வந்தான் வரத்தானிடம் அடிவாங்கும் முல்லை! இலங்கையின் கையாலாகாத கடற்றொழில் அமைச்சர் தமிழர் தாயக கடலை விற்பனை செய்துவருவதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டிவருகின்ற நிலையில் முல்லைத்தீவில் உள்ளுர் மீனவர்கள் தென்னிலங்கை ஆக்கிரமிப்பு மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டதையடுத்து கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகத்தை கடந்த 03ம் திகதி முதல் உள்ளுர் மீனவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

அவர்களது போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 மீனவ சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடற்றொழில் திணைக்கள் அதிகாரிகளை இடமாற்றவேண்டாமென கொக்கிளாய் மற்றும் மாத்தளன் பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தென்னிலங்கையை சேர்ந்த மீனவர்கள் சுமார் முந்நூறு பேரளவில் முல்லைத்தீவு பேருந்து நிலையம் அருகே காலை பதினொரு மணியளவில் தாமும் போராட்டமொன்றை ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் உள்ளுர் மற்றும் தென்னிலங்கை மீனவர்கள் இடையே முரண்பாடுகள் ஏற்படலாம் என்ற நிலையில் வீதித்தடை காவல்துறையால் அமைக்கப்பட்டது.

தென்னிலங்கை போராட்டக்காரர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி செல்லாத வகையில், முல்லைத்தீவு இலங்கை வங்கிக்கு முன்பாக காவல்துறையினர் ஒரு வீதித்தடையும், தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மீனவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி வரமுடியாத வகையில் மற்றுமொரு வீதித் தடையையும் ஏற்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில் இரு தரப்பு மீனவர்களும் வீதி தடைகளை உடைத்து முன்னேற முற்பட்ட நிலையில்; நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் இலங்கை காவல்துறையால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


No comments