வடக்கு மாகாணசபை:சுகாதார துறைக்கு கொடுப்பனவு வெட்டு!
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், தாதியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதாரப் பணியாளர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு பெருமளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உரிய ஆளணி இல்லாத நிலையில், பணியாளர்கள் மேலதிக நேரக் கடமைகளின் ஊடாகவே மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்து வந்த நிலையில், மேலதிக நேரக் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளமையால், மருத்துவமனைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளர்கள் நேரடியாக அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாண பிரதம செயலரால், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சில தினங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கதிரியக்கப்படப்பிடிப்பாளர்கள், மருந்தாளர்கள், ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள், சுகாதார சிற்றூழியர்கள் ஆகிய 4 தரப்பினருக்குமான மேலதிக நேரக் கொடுப்பனவே பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

இந்த 4 பணியாள் தொகுதிக்கும் உரிய ஆளணி வெற்றிடங்கள் மருத்துவமனைகளில் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனால் அங்குள்ள பணியாளர்களே, தமது மேலதிக நேரத்தின் ஊடாக கடமைபுரிந்து நோயாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுகின்றனர்.

கடந்த மே மாதமே, மேலதிக கொடுப்பனவு மட்டுப்படுத்தப்படும் என்று வடக்கு மாகாண பிரதம செயலரால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அந்த அறிவிப்பு மீளப்பெறப்பட்டு வழமைபோன்று தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் இப்போது வரையில் பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், மே மாதத்தின் பின்னரான காலப் பகுதிக்குரிய மேலதிக நேரக் கொடுப்பனவு பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அவர்கள் கேள்வியெழுப்பியிருந்த நிலையிலேயே சில தினங்களுக்கு முன்னர், மேற்படி கடிதம் பிரதம செயலரால் மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி இந்தக் கொடுப்பனவுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய மாகாணங்களில் இவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படாதபோதும், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் இவ்வாறான செயற்பாடு பின்பற்றப்பட்டுள்ளது.

இந்த மேலதிக நேரக் கொடுப்பனவு மட்டுப்படுத்தல் காரணமாக நோயாளர்களே நேரடியாகப் பாதிப்புக்களை எதிர்கொள்ளவுள்ளனர்.

கதிரியக்கப்படப்பிடிப்பாளர் (எக்ஸ்ரே எடுப்பவர்) மருத்துவமனையில் ஒருவர் பணியாற்றினால் அவருக்குரிய கடமை நேரமான காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரையே பணிபுரிவார். அதேபோன்று வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களிலும் அவர் பணிபுரிய மாட்டார். ஏனெனில், அவருக்கு மாதாந்தம் 5 விடுமுறை நாள் கொடுப்பனவு மாத்திரமே தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாதாரண எக்ஸ்ரே எடுப்பதற்கே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


இதேபோன்றே ஏனைய பணியாளர்களது கடமைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் ‘சட்டப்படி’ வேலையை ஆரம்பிக்கவுள்ளனர் எனத் தெரியவருகின்றது. இதனால் நோயாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளவுள்ளனர்.


மேலும், மாகாண மருத்துவமனைகளுக்கு அம்புலன்ஸ்களுக்குரிய எரிபொருள் கொடுப்பனவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு எரிபொருள் விலையை விட தற்போது எரிபொருள் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. ஆனாலும், மருத்துவமனைகளின் அம்புலன்ஸ்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்படாமல், அதன் சேவையை மூன்றில் ஒன்றாகக் குறைக்குமாறு வாய்மூல அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மருத்துவமனை அம்புலன்ஸ்களின் மூன்றாம் காலாண்டுக்கான எரிபொருள் கொடுப்பனவுகள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு செலுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments