அரசியல் கைதிகள் விடுதலைக்கு காலக்கெடு!தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான காலக்கெடு ஒன்றை தீர்மானிக்கவேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பு இலங்கை நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக  நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (30) விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சரை, அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்தித்தனர். 

முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சீ.வி.விக்கினேஸ்வரன் சந்திப்பிற்கான ஏற்பாட்டை செய்திருந்தார்.

அதன் போது, நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 34 அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு நீதி அமைச்சரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன் போதே அமைச்சர், அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின்  வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

எனினும் தீபாவளி,தைப்பொங்கல்  என விடுவிப்பதை விடுத்து அனைத்து அரசியல் கைதிகளதும் விடுதலை தொடர்பில் காலக்கெடுவொன்றை அரசு வழங்க வேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments