தது பற்றி துயருற்றபோது, புத்த மதத்தைச் சாராததால் மொத்தமாக நீ அரை மனிதனையே கொன்றாய் என தலைமைப் பிக்கு மன்னனுக்கு ஆறுதல் கூறினாரென மகாவம்சம் குறித்துள்ளமை இதற்குச் சான்றாகும். இந்த மனப்போக்கின் இன்றைய தொடர்ச்சியான வெளிப்பாடுகளே 1983 இலும், அதற்கு முன்னும் பின்னுமாக அடிக்கடி இடம்பெற்ற தமிழினப் படுகொலைகளும், ராஜபக்ச சகோதரர்கள் தலைமையில் 2009 வைகாசி மாதத்தில் உச்ச நிலை எய்திய தமிழினப் பேரழிவும் கொடுங்கொலைகளுமாகும்" என்று நீதி விசாரணையில் பேராசிரியர் சந்திரகாந்தன் தமிழினப் படுகொலையை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். மேலும் பலரது சாட்சிய விசாரணைகளையடுத்து சிங்கள தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற நீதியரசர் தள்ளுபடி செய்தார்.

இனஅழிப்பு என்பதன் உள்ளடக்கத்தில் மனித குலத்துக்கு எதிரான யுத்தம், இனரீதியான தாக்குதல், போர்க்குற்றம் என்பவைகளை ஐக்கிய நாடுகள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. போர்க்குற்றவாளி என்ற அடிப்படையில் ராணுவத் தளபதியான சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது. இதனை தமிழினப் படுகொலையாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையாகப் பார்க்கலாம். 

கடந்த செப்டம்பரில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51:1 இலக்கத் தீர்மானம் சுமார் ஐம்பது வரையான படைத்துறை அதிகாரிகளை போர்க்குற்றவாளிகளாக அடையாளம் காட்டி, உறுப்பு நாடுகள் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளதானது இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றதென்பதை சர்வதேச ரீதியில் பதிவிடும் தடத்தில் நிறுத்தியுள்ளது. 

காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், தமிழினப் படுகொலை என்பவைகளை நோக்கி சர்வதேச அளவில் பல நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகையில், ''ஸ்குயர் வண்'' என்பதுபோல எல்லாவற்றையும் மீண்டும் ஆரம்ப இடத்துக்குக் கொண்டு சென்று இல்லாதொழிக்கும் முயற்சிகளை ரணில் அரசு மேற்கொள்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது. இவ்விடயம், ஒன்றுபடாது பிளவுபட்டு நிற்கும் தமிழ்த் தலைமைகளுக்கு சமர்ப்பணம்.  


No comments