சிங்கள தலைவர்கள் தலைமையில் தமிழர் ஒரு மேசையில்!



யாழில் இன்று  "சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே" எனும் தலைப்பில்

நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் கட்சித் தலைவர்கள் ஒரே மேசையில் அருகில் அருகில் அமர்ந்து தமது நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியது போல் தமிழர்களின் அரசியல் தீர்விலும் ஒன்றிணைவார்களா? என்ற கேள்வி கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களிடம் எழுந்தது.

பாராளுமன்றில் ஒன்றாக இருந்துவிட்டு வருவது போல் இந்த கலந்துரையாடலுக்கு தலைமை தாங்க முன்னாள் சபாநாயகர்  கருஜயசூரியா வந்ததனால் ஒன்றாக இருந்தார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.

இந்த கலந்துரையாடலில் தமிழ் மக்களின் சுயநிர்ணயம், சர்வதேச நீதி விசாரணை என்பனவற்றை வலியுறுத்தி P2P மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான தவத்திரு வேலன் சுவாமிகள் நிகழ்த்திய உரை கவனத்தை ஈர்த்திருந்தது.

தமிழினத்தின் தலைவிதியை தமிழரே தீர்மானிக்க வேண்டும்.

1505ம் ஆண்டு இலங்கை தீவு யாழ்ப்பாண இராசதானி, கண்டி இராசதானி, கோட்டை இராசதானி என மூன்று இராசதானிகளாக ஆளப்பட்டு கொண்டிருந்தது. தற்போதைய வடக்கு, கிழக்கு, வடமேற்கு மாகாணங்கள் உள்ளடங்கலான பெருவாரியான தமிழர் வாழ் நிலப்பரப்பு யாழ்ப்பாண இராசதானியின் ஆளுகையின் கீழ் இருந்தது. தமிழினம் தம்மை தாமே ஆளும், தமது தலை விதியை தாமே தீர்மானிக்கும் இனமாகவேயே வாழ்ந்து வந்தது.

போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பை தொடர்ந்து, ஒல்லாந்தரின் ஆக்கிரமிப்பின் போதும், தமிழர் தாயகம் தனி நிர்வாக அலகாகவே பரிபாலிக்கப்பட்டது. ஆங்கிலேயர் முழுத்தீவினையும் ஆக்கிரமித்த போது தான், தமிழரின் அரசு சிங்கள அரசுகளுடன் இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக மாற்றினர். அதன் பின்னர் இத்தீவை விட்டு வெளியேறும் போதும் எமது இறைமையையும் சேர்த்து சிங்கள அதிகாரத்திடமே கையளித்து சென்றனர். பறங்கியரிடமும் ஆங்கிலேயர்களிடமும் இழந்த எமது இறைமையானது எமது விருப்பம் அறியப்படாமலேயே சிங்கள தேசத்திடம் அடகு வைக்கப்பட்டது. 

1948 தொடக்கம் அதிகாரத்தை பகிர்ந்து சமத்துவமாக ஒன்றிணைந்து வாழ நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சிங்கள பேரினவாதத்தின் கொடுங்கரங்களினால் அடக்கப்பட்டது. எம்மால் முன்வைக்கப்பட்ட சமஷ்டி கோரிக்கை புறக்கணிப்பட்டது. சிங்கள தலைவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தம் உட்பட பல்வேறு ஒப்பந்தங்களும் கிழித்து எறியப்பட்டன. சாத்வீகமான சத்தியாகிரகங்கள் தடியடிகளாலும், காவல்துறையின் கொடூர தாக்குதல்களாலும் ஒடுக்கப்பட்டன. அதே சமயத்தில் 1956 இல் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தினால் எமது மொழி உரிமையை பறித்ததுடன், அதேகால பகுதியில் கொண்டுவரப்பட்ட கல்லோயா திட்டத்தினூடாக எமது நிலங்களை பறிப்பதற்கான திட்டம் முடக்கி விடப்பட்டது. 1971ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தரப்படுத்தல் சட்டத்தினூடாக எமது கல்வி உரிமையும் பறிக்கப்பட்டது. இவ்வாறான தொடரான அடக்குமுறையை எதிர்கொண்ட நாம் நீண்ட நெடிய அரசியல் போராட்டத்தின் பின், எவ்வித தீர்வையும் சிங்களத்தேசத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்பதை உணர்ந்த எமது அரசியல் தலைவர்கள் 1976ம் ஆண்டு வட்டுக்கோட்டை   தீர்மானத்தினூடாக எமக்கான சுதந்திர தேசத்தினை முன்மொழிந்தார்கள். முன்மொழிவினை 1977ம் ஆண்டில் நடந்த பொது தேர்தலினை சர்வஜன வாக்கெடுப்பாக பாவித்து தமிழ் மக்கள் சுதந்திர தேசத்திற்கான ஏகோபித்த ஆணையை வழங்கியிருந்தனர். அப்போதே தமிழ் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து, மனப்பூர்வமாக பிரிந்திருந்தால் இன்று இத்தீவில் தெற்காசியாவிலேயே மிக வளம் மிக்க இரு நாடுகள் இருந்திருக்கும். ஆனால் சிங்கள ஆதிக்க மனப்பான்மை அதற்கு இடம்கொடாது தமிழ் இனத்தை தொடர்ந்து ஒடுக்குவதிலேயே குறியாக இருந்தது. 1956, 1977 என்று தொடராக தமிழ் மக்களின் மீது ஏவி விடப்பட்ட இனவன்முறை 1983 இல் எமது இனத்தின் மீது கோரத்தாண்டவம் ஆடியது. தமிழின அழிப்பையே ஒரே நோக்கமாக கொண்டு நன்கு திட்டமிட்டே இவ் இனவன்முறைகள் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. 

இவ்வாறு தொடராக அடக்குமுறைக்கு உள்ளான நாம், எமது இனத்தை காக்க, பாதுகாப்பு வேலியினை நாமே உருவாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். இதன் மூலமாகவேதான் நாம் எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடிந்தது. எமது இறைமையை மீட்டெடுக்க முடிந்தது. எமது மொழியை, எமது கலாசாரங்களை, எமது நிலங்களை பாதுகாக்க முடிந்தது. ஆனால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள அதிகார வர்க்கம், சர்வதேச மத்தியத்துடன் நாம் முன்வைத்த சமாதான முன்னெடுப்பை கிழித்தெறிந்து, எமது விடுதலை பயணத்தை பயங்கரவாதமாக உலகெங்கும் சித்தரித்து, 30 இற்கும் மேற்பட்ட நாடுகளின் துணைகொண்டு அழித்தது. 2009ம் ஆண்டு மேற்கொண்ட ஆக்கிரமிப்பு  யுத்தத்தின் மூலம் கடைசி ஆறு மாதத்தில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இதில் 29ற்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் சிறுவர்களும் அடங்குவர். தமிழினத்தின் பெருமளவிலான உயிர் அழிவு, சொத்தழிவின் பின்னரும் தமிழினம் தொடர்ந்தும் அடிமை படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. எமது மரபுவழி தாயகத்தை சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுடன், நாம் ஒரு திறந்த வெளி சிறைச்சாலையிலேயே வாழ்ந்து வருகின்றோம். நாம் ஓர் இயல்பான வாழ்க்கை வாழ்வதற்கோ, எமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்துவதற்கோ வழியின்றி தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றோம். எமது மரபுவழி தாயக நிலம் தொடர்ச்சியான சிங்கள பெளத்த மயமாக்கப்பட்டு எமது நிலங்கள் தொடர்ச்சியாகவே அபகரிக்கப்பட்டு வருகின்றன. பெளத்தர்களே இல்லாத எங்களின் தாயகம் எங்கும் பெளத்த விகாரைகள் அமைக்கப்பட்டு தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலை மாற்றியமைக்க கடுமையான முனைப்புகள்  மேற்கொள்ளப்படுகின்றன. தொல்லியல் திணைக்களம் எனும் போர்வையில் எமது பாரம்பரிய சைவ ஆலயங்களான குறுந்தூர்மலை, வெடுக்குநாறி மலை உள்ளிட்ட 200க்கு மேற்ப்பட்ட ஆலயங்களை பெளத்த விகாரைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக நடக்கின்றன. யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த பின்பும் பெருமளவிலான இராணுவம் தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கின்றது. 13 ஆண்டுகள் கடந்த பின்னும் இராணுவத்திடம் கையளித்து விட்டு தமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எவ்வித பதில்களுமின்றி காலங்கள் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சிறைகளில் அரசியல் கைதிகளாக வாடும் எமது உறவுகள் ஒவ்வொரு நாளும் தமது வாழ்க்கையை கரைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவ்வாறாக தமிழர்களின் வாழ்வதற்கான அடிப்படை உரிமையைக்கூட பறிப்பதில் தீவிரமாக உள்ள சிங்களதேசம் எவ்வாறு சுபீட்சமான தேசத்திக்கான நல்லிணக்க பாதையை கண்டறிய முடியும். தமிழினத்தை சிங்கள மேலாதிக்க சிந்தனையில் அழித்துவிட துடிக்கும் போது இவ்வாறு எம்மால் கூடி வாழ முடியும்? இவ்வளவு நாளும் போரில் தமிழரை வென்று விட்டோம் என வெற்றி விழா கொண்டாடிய நீங்கள் இன்று தெற்கில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியாலேயே தமிழர்களை தேடி வந்துள்ளீர்கள். இந்த போலியான நல்லிணக்க முயற்சியை தமிழ் மக்களாகிய நாம் நம்பவில்லை. அதனை பதிவு செய்யவே இன்று இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். 70 வருடங்களிற்கும் மேலான எமது அரசியல் பட்டறிவில் நாம் கண்டு கொண்ட பாடம்.           

எந்தவித நல்லிணக்க முயற்சிகளுக்கு முன்பு, தமிழர் தாயகத்தில் இயல்பு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். எமது தாயகத்தை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவம் அகற்றப்பட வேண்டும். எமது நிலங்களை கையகப்படுத்தும், சிங்கள பெளத்தமயமாக்கல் நிறுத்தப்பட்டு காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் எமது உறவுகள் உடனடியாக எவ்வித நிபந்தனைகளுமின்றி விடுதலை செய்யப்படவேண்டும். சிங்கள தேசத்தின் நீதி பொறிமுறையில் நாம் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டோம். காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட எமது உறவுகளுக்காக சர்வதேச நீதியை நாடி நிற்கின்றோம். அதற்கு உதவாவிட்டாலும் இடையூறு செய்யாமல் இருங்கள்.                    

உண்மையாகவே சிங்கள தேசம் அமைதியினை இத்தீவில் விரும்பினால், முதலில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர் தாயகம் என்பதனையும், தமிழர் ஓர் தேசிய இனம் என்பதனையும் ஏற்றுக்கொள்ளுங்கள். இதன்வழி தமிழருக்கு தமது தலைவிதியை தீர்மானிக்கும் சுயநிர்ணயம் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். சர்வதேசத்தினால் நடாத்தி கண்காணிக்கப்படும் சர்வஜன வாக்கெடுப்பினூடாக வடக்கு கிழக்கை பூர்வீகமாக கொண்ட எமது மக்களை தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்க வழிவிடுங்கள். இதன் மூலமே இந்த இலங்கை தீவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியும். இதனை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் சார்பாக, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி ஊடாக மக்கள் வழங்கிய ஆணையின் வழியாக இவ்விடத்தில் அறுதியிட்டு கூற விரும்புகின்றேன். இதனை தாண்டி இத்தீவில் அமைதியை ஏற்படுத்த வேறு எந்த மார்க்கமும் இல்லை.       

இன்று இவ்விடத்தில் எம் மக்களின் உரிமை குரலை வெளிப்படுத்துவதற்காக நாளை நானும் கூட விசாரிக்கப்படலாம், அச்சுறுத்தப்படலாம், ஏன் உயிர் ஆபத்தை கூட எதிர்கொள்ளலாம். ஆனாலும் எமது உரிமை குரலை அடக்க முடியாது. ஆண்ட இனம் நாம். எமது ஆட்சி உரிமையை யாரும் பறிக்க முடியாது என்றார்

No comments